Silver Price : தங்கத்திற்கு ஈடு கொடுக்கும் வெள்ளி.. 13 ஆண்டுகளில் இல்லாத அளவு விலை உயர்வு!

Silver Price Surge | உலக அளவில் தங்கம் மட்டுமன்றி வெள்ளியும் விலை உயர்ந்து வருகிறது. குறிப்பாக தங்கம் எந்த அளவுக்கு விலை உயர்வை அடைந்துள்ளதோ அதே அளவுக்கு வெள்ளியும் விலை உயர்வை பெற்றுள்ளது. இந்த நிலையில், வெள்ளி முதலீட்டாளர்களின் பாதுகாப்பான முதலீடாக மாறியுள்ளதாக வேதாந்தா சேர்மன் தெரிவித்துள்ளார்.

Silver Price : தங்கத்திற்கு ஈடு கொடுக்கும் வெள்ளி.. 13 ஆண்டுகளில் இல்லாத அளவு விலை உயர்வு!

மாதிரி புகைப்படம்

Updated On: 

20 Jun 2025 17:39 PM

உலகம் முழுவதும் தங்கம் வேகமாக விலை உயருவதில் கவனத்தை செலுத்தி வரும் நிலையில், சத்தமே இல்லாமல் வெள்ளி விலை உயர்த்துக்கொண்டே வருகிறது. கடந்த சில மாதங்களில் மட்டும் வெள்ளி விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இன்றைய (ஜூன் 20, 2025) நிலவரத்தின் படி ஒரு கிராம் வெள்ளி ரூ.120-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,20,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இது கடந்த ஆண்டுகளில் இல்லாத புதிய உச்சமாக உள்ளது. இந்த நிலையில், நிச்சயமற்ற உலக சூழல், தங்கத்தின் அபார விலை உயர்வு காரணமாக முதலீட்டாளர்களின் பாதுகாப்பான முதலீடாக வெள்ளி மாறியுள்ளதாக வேதாந்தா சேர்மன் அனில் அகர்வால் தெரிவித்துள்ளார்.

முதலீட்டாளர்களின் பாதுகாப்பான முதலீடாக மாறிய வெள்ளி

கடந்த காலங்களில் அமெரிக்கா டாலரும், தங்கமும் முதலீட்டாளர்களுக்கு சிறந்த முதலீடாக இருந்தன. ஆனால் தற்போது நிலவும் நிச்சயமற்ற உலக சூழலில் டாலர் பாதுகாப்பற்ற முதலீடாக உள்ளது. இதேபோல தங்கம் விலையும் கடுமையாக உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பான முதலீடாக வெள்ளி மாறியுள்ளது என்று வேதாந்தா சேர்மன் அனில் அகர்வால் கூறியுள்ளார்.

13 ஆண்டுகளில் இல்லாத அளவு உயர்வை சந்தித்த வெள்ளி விலை

வெள்ளி விலை உயர்வு குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அனில் அகர்வால், கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளி விலை உயர்ந்துள்ளதாக கூறியுள்ளார். இதற்கு, வெள்ளியின் பயன்பாடே முக்கிய காரணம் என்று அவர் கூறியுள்ளார். குறிப்பாக சோலார் பேனல்கள் (Solar Panels), ஆட்டோமொபைல் (Automobile) மற்றும் ஏரோஸ்பேஸ் (Aerospace) உள்ளிட்டவற்றில் வெள்ளி அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இந்த துறைகளின் தேவையும் அதிகரித்துள்ளதால் வெள்ளியும் தங்கத்திற்கு ஈடாக விலையேற்றம் பெற்று வருகிறது என்று கூறியுள்ளார்.