ஓட்டுநரின் மீது தவறு இருந்தால் இழப்பீடு கிடையாது – உச்சநீதிமன்றம் அதிரடி – எந்த காரணங்களுக்கு கிடைக்காது?
SC on Insurance Claims : சாலை விபத்துகள் ஏற்படும்போது, அதற்கு ஓட்டுநரின் தவறே காரணமென நிரூபிக்கப்பட்டால், அவரது குடும்பத்துக்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இழப்பீடு வழங்க தேவையில்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. எந்த காரணங்களுக்கு இழப்பீடு கிடைக்காது என்பது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

வாகன ஓட்டும் போது, ஓட்டுநரின் தவறுகள் காரணமாக ஏற்படும் விபத்தில் அவர் உயிரிழந்தால், இன்சூரன்ஸ் (Insurance) நிறுவனங்கள் கட்டாயமாக இழப்பீடு வழங்க வேண்டிய அவசியமில்லை என உச்ச நீதிமன்றம் (Supreme Court) முக்கிய தீர்ப்பொன்றை வழங்கியுள்ளது. கடந்த ஜூலை 3, 2025 அன்று வெளியான இந்த தீர்ப்பில், ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டு, அதன் காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டிருந்தால், அவரது குடும்பத்தினர் இன்சூரன்ஸ் நிறுவனத்திலிருந்து இழப்பீடு பெற முடியாது என தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் நிகழ்ந்த விபத்துடன் தொடர்புடைய வழக்கில், ரூ.80 லட்சம் ரூபாய் இழப்பீடு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரித்த கர்நாடக (Karnataka) உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை, நீதிபதிகள் பி.எஸ். நரசிம்ஹா மற்றும் ஆர். மகாதேவன் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு உறுதி செய்தது.
இது குறத்து, “உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மாற்ற தேவையில்லை. எனவே, இந்த சிறப்பு அனுமதி மனு தள்ளுபடி செய்யப்படுகிறது,” என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது. இது வாகன ஓட்டிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டினால் காப்பீடு கிடையாது
கவர்சூர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சௌரப் விஜய்வெர்கியா கூறும் போது, “இன்ஷூரன்ஸ் என்பது பாதுகாப்புக்கான கருவி மட்டுமே. அது தவறான செயல் அல்லது கவனக்குறைவாக வாகனம் ஓட்டுபவர்களை ஒருபோதும் பாதுகாக்காது. குறிப்பாக செல்லுபடியாகாத ஓட்டுநர் உரிமம், போதை மருந்து அல்லது மதுபானம் அருந்திய நிலையில் ஓட்டுதல், காலாவதியான காப்பீடு, வாகனத்தில் அனுமதிக்கப்படாத மாற்றங்கள் போன்றவையும் இழப்பீட்டைத் தவிர்க்கும் காரணிகளில் அடங்கும் என்றார்.




தவறு யார் பக்கம் இருக்கிறது என்பதைப் பொறுத்தே இழப்பீடு கிடைக்கும்
இன்கா இன்சூரன்ஸ் (Inka Insurance) நிறுவனத்தின் தலைவர் வைபவ் கத்துஜூ இந்த வழக்கு குறித்து தெரிவித்ததாவது, “முன்னதாக பல விபத்துகளின் போது, யார் பக்கம் தவறு என்பதைக் கணிக்காமல் காப்பீடு வழங்கப்பட்டுவந்தது. ஆனால் இப்போது, தவறு ஓட்டுநரிடமிருந்தால் இன்சூரன்ஸ் நிறுவனம், இழப்பீடு வழங்க வேண்டியதில்லை என்பதே உச்சநீதிமன்றத்தின் தெளிவாக தீர்ப்பு அளித்துள்ளது. அதனால் எதிர்காலத்தில், உயிரிழப்புகளுக்கு இழப்பீடு பெற விரும்பும் குடும்பங்கள் எஃப்ஐஆர், லைசென்ஸ் போன்ற முக்கிய ஆவணங்கள், மற்றும் வாகன உரிமத்துக்கான சான்று ஆகியவற்றை சமர்பிக்க வேண்டியிருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எந்த காரணங்களுக்காக இழப்பீடு கிடைக்காது?
-
போதைப் பொருள் அல்லது மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுதல்
-
செல்லுபடியாகாத ஓட்டுநர் உரிமம்
-
வாகனத்தை அனுமதிக்கப்படாத வணிக நோக்கத்திற்குப் பயன்படுத்துதல்
-
விபத்து ஏற்படுவதற்கு முன்பு இருந்த வாகன கோளாறுகள்
“காப்பீட்டு நிறுவனங்களுடன் பிரச்னை வராமல் இருக்க, ஒவ்வொரு விதிமுறையையும் சரியாக புரிந்துகொள்வது அவசியம். இது இழப்பீடு கிடைப்பதற்கு மட்டும் உதவக்கூடியது அல்ல. நம்மை விபத்தில் இருந்து முற்றிலும் பாதுகாக்கக் கூடியவை.