GST Reforms: அமலுக்கு வந்த ஜிஎஸ்டி வரி மாற்றம்.. விலை குறைந்த பொருட்கள்!
இந்தியாவில் புதிய GST சீர்திருத்தம் அமலுக்கு வந்துள்ளது. 12% மற்றும் 28% வரி விகிதங்கள் நீக்கப்பட்டு, பல பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பால், ரொட்டி, மருந்துகள் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் வரி விலக்களிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பொருளாதார சுமை குறையும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி சீர்திருத்தம்
இந்தியா, செப்டம்பர் 22: நாடு முழுவதும் புதிதாக அறிவிக்கப்பட்ட ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் இன்று (செப்டம்பர் 22) முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால் பொதுமக்கள் சற்று நிம்மதிடையந்துள்ளனர். 2014 ஆம் ஆண்டு மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான முதல் பாஜக ஆட்சி அமைந்தது. இதனைத் தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு பொருளாதாரத்தை உயர்த்துவது தொடர்பான நடவடிக்கையில் சரக்கு மற்றும் சேவை வரி என்ற முறை அறிமுகம் செய்யப்பட்டது. அதன்படி மத்திய மற்றும் மாநில அரசுகள் அமலில் வைத்திருந்த மறைமுக வரி நீக்கப்பட்டு நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்பு முறை கொண்டு வரப்பட்டது. ஜிஎஸ்டி என சுருக்கமான அழைக்கப்பட்டு வந்த இந்த வரியானது ஒவ்வொரு பொருளின் தயாரிப்பு மற்றும் சேவையை பொறுத்து வேறுபடுத்தப்பட்டு அமலில் இருந்து வந்தது. இந்த நிலையில் 2025, ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தின உரையாற்றிய பிரதமர் மோடி, ஜிஎஸ்டி சீர்திருத்தம் கொண்டு வரப்படுவதாக அறிவித்தார்.
அமலுக்கு வந்த சீர்திருத்தம்
இதனைத் தொடர்ந்து செப்டம்பர் முதல் வாரம் நடைபெற்ற நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான கூட்டத்தில் ஜிஎஸ்டி வரிமாற்றம் பற்றி முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. தொடர்ந்து ஜிஎஸ்டி சீர்திருத்தம் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு 2025, செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அது தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக 5%, 12%, 18%, 28% என வரி விகிதம் இருந்தது.
Also Read: GST 2.0 : டூத் பேஸ்ட் முதல் கார் வரை.. அதிரடியாக குறைந்த ஜிஎஸ்டி.. விலையும் குறையும்!
ஆனால் தற்போது 12% மற்றும் 28% ஆகிய வரி விகிதங்கள் நீக்கப்பட்டுள்ளது. பல பொருட்களுக்கு வரி விலக்கு, வரி குறைப்பு ஆகியவையும் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் தொடங்கி, எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோ மொபைல்ஸ் என பல துறைகளிலும் ஜிஎஸ்டி சீர்திருத்தம் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப்போகிறது.
விலை குறையும் பொருட்கள்
இதன் மூலம் மில்லியன் கணக்கான இந்தியர்களின் அன்றாட பொருளாதாரச் சுமைகள் சற்றுக் குறையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய முறையில் பால் மற்றும் ரொட்டி, ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீடு மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் போன்ற முக்கிய பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் சிறிய கார்கள், டிவி மற்றும் ஏர் கண்டிஷனர்கள் மீதான நுகர்வு வரி 28%லிருந்து 18% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் முடிக்கான எண்ணெய், சோப்பு மற்றும் ஷாம்பு போன்ற பிற பொதுவான பொருட்களுக்கு 12% அல்லது 18% க்கு பதிலாக 5% என்ற குறைந்தபட்ச வரி விதிக்கப்பட்டுள்ளது.
Also Read: பால் முதல் புற்றுநோய் மருத்து வரை.. இந்த பொருட்களுக்கு இனி ஜிஎஸ்டி இல்லை.. பட்டியல் இதோ!
புதிய ஜிஎஸ்டி வரி விதிப்பால் ஒரு பொருளுக்கான அடக்க விலையில் எந்த மாற்றமும் இருக்காது என்றும், வரி விதிப்பில் பெரும் சேமிப்பு இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது மக்களை வாங்கும் பண்பை அதிகரிக்க வைக்கவும், உள்நாட்டு பொருளாதாராத்தை பெருக்கவும் அடிப்படையாக அமையும் என சொல்லப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி சீர்திருத்தம் அமலுக்கு வருவதை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி செப்டம்பர் 21 ஆம் தேதியான நேற்று உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.