கிரெடிட் ஸ்கோர் கம்மியா இருக்கா? இந்த 3 பிரச்னைகள் ஏற்படலாம்!
Low Credit Score Impact : கிரெடிட் ஸ்கோர் 600க்கும் குறைவாக இருந்தால், கடன் பெற முடியாதது மட்டுமல்ல , உயர் வட்டி வீதங்கள், வேலைவாய்ப்பு தடைகள், வாடகை வீடு மறுக்கப்படுவது என பல பாதிப்புகளையும் சந்திக்க நேரிடும். உங்கள் பொருளாதார நிலையை எவ்வாறு பாதிக்கும் என்பதை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
இந்தியாவில் (India) 600க்கு கீழ் கிரெடிட் ஸ்கோர் (Credit Score) வைத்திருப்பது மோசமானதாக பார்க்கப்படுகிறது. குறைவான கிரெடிட் ஸ்கோர் வைத்திருப்பவர்களுக்கு கடன் (Loan) கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. ஆனால், இதைத் தவிரவும், சில மறைமுகமான ஆனால் மிக முக்கியமான பாதிப்புகளும் உங்களை எதிர்கொள்கின்றன. குறைவான கிரெடிட் ஸ்கோர் வைத்திருப்பது கடன் பெறுவதை மட்டும் பாதிப்பதில்லை, உங்கள் வாழ்க்கை முன்னேற்றத்தையும், வேலைவாய்ப்புகளையும், பெரு நகரங்களில் வீடு வாடகைக்கு பெறும் வாய்ப்புகளையும் பாதிக்கக்கூடியது.
குறைவான கிரெடிட் ஸ்கோரால் நின்ற திருமணம்
சமீபத்தில் மஹாராஷ்டிராவில் மணமகன் குறைவான கிரெடிட் ஸ்கோர் வைத்திருந்ததன் காரணமாக திருமணமே நின்றிருக்கிறது. மணமகளின் உறவினர் வங்கியில் வேலை செய்திருக்கிறார். இந்த நிலையில் மணமகனின் கிரெடிட் ஸ்கோர் விவரங்களை வாங்கி பார்த்தபோது அவருக்கு ஏகப்பட்ட கடன் இருப்பது தெரியவந்திருக்கிறது. மணமகன் நிறைய ஊதியம் பெற்றாலும் அவருக்கு அதிக கடன் இருப்பதால் அவருக்கு மாதத் தவணை செலுத்துவதற்கே அவை சரியாக இருக்கும். இதனையடுத்து அந்த பெண் திருமணத்தை நிறுத்தியிருக்கிறார்.
ஏஐ மூலம் கிரெடிட் ஸ்கோர் ஆய்வு
இந்தியாவில் 600-க்கு கீழான கிரெடிட் ஸ்கோர் வைத்திருப்பவர்கள் பெரும்பாலும் கிரெடிட் கார்டு, பெர்சனல் லோன், ஓவர்டிராஃப்ட் வசதி போன்ற அடிப்படை பொருளாதார வசதிகளை பெற முடியாமல் சிக்கலில் தவிக்கின்றனர். இப்போது பெரும்பாலான பைனான்ஸ் நிறுவனங்கள், ஏஐ அடிப்படையில் கிரெடிட் ஸ்கோரை ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளன. இதனால் குறைந்த ஸ்கோர் கொண்டவர்களுக்கு கடன் அளிக்க மிகுந்த கடுமையான பரிசீலனை நடத்தப்படுகின்றது. இதனால் மருத்துவ அவசரம், கல்விக்கான செலவுகள், தொழில் விரிவாக்கம் போன்றவை கட்டாயமாக நிதி ஆதரவு தேவைப்படும் நேரத்தில், நெருக்கடிக்குள்ளாகும் சாத்தியம் அதிகம்.
கூடுதல் வட்டி விகிதம்
ஹோம் லோன், பெர்சனல் லோன் என எந்த வகையிலான கடன் பெற முயன்றாலும் கிஉங்களின் கிரெடிட் ஸ்கோர் குறைவாக இருந்தால், அந்த கடன் அதிக வட்டி விகிதத்தில் தான் கிடைக்கும். மேலும் அதிகமான மாதத் தவணையும் கட்ட வேண்டியிருக்கும். கடன் திருப்பி செலுத்த வேண்டிய காலம் குறைவாக இருக்கும். இதனால் நிதிச் சுமை அதிகமாகி, உங்கள் மாத வருமானத்தின் பெரும்பகுதியும் கடனுக்கே செலவாகும் நிலை உருவாகலாம்.
வேலைவாய்ப்பு, வீடு வாடகை போன்ற சவால்கள்
கிரெடிட் ஸ்கோர் குறைவானால் வீடு வாடகை போன்றவற்றில் சிக்கல் ஏற்படும். இதுகுறித்து அதிகம் பேசப்படுவதில்லை. ஆனால், வங்கி, நிிதி நிறுவனங்கள், இன்சூரன்ஸ் ஆகிய துறைகளில் வேலை தேடுபவர்கள் அல்லது சென்னை, பெங்களூரு போன்ற மெட்ரோ நகரங்களில் வாடகை வீடு தேடுபவர்கள் குறைவா கிரெடிட் ஸ்கோரால் எதிர்மறையான விமர்சனங்களை சந்திக்க நேரிடும். நிறுவனங்கள், பணியாளர்களின் விவரங்களை சரிபார்க்கும்போது கிரெடிட் ரிப்போர்ட்டை பார்க்கின்றன. வீடு வாடகைக்கு கொடுப்பவர்களும் வாடகை செலுத்தும் பழக்கத்தை மதிப்பீடு செய்வதற்காக கிரெடிட் ரிப்போர்ட் கேட்கின்றனர்.