எயிட்ஸ் நோயால் திருமணம் செய்ய மறுத்த காதலி.. காதலன் செய்த கொடூரம்!
Young Man Injects His HIV Positive Blood to His Girlfriend | தெலங்கானாவில் இளைஞர் ஒருவருக்கு எயிட்ஸ் பாதிப்பு இருந்த நிலையில், அவரை அவரது காதலி திருமணம் செய்ய மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர் காதலிக்கு கொடூரத்தை நிகழ்த்தியுள்ளார்.

மாதிரி புகைப்படம்
திருப்பதி, மார்ச் 15 : தெலங்கானா (Telangana) மாநிலம், மேட்சல் மாவட்டம், போச்சாரம் பகுதியை சேர்ந்தவர் 25 வயதான மனோகர். இவர் தனியார் போக்குவரத்து நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்துள்ளார். இவரது பெற்றோருக்கு எயிட்ஸ் நோய் பாதிப்பு இருந்துள்ளது. இதன் காரணமாக அவரது தந்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். பெற்றோருக்கு எயிட்ஸ் பாதிப்பு உள்ளதை போலவே மனோகருக்கும் எயிட்ஸ் பாதிப்பு இருந்துள்ளது.
காதலனுக்கு உறுதி செய்யப்பட்ட எயிட்ஸ் பாதிப்பு
இந்த நிலையில் தான் மனோகர் அதே பகுதியில் உள்ள உறவுக்கார பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில், அவர்களது காதல் குறித்து பெற்றோருக்கு தெரிய வந்த நிலையில், ஒரு ஆண்டுக்கு முன்னதாக இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் தான் மனோகருக்கு எயிட்ஸ் நோய் இருப்பது அந்த பெண்ணின் பெற்றோருக்கு தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக அவர்கள் மனோகரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று ரத்த பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். அப்போது அவருக்கும் எயிட்ஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : இயற்கை எரிவாயு பெறும் வீடுகளுக்கு சிலிண்டர் கிடையாது… மத்திய அரசு அதிரடி உத்தரவு!
இதன் காரணமாக இளம் பெண்ணின் பெற்றோர் திருமணத்தை நிறுத்தியுள்ளனர். அதுமட்டுமன்றி, அந்த பெண்ணும் மனோகரை தவிர்த்து வந்துள்ளார். ஆனால், மனோகர் அடிக்கடி இளம் பெண்ணிடம் சென்று தன்னை திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி வந்துள்ளார். அப்போது உனக்கு எயிட்ஸ் நோய் இருந்தும் என்னை ஏன் திருமணம் செய்துக்கொள்ள வலியுறுத்துகிறாய் என்று இளம் பெண் மனோகரிடம் கேட்டுள்ளார்.
இதையும் படிங்க : காதல் தோல்வியை கிண்டல் செய்த சகோதரி.. கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞர்.. அதிர்ச்சி சம்பவம்!
இளம் பெண்ணுக்கு காதலன் செய்த கொடூரம்
காதலி தன்னை திருமணம் செய்துக்கொள்ள மறுத்த நிலையில், காதலிக்கும் எயிட்ஸ் பாதிப்பு இருந்தால் அவரை யாரும் திருமணம் செய்துக்கொள்ள மாட்டார்கள். தனக்கே திருமணம் செய்து வைப்பார்கள் என அவர் நினைத்துள்ளார். இதன் காரணமாக அவர் கடையில் ஊசி வாங்கி அதில் தனது ரத்தத்தை ஏற்றியுள்ளார். பிறகு காதலியின் வீட்டிற்கு சென்ற அவர் மீண்டும் தன்னை திருமணம் செய்துக்கொள்ளுமாறு கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுக்கவே அவருக்கு ஊசி செலுத்தியுள்ளார்.
அடுத்த நாள் அந்த பெண்ணுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அப்போது அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் உடலில் கருப்பாக காயம் இருந்தது குறித்து அந்த இளம் பெண்ணிடம் கேட்டுள்ளனர். அப்போது அந்த பெண் தனக்கு நடைபெற்ற கொடூரத்தை கூறியுள்ளார். இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.