4 ஆண்டுகளாக நீடிக்கும் போர்.. அபு தாபியில் நடக்கும் அமெரிக்கா-ரஷ்யா-உக்ரைன் மும்முனை பேச்சுவார்த்தை..
Russia - Ukraine Ceasefire: இந்த பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாக, ரஷ்ய அதிபர் வ்லாதிமிர் புதின், ட்ரம்பின் தூதர்களான ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜேரட் குஷ்னரை மாஸ்கோவில் சந்தித்தார். இந்த சந்திப்பு நேர்மறையாக இருந்ததாகவும், நிலப்பரப்பு தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் நீண்டகால சமாதானம் சாத்தியமில்லை என ரஷ்யா மீண்டும் வலியுறுத்தியதாகவும் கிரெம்லின் தெரிவித்துள்ளது.
ஜனவரி 24, 2026: அமெரிக்கா (US), ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான மும்முனை பேச்சுவார்த்தைகள் அபுதாபியில் தொடங்கியுள்ளன. மாஸ்கோ மற்றும் கீவ் இடையே கடந்த நான்கு ஆண்டுகளாக நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வருவதையே இந்த பேச்சுவார்த்தைகளின் முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது. இரண்டு நாட்கள் நடைபெற உள்ள இந்த பேச்சுவார்த்தைகள், இத்தகைய முதல் முயற்சியாகவும், ஐரோப்பாவில் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முன்மொழிந்த திட்டத்தின் அடிப்படையில் உக்ரைன் மற்றும் ரஷ்யா நேரடியாக பங்கேற்கும் முதல் சந்திப்பாகவும் அமைந்துள்ளது.
அபுதாபியில் மும்முனை பேச்சுவார்த்தை:
“அபுதாபியில் பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளன. இந்த பேச்சுகள் இரண்டு நாட்கள் நடைபெறவுள்ளன. நெருக்கடியை தீர்க்க அரசியல் தீர்வுகளை கண்டறியும் நோக்கில் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த சந்திப்புகள் நடத்தப்படுகின்றன,” என ஐக்கிய அரபு அமீரக (UAE) வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
மேலும் படிக்க: ரஷ்யா உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சி.. இரண்டு நாள் நடக்கும் முத்தரப்பு பேச்சுவார்த்தை..
உலக பொருளாதார மன்ற மாநாட்டை ஒட்டி சுவிட்சர்லாந்தின் டாவோஸில் உக்ரைன் அதிபர் வோலோதிமிர் செலென்ஸ்கியுடன் ட்ரம்ப் சந்தித்த அடுத்த நாளிலேயே இந்த பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன. ஆயிரக்கணக்கான உயிர்களை பறித்த இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என ட்ரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
புதினுடன் ட்ரம்ப் தூதர்கள் சந்திப்பு:
இந்த பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாக, ரஷ்ய அதிபர் வ்லாதிமிர் புதின், ட்ரம்பின் தூதர்களான ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜேரட் குஷ்னரை மாஸ்கோவில் சந்தித்தார். இந்த சந்திப்பு நேர்மறையாக இருந்ததாகவும், நிலப்பரப்பு தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் நீண்டகால சமாதானம் சாத்தியமில்லை என ரஷ்யா மீண்டும் வலியுறுத்தியதாகவும் கிரெம்லின் தெரிவித்துள்ளது.
போரின் போது கைப்பற்றப்பட்ட கிழக்கு டொன்பாஸ் பகுதியை விட்டு வெளியேற முடியாது என்பதே ரஷ்யாவின் நிலைப்பாடாக உள்ளது. “டொன்பாஸ் பகுதியிலிருந்து உக்ரைன் மற்றும் அதன் ஆயுதப்படைகள் வெளியேற வேண்டும் என்பதே ரஷ்யாவின் தெளிவான நிலைப்பாடு. இது மிகவும் முக்கியமான நிபந்தனை,” என கிரெம்லின் செய்தித் தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ் தெரிவித்தார்.
மேலும் படிக்க: உலகின் மிகவும் பழமையான குகை ஓவியம் இந்தோனேசியாவில் கண்டுபிடிப்பு.. 67,800 ஆண்டுகள் பழமையானது!
ரஷ்யாவின் கோரிக்கையை நிராகரித்த உக்ரைன்:
தற்போது, கிழக்கு பிராந்தியத்தின் சுமார் 20 சதவீத பகுதிகளை உக்ரைன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள நிலையில், ரஷ்யாவின் கோரிக்கையை “ஏற்க முடியாதது” என உக்ரைன் நிராகரித்துள்ளது. டொன்பாஸ் விவகாரம் முக்கியமான பிரச்சினை என்றும், பேச்சுவார்த்தைகள் “வேறு திசையில் செல்லக்கூடும்” என்றும் செலென்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முழுமையான டொன்பாஸ் அணுகல் கிடைக்காவிட்டால் பேச்சுவார்த்தைகள் தோல்வியடையும் என ரஷ்யா எச்சரித்துள்ளது. மேலும், “போர்க்களத்திலேயே எங்களது இலக்குகளை தொடர்ந்து அடைவோம்,” என்றும் ரஷ்யா தெரிவித்துள்ளது.
தற்போது ரஷ்யாவும் உக்ரைனும் பொருளாதார ரீதியாக சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றன. சர்வதேச தடைகளால் ரஷ்ய பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மேற்கத்திய நாடுகளின் உதவிகள் கிடைத்தாலும் உக்ரைன் நிதி தட்டுப்பாட்டை சந்தித்து வருகிறது.
அமெரிக்காவின் முக்கிய பங்கு:
AFP செய்தி நிறுவனத்திடம் பேசிய தகவல் வட்டாரங்களின் கூற்றுப்படி, இந்த மும்முனை பேச்சுவார்த்தைகளில் ட்ரம்ப் மற்றும் அமெரிக்காவின் பங்கு மிக முக்கியமானதாக இருக்கும்.
“அமெரிக்கர்களின் நிலைப்பாட்டின்மீதே பல விஷயங்கள் சார்ந்திருக்கும்,” என அவர்கள் தெரிவித்தனர். உக்ரைன் தாம் முன்மொழிந்த அமைதி திட்டத்தை ஏற்க வேண்டும் என ட்ரம்ப் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறார். “இப்போது அவர்கள் இருவரும் ஒன்றிணைந்து ஒரு ஒப்பந்தத்தை முடிக்கக்கூடிய நிலையில்தான் இருக்கிறார்கள். அதை செய்யவில்லை என்றால், இருவருமே முட்டாள்கள்,” என ட்ரம்ப் புதன்கிழமை தெரிவித்தார்.
இதற்கிடையில், தனது ஐரோப்பிய கூட்டாளிகளை செலென்ஸ்கி கடுமையாக விமர்சித்துள்ளார். தனது எச்சரிக்கைகள் ஒவ்வொரு ஆண்டும் மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டிய நிலை இருப்பதாகவும், அது ‘Groundhog Day’ போலவே இருப்பதாகவும் அவர் கூறினார்.
“கடந்த ஆண்டு டாவோஸில், ஐரோப்பா தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்ள தெரிந்திருக்க வேண்டும் என்று நான் சொன்னேன். ஒரு ஆண்டு கடந்துவிட்டது. ஆனால் எதுவும் மாறவில்லை. மீண்டும் அதே வார்த்தைகளை சொல்ல வேண்டிய சூழ்நிலையில்தான் நாம் இருக்கிறோம்,” என செலென்ஸ்கி டாவோஸில் தெரிவித்தார்.