ஆகஸ்ட் 12-இல் புவி ஈர்ப்பு விசை இழப்பு…மக்கள் கொத்து கொத்தாக பலியாக வாய்ப்பு?நாசா கூறுவெதென்ன!
Earth Gravity Will Lost: உலகத்தில் வரும் ஆகஸ்ட் 12- ஆம் தேதி புவி ஈர்ப்பு விசை இழக்கப்படும் என்றும், இதன் காரணமாக மில்லியன் கணக்கிலான மக்கள் கொத்து கொத்தாக உயிரிழப்பார்கள் என்றும் சமூக வலைதளங்களில் பதிவு ஒன்று வைரலாக பரவி வருகிறது.
வரும் ஆகஸ்ட் 12- ஆம் தேதி பூமி சுமார் 7 நிமிடங்கள் புவியீர்ப்பு விசையை இழக்க நேரிடும் என்றும், அந்த சமயத்தில் மில்லியன் கணக்கான மக்கள் உயிரிழக்க நேரிடும் என்றும் சமூக வலைதளங்களில் ஒரு பதிவு வைரலாக பரவி வருகிறது. அந்த பதிவில், வரும் ஆகஸ்ட் 12- ஆம் தேதி பிற்பகல் 2:33 மணிக்கு பூமியின் ஈர்ப்பு விசை 7 வினாடிகளுக்கு மறைந்து விடும். இதனால், பொதுமக்கள் காற்றில் மிதப்பார்கள், கீழே விழுவார்கள். இதன் காரணமாக சுமார் 4 கோடி மக்கள் உயிரிழக்க நேரிடும். மேலும், கட்டடங்கள் பெரும் சேதமடையும், பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்று அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 12- ஆம் தேதி சூரிய கிரகணம் நிகழும் என்று எதிர்பார்க்கப்படுவதால், இந்த வைரல் பதிவு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த தகவல் ப்ராஜெக்ட் ஆங்கர் என்ற ரகசிய நாசா ஆவணத்தில் இருந்து வந்ததாக கூறுகின்றனர். இது கடந்த நவம்பர் 2024- ஆம் ஆண்டு கசிந்ததாகவும், இருந்தாலும் அத்தகைய ஆவணம் இருப்பதாக நிரூபிக்கப்படவில்லை எனவும் கூறுகின்றனர்.
நாசா விஞ்ஞானிகள் கூறுவதென்ன
ஆரம்ப கால பதிவுகளில் ஒன்று இன்ஸ்டாகிராம் பயனரிடமிருந்து வந்தது. அவர் இந்த நிகழ்வு கோள்கள் ஒன்றுடன் ஒன்று மோதும் போது ஏற்படும் ஈர்ப்பு அலைகளால் பாதிப்பு ஏற்படும் என்று கூறி இருந்தார். இந்த கருத்துக்களை நாசா விஞ்ஞானிகள் நிராகரித்துள்ளனர். இது தொடர்பாக நாசாவின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், புவி ஈர்ப்பு விசை எந்த நாளிலும் மறைந்து விடாது. புவி ஈர்ப்பு விசை பூமியின் நிறை சார்ந்தது ஆகும் என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: பாலக் பன்னீரால் உண்டான பிரச்சனை.. 2 இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் இருந்து வெளியேறிய சம்பவம்.. நஷ்ட ஈடு வழங்கிய பல்கலைக்கழகம்..




புவி ஈர்ப்பு விசையை பாதிக்க முடியாது
இதே போல, ஹெட்போர்ட்ஷையர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கருத்துளை நிபுணர் டாக்டர் வில்லியம் ஆக்ஸு இந்த கருத்தை நிராகரித்திருந்தார். மேலும், அவர் கூறுகையில் ஈர்ப்பு அலைகள் மிகவும் பலவீனமானவை ஆகும். மிகவும் உணர்திறன் வாய்ந்த கருவிகளை பயன்படுத்தி மட்டுமே ஈர்ப்பு அலைகளை கண்டறிய முடியும். அவை பூமியையோ அல்லது புவி ஈர்ப்பு விசையையோ பாதிக்க வாய்ப்பு மிக மிகக் குறைவு.
பொது மக்களுக்கு விஞ்ஞானிகள் எச்சரிக்கை
பூமியின் மையப்பகுதி, நிலம், பெருங்கடல், வளிமண்டலம் உள்பட அதன் மொத்த நிறை திடீரென மறைந்து விட்டால் மட்டுமே பூமி ஈர்ப்பு விசை இழக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஆனால், இது சாத்தியமற்றது. சமூக ஊடகங்களில் காணப்படும் சரிபார்க்கப்படாத பதிவுகளை நம்பவோ அல்லது பிறருக்கு பகிரவோ வேண்டாம் என்று பொது மக்களுக்கு நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் படிக்க: “நீ இறந்து விட்டாயா”…இளைஞர்கள் மத்தியில் பிரபலமான செல்போன் செயலி…என்ன அது!