கத்தாரின் LNG மீது ஈரான் தாக்குதல்.. எரிவாயு உற்பத்தி முடக்கம்.. உலக நாடுகளுக்குப் பேரிடி!
Qatar's LNG Exports Disrupted: கத்தார் எனர்ஜி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சாத் அல்-காபி இது குறித்து கூறுகையில், சேதமடைந்த உள்கட்டமைப்புகளைச் சீரமைத்து, மீண்டும் பழைய உற்பத்தித் திறனை எட்டுவதற்கு 3 முதல் 5 ஆண்டுகள் வரை ஆகலாம் என்று கூறியுள்ளார்.

தாக்குதலுக்கு உள்ளான எல்.என்.ஜி வளாகம்
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம், தற்போது உலக நாடுகளின் சமையலறை மற்றும் தொழிற்சாலைகளை அச்சுறுத்தும் நிலைக்கு சென்றுள்ளள்ளது. ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான நேரடி மோதலில், உலகின் மிகப்பெரிய திரவ இயற்கை எரிவாயு (LNG) ஏற்றுமதியாளரான கத்தாரின் உள்கட்டமைப்புகள் இலக்கு வைக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக, கத்தாரின் 17 சதவீத எரிவாயு ஏற்றுமதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கத்தாரின் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது ஈரான் நடத்திய தாக்குதல்கள் உலகளாவிய எரிசக்தி சந்தையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
இதையும் படிக்க : துபாய் விமான நிலையம் அருகே எண்ணெய் கிடங்கு மீது தாக்குதல்.. விமான சேவைகள் முடக்கம்..
தாக்குதலின் பின்னணி மற்றும் சேதங்கள்:
இஸ்ரேல் படைகள் ஈரானின் ‘சவுத் பார்ஸ்’ (South Pars) எரிவாயு வயல்களைத் தாக்கியதற்குப் பதிலடியாக, ஈரான் கத்தாரின் ‘ராஸ் லாஃபான்’ (Ras Laffan) எல்.என்.ஜி வளாகத்தின் மீது ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலால் கத்தாரின் 14 எரிவாயு உற்பத்தி பிரிவுகளில் இரண்டு பிரிவுகள் முழுமையாகச் சேதமடைந்துள்ளன. முக்கியமான எரிவாயு-திரவமாக்கல் (GTL) வசதி முடக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்த தாக்குதலால் கத்தார் எனர்ஜி (QatarEnergy) நிறுவனம் ஆண்டுக்கு சுமார் 20 பில்லியன் டாலர் வருவாய் இழப்பைச் சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மீண்டு வர 5 ஆண்டுகள் ஆகும்:
கத்தார் எனர்ஜி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சாத் அல்-காபி இது குறித்து கூறுகையில், சேதமடைந்த உள்கட்டமைப்புகளைச் சீரமைத்து, மீண்டும் பழைய உற்பத்தித் திறனை எட்டுவதற்கு 3 முதல் 5 ஆண்டுகள் வரை ஆகலாம் என்று கூறியுள்ளார். இதனால் நீண்டகால ஒப்பந்த அடிப்படையில் எரிவாயு பெற்று வந்த நாடுகளுக்கு விநியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பாதிக்கப்படும் நாடுகள் – இந்தியாவின் நிலை என்ன?
கத்தாரின் இந்த ஏற்றுமதி முடக்கம் ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளை நேரடியாகப் பாதிக்கும். கத்தாரிடம் இருந்து அதிகப்படியான எல்.என்.ஜி இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னிலையில் உள்ளது. இந்த விநியோகத் தட்டுப்பாட்டால் இந்தியாவில் சிஎன்ஜி (CNG) வாகன எரிபொருள் மற்றும் குழாய் மூலம் வழங்கப்படும் சமையல் எரிவாயு (PNG) ஆகியவற்றின் விலை 35% முதல் 50% வரை உயர வாய்ப்புள்ளது.
உற்பத்தித் துறையில் முன்னணியில் உள்ள சீனா மற்றும் தென்கொரியா நாடுளின் மின் உற்பத்தி மற்றும் தொழிற்சாலை இயக்கங்கள் பாதிக்கப்படும். ரஷ்ய எரிவாயுவுக்கு மாற்றாக கத்தாரை நம்பியிருந்த இத்தாலி, பெல்ஜியம் போன்ற ஐரோப்பிய நாடுகளுக்கு இது ஒரு பேரிடியாகும்.
இதையும் படிக்க : ’உயிரோடு இருக்கிறேன்.. 10 விரல்தான் இருக்கு’ – வீடியோ வெளியிட்ட இஸ்ரேல் பிரதமர்
பொருளாதார தாக்கம்:
ஏற்கனவே ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியாகச் செல்லும் கப்பல் போக்குவரத்துப் பாதையில் பதற்றம் நிலவுவதால், எரிவாயு விநியோகச் சங்கிலி உடைந்துள்ளது. கத்தார் எனர்ஜி நிறுவனம் ‘ஃபோர்ஸ் மெஜூர்’ (Force Majeure) எனப்படும் சட்டப்படியான அறிவிப்பை வெளியிட்டுள்ளதால், உலகச் சந்தையில் எரிவாயுவின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயரக்கூடும் எனப் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.