Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட ஜப்பானின் கலாச்சார பொம்மை.. தருமா பொம்மைக்கும் இந்தியவிற்கும் இருக்கும் தொடர்பு என்ன?

PM Modi Visit To Japan: பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக ஜப்பான் சென்றுள்ளார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. மேலும், ஜப்பானின் தருமா பொம்மையை பிரதமர் மோடிக்கு, தருமா - ஜி கோயிலின் தலைமை பூசாரி ரெவ் சீஷி ஹிரோஸ் பரிசாக அளித்தார்.

பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட ஜப்பானின் கலாச்சார பொம்மை.. தருமா பொம்மைக்கும் இந்தியவிற்கும் இருக்கும் தொடர்பு என்ன?
பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட தருமா பொம்மை
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 29 Aug 2025 18:21 PM

பிரதமர் மோடி – ஜப்பான், ஆகஸ்ட் 29, 2025: பிரதமர் நரேந்திர மோடியின் ஜப்பான் பயணத்தின் முதல் நாளில் , தருமா – ஜி கோயிலின் தலைமை பூசாரி ரெவ் சீஷி ஹிரோஸ், ஜப்பானின் கலாச்சார சின்னமான தருமா பொம்மையை அவருக்கு பரிசளித்தார். நாட்டில் அதிர்ஷ்டக் கருவியாகக் கருதப்படும் இந்தப் பொம்மைகள், ஓரிரு அங்குலங்கள் முதல் பல அடி உயரம் வரை பல வகையில் கிடைக்கிறது. தருமா என்பது ஒரு பாரம்பரிய ஜப்பானிய பொம்மை, இது பொதுவாக பேப்பியர் – மச்சேவால் ஆனது. இது 5 ஆம் நூற்றாண்டில் ஜென் புத்த மதத்தை நிறுவிய போதிதர்மரின் மாதிரியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பொம்மை விடாமுயற்சி மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது, இது பெரும்பாலும் இலக்குகளை நிர்ணயிப்பதையும் அடைவதையும் குறிக்கப் பயன்படுகிறது என்று ஜப்பானிய வலைத்தளமான daruma.jp தெரிவித்துள்ளது.

ஜப்பானின் தருமா பொம்மை:

இந்தப் பொம்மையின் தனித்துவமான வட்டமான அடிப்பகுதி, சாய்ந்தால் மீண்டும் மேலே எழும்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தருமம் என்பது ஜப்பானில் தரும டைஷி என்று அழைக்கப்படும் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த இந்திய துறவி போதிதர்மரின் தியானத்தைக் குறிக்கிறது. போதிதர்மர் ஒன்பது ஆண்டுகள் தொடர்ந்து சுவரை நோக்கி, கைகால்களை மடித்து தியானம் செய்ததாக நம்பப்படுகிறது. இந்த நம்பிக்கை, தருமா பொம்மையின் விசித்திரமான, வட்ட வடிவமான கைகால்களும் கண்களும் இல்லாமல் இருப்பதை விளக்குகிறது.

மேலும் படிக்க: ‘வாருங்கள்.. இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள்’ முதலீட்டாளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு

பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட தருமா பொம்மை:


இப்படி ஜப்பானிய கலாச்சாரத்துடன் மிகவும் நெருக்கமான இந்த தருமா பொம்மையை பிரதமர் மோடிக்கு, தருமா – ஜி கோயிலின் தலைமை பூசாரி ரெவ் சீஷி ஹிரோஸ் பரிசாக அளித்துள்ளார். இது தொடர்பாக வெளியுறவு அமைச்சகம் அதன் எக்ஸ் வலைத்தள பக்கத்தில், ஜப்பானிய கலாச்சாரத்தின் அதிர்ஷ்ட வசீகரமான தருமா பொம்மை பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது என பதிவிடப்பட்டுள்ளது. மேலும், “தரும” என்பது சமஸ்கிருத வார்த்தையான தர்மாவிலிருந்து உருவானது, இதற்கு ஜப்பானிய அல்லது சீன மொழிகளில் நேரடி இணையான சொல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: 75 வயதில் ஓய்வுபெற வேண்டுமா? – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் விளக்கம்

பிரதமர் மோடியின் ஜப்பான் பயணம்:

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக ஜப்பான் சென்று உள்ளார். ஆகஸ்ட் 29, 2025 தேதியான இன்று ஜப்பான் சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு டோக்கியோ விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அவர் இந்தியா ஜப்பான் பொருளாதார மன்ற கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், “ இந்தியாவின் வளர்ச்சி பயணத்தில் ஜப்பான் எப்போதும் ஒரு முக்கிய பங்காளியாக இருந்து வருகிறது.

மெட்ரோ ரயில் முதல் உற்பத்தி வரை பல்வேறு தொழில்களில் ஜப்பான் நிறுவனங்கள் இந்தியாவில் 40 பில்லியன் அமெரிக்க டாலருக்கு மேல் முதலீடு செய்துள்ளனர். மிக விரைவில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும். பேட்டரிகள், ரோபோடிக்ஸ், செமிகண்டக்டர் மற்றும் அனுசக்தி ஆகியவற்றில் நாம் வெற்றியை பெற்றுள்ளோம். அனைவருக்கும் ஒரு வேண்டுகோள். இந்தியாவில் உற்பத்தி செய்ய வாருங்கள். கடந்த 10 ஆண்டுகளில் அடுத்த தலைமுறை இயக்கம் மற்றும் தளவாட உள்கட்ட அமைப்பில் இந்தியா முன்னேற்றம் அடைந்துள்ளது” என தெரிவித்துள்ளார்.