Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

KP Sharma Oli: நேபாளத்தை பந்தாடிய இளைஞர்கள்.. பிரதமர் பதவியை ராஜினாமா செய்த கேபி சர்மா ஒலி!

Youth Protests in Nepal: நேபாளத்தில் சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை, இளைஞர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. காத்மண்டுவில் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். வன்முறை வெடித்ததில் 20 பேர் பலியாகி, 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.இதையடுத்து, பிரதமர் கே.பி. சர்மா ஓலி ராஜினாமா செய்துள்ளார்.

KP Sharma Oli: நேபாளத்தை பந்தாடிய இளைஞர்கள்.. பிரதமர் பதவியை ராஜினாமா செய்த கேபி சர்மா ஒலி!
கேபி சர்மா ஒலி
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 09 Sep 2025 15:20 PM IST

நேபாளம், செப்டம்பர் 9: நேபாளத்தில் இளைஞர்கள் போராட்டம் வெடித்து நிலைமை கையை மீறியுள்ள நிலையில் பிரதமர் கே.பி. சர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவரது பதவிக்காலம் குறுகிய காலத்திலேயே முடிவுக்கு வந்துள்ளது.  இந்தியாவின் அண்டை நாடாக உள்ள நேபாளத்தில் பிரதமராக கேபி சர்மா ஒலி பதவி வகித்து வந்தார். அந்நாட்டில் அரசுக்கு எதிரான அவதூறு கருத்துக்களை தடுக்கும் வகையில் சமீபத்தில் அமைச்சரவை கூட்டம் கூடி சமூக வலைத்தளங்களை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கை மேற்கொண்டது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி இதற்கான அறிவிப்பு 2025, ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்பட்டது. அதாவது அந்நாட்டின் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் அனைத்து சமூக வலைதளங்களும் பதிவு செய்யப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

சமூக வலைத்தளங்களுக்கு தடை

இதற்காக ஏழு நாட்கள் கால அவகாசம் கொடுக்கப்பட்டது.  அதன் காலக்கெடு ஆகஸ்ட் 28 ஆம் தேதி முடிந்த நிலையில் பல சமூக வலைதளங்கள் பதிவு நடவடிக்கையை மேற்கொண்ட நிலையில், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற வலைதளங்கள் பதிவு செய்யாமல் இருந்தன. இதன் காரணமாக 2025 செப்டம்பர் 4ம் தேதி முதல் 26 வகையான சமூக வலைதளங்களுக்கு நேபாள அரசு தடை விதித்து உத்தரவிட்டது.

Also Read: நேபாளத்தில் சமூக வலைதள தடைக்கு எதிராக Gen Z இளைஞர்கள் போராட்டம் – ஒருவர் பலி, 80 பேர் படுகாயம்

சமூக வலைதளங்கள் மீதான தடை நேபாள நாட்டில் வாழ்ந்து வரும் இளைய சமூகத்தினர் இடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. செப்டம்பர் 8ம் தேதி நேபாள தலைநகர் காத்மண்டுவில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினர்.  இந்த போராட்டம் வன்முறையாக மாறியது. கண்ணீர் புகைக்குண்டு வீசப்பட்டு கூட்டத்தைக் கலைக்க துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.  இதில் 20 பேர் பலியாகினர். 300க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர்.

பிரதமர் திடீர் ராஜினாமா

இன்றும் இரண்டாவது நாளாக போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில் காத்மண்டுவில் நேற்று நடந்த போராட்டம் தற்போது நேபாள நாடு முழுவதும் பரவ தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. காத்மண்டு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், நேபாள அரசாங்கம் சமூக ஊடகங்கள் மீதான தடையை நீக்கியது. ஆனாலும் நேபாளத்தில் போராட்டங்கள் அதிகரித்தன. போராட்டக்காரர்கள் தங்களுடைய இடங்களில் உள்ள அரசியல்வாதிகளின் வீடுகளை சூறையாடி வருகின்றனர். இதனால் நேபாளத்தில் நிலைமை கட்டுக்கடங்காமல் செல்கிறது. போலீஸ், ராணுவம் போன்றவை கலவரக்காரர்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது.

Also Read: கேன்சருக்கான தடுப்பூசி.. பயன்பாட்டுக்கு வந்ததாக ரஷ்யா அறிவிப்பு.. குணப்படுத்துமா?

மேலும் போராட்டக்காரர்கள் பிரதமர் கேபி சர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அவரது அரசின் கீழ் உள்ள அனைத்து துறைகளிலும் ஊழல் உள்ளது. அவர் ராஜினாமா செய்தால் தான் போராட்டம் நிறுத்தப்படும் என அறிவித்தனர். இந்த நிலையில் இளைஞர்களின் போராட்டத்திற்கு பிரதமர் கேபி சர்மா ஒலி பணிந்துள்ளார். அவர் தனது பதிவை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இதனை அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும் நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருவதால் அவர் துபாய்க்கு தப்பி செல்ல உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அந்நாட்டின் புதிய பிரதமர் இன்று மாலை தேர்வு செய்யப்படுவார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.