2025 ஆம் மருத்துவத்திற்கான நோபல் பரிசு – அமெரிக்க – ஜப்பான் விஞ்ஞானிகள் தேர்வு
Nobel Prize 2025 in Medicine: 2025 ஆம் ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த மேரி ஈ. பிரன்கோ, ஃப்ரெட் ராம்ஸ்டெல் மற்றும் ஜப்பானைச் சேர்ந்த டாக்டர் சிமோன் சாககுசி ஆகியோருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாட்டால் ஏற்படும் நோய்களுக்கு தீர்வை கண்டறிந்துள்ளனர்.

2025 ஆம் ஆண்டுக்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசு, மனித உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பை ஒழுங்குபடுத்தும் விதத்தை கண்டுபிடித்த மூன்று விஞ்ஞானிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்க விஞ்ஞானிகள் மேரி ஈ. பிரன்கோ, ஃப்ரெட் ராம்ஸ்டெல், மற்றும் ஜப்பானிய விஞ்ஞானி டாக்டர் சிமோன் சாககுச்சி ஆகியோர் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசை வென்றுள்ளனர். இவர்கள் மூவரின் கண்டுபிடிப்புகள் நோயெதிர்ப்பு அமைப்பின் பெரிஃபெரல் டாலரன்ஸ் எனப்படும் புதிய துறையை உருவாக்கி, புற்றுநோய் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கும் நோய்களுக்கு புதிய மருத்துவ சிகிச்சைகள் உருவாக காரணமாக அமைந்திருக்கின்றனர்.
மருத்துவ உலகில் பெரும் புரட்சி
ஜப்பானிய மருத்துவர் சிமோன் சாககுசி 1995-ஆம் ஆண்டு, மனித உடலில் உள்ள Regulatory T Cells எனப்படும் புதிய வகை நோயெதிர்ப்பு செல்களை கண்டுபிடித்தார். இவை உடலில் தேவையில்லாமல் அதிகமாகச் செயல்படும் பிற செல்களை கட்டுப்படுத்தும் முக்கிய பங்கு வகுப்பதாக தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, 2001 ஆம் ஆண்டு மேரி பிரன்கோ மற்றும் ஃப்ரெட் ராம்ஸ்டெல் ஆகியோர் Foxp3 எனப்படும் மரபணுவில் ஏற்பட்ட மாற்றமே சில அரிதான நோய் எதிர்ப்பு சக்தி குறையும் நோய்களுக்கான காரணம் என கண்டுபிடித்தனர்.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, சாககுசி, ஃபோக்ஸ்பி3 என்ற மரபணு Regulatory T Cells வளர்ச்சியை கட்டுப்படுத்துகிறது என்பதை நிரூபித்தார். இதனால் உடலில் ஏற்படும் தீவிர நோயெதிர்ப்பு தாக்குதல்களை தடுக்க முடியும் எனவும் கூறினார்.




நோபல் குழுவின் பாராட்டு
இது தொடர்பாக நோபல் குழு தலைவர் ஒல்லே காம்பே தெரிவித்துள்ளதாவது, இந்த மூவரின் கண்டுபிடிப்புகள், மனித உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது என்பதில் முக்கிய முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம், உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கானோர் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாட்டினால் ஏற்படும் நோய்களில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள முடியும் என்றார்.
பரிசுத் தொகை எவ்வளவு?
இந்த மூவரும் இந்திய மதிப்பில் சுமார் ரூ.10 கோடி பரிசுத் தொகையை பகிர்ந்து கொள்வார்கள். நோபல் பரிசு வழங்கும் விழா டிசம்பர் 10, 2025 அன்று ஸ்டாக்ஹோம் நகரில் நடைபெறும். இது 2025 ஆம் ஆண்டிற்கான முதல் நோபல் பரிசு என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து இயற்பியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் உள்ளிட்ட பிரிவுகளுக்கான பரிசுகள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மூவரின் பங்களிப்பு, மனித உடல் நோயெதிர்ப்பு அமைப்பின் செயல்பாடுகளை நமக்கு தெளிவாக சொல்வதுடன் புற்றுநோய் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாட்டால் ஏற்படும் நோய்களுக்கு புதிய சிகிச்சைகளை நமக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இது மருத்துவ உலகில் ஒரு மைல் கல்லாகப் பார்க்கப்படுகிறது.