Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

’ஜனநாயகம் அமைப்பு அல்ல.. கலாச்சாரம்’ கானா நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு!

PM Modi In Ghana Parliament : கானாவுக்கு பயணம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் மோடி, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றி உள்ளார். இந்தியா ஜனநாயகத்தின் தாய் என்றும் ஜனநாயகம் என்பது ஒரு அமைப்பு அல்ல, அது ஒரு கலாச்சாரம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

’ஜனநாயகம் அமைப்பு அல்ல.. கலாச்சாரம்’ கானா நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு!
பிரதமர் மோடி கானா நாடாளுமன்றத்தில் உரைImage Source: PTI
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 03 Jul 2025 16:50 PM

கானா நாட்டின் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரையாற்றி உள்ளார் (PM Modi In Ghana Parliament).  30 ஆண்டுகளில் இந்தியா பிரதமர் ஒருவர் கானாவுக்கு செல்வது இதுவே முதல்முறையாகும். எனவே, பிரதமர் மோடி, அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் உரையாற்றியது வரலாற்று சிறப்புமிக்க தருணமாக பார்க்கப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி தனது ஐந்து நாடுகளின் (PM Modi 5 Nation Tour) சுற்றுப்பயணத்தைத் தொடங்கியுள்ளார். அதில் முதற்கட்டமாக, 2025 ஜூலை 2ஆம் தேதி கானா நாட்டிற்கு பிரதமர் மோடி சென்றுள்ளார். கானா நாட்டிற்கு சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், கானா நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. இந்த விருதை அந்நாட்டின் அதிபர் ஜான் திராமணி மஹாமா வழங்கினார். அதைத் தொடர்ந்து, அதிபர் ஜான் டிராமணி மஹாமாவுடன் விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்தினார். ​​

’ஜனநாயகம் அமைப்பு அல்ல.. கலாச்சாரம்’

இந்தியாவும் கானாவும் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த பல ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன. இதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி, கானா நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “கானா நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதில் பெருமை கொள்கிறேன். கானாவிலிருந்து பெறப்பட்ட மிக உயர்ந்த விருதிற்கு 140 கோடி இந்தியர்கள் சார்பாக எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தியா ஜனநாயகத்தின் தாய். ஜனநாயகம் என்பது ஒரு அமைப்பு அல்ல, அது ஒரு கலாச்சாரம்.  இந்தியாவில் 2,500க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள், வெவ்வேறு மாநிலங்களை ஆளும் 20 வெவ்வேறு கட்சிகள், 22 அதிகாரப்பூர்வ மொழிகள், ஆயிரக்கணக்கான பேச்சுவழக்குகள் உள்ளன. இந்தியாவிற்கு வந்த மக்கள் எப்போதும் திறந்த இதயங்களுடன் வரவேற்கப்படுவதற்கும் இதுவே காரணம்.

கானா தங்க நிலம் என்று அழைக்கப்படுகிறது. உங்கள் மண்ணின் இருப்பதற்கு மட்டுமல்ல. உங்கள் இதயங்களில் உள்ள அரவணைப்பு மற்றும் வலிமைக்கும் நன்றி. கானாவைப் பார்க்கும்போது, ​​துணிச்சலுடன் நிற்கும் ஒரு தேசத்தை  பார்க்க முடிகிறது. அனைவரையும் உள்ளடக்கிய முன்னேற்றத்திற்கான உங்கள் அர்ப்பணிப்பு, கானாவை முழு ஆப்பிரிக்க கண்டத்திற்கும் ஒரு உத்வேக மையமாக மாற்றியுள்ளது.

”பயங்கரவாதம் உலகிற்கு ஒரு பெரிய பிரச்சினை”

பயங்கரவாதம் உலகிற்கு ஒரு பெரிய பிரச்சினை. இந்தியா-கானா நட்புறவு கானாவின் புகழ்பெற்ற சர்க்கரை ரொட்டி அன்னாசிப்பழத்தை விட இனிமையானது. கானாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான கூட்டாண்மை இன்றைய காலத்திற்கானது அல்ல. எதிர்காலத்திற்கானது. ஆப்பிரிக்காவுடனான எங்கள் வளர்ச்சி கூட்டாண்மை தேவையை அடிப்படையாகக் கொண்டது

இந்தியாவின் புதிய நாடாளுமன்றத்தைப் பார்வையிட உங்களை (கானா பிரதிநிதிகள்)அழைக்கிறேன். இந்திய நாடாளுமன்றத்திலும் மாநில சட்டமன்றங்களிலும் மூன்றில் ஒரு பங்கு இடங்களை பெண்களுக்கு ஒதுக்குவதற்கு நாங்கள் எடுத்துள்ள துணிச்சலான நடவடிக்கையை நீங்கள் காண வேண்டும். இந்திய மக்கள் அமைதி, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியில் தங்கள் நம்பிக்கையை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளனர். இந்தியா விரைவில் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும்” என தெரிவித்துள்ளார்.

கானா நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை