Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுக்கோலில் 5.3 ஆக பதிவு..

Afghanistan Earthquake: ஆப்கானிஸ்தான் குனார் மாகாணத்தில், செப்டம்பர் 2, 2025 மாலை மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் தகவல்படி, செப்டம்பர் 2, 2025 மாலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுக்கோலில் 5.3 ஆக பதிவு..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 02 Sep 2025 23:23 PM IST

ஆப்கானிஸ்தான், செப்டம்பர் 2, 2025: ஆப்கானிஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை, அதாவது ஆகஸ்ட் 31, 2025 அன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் ஏற்பட்டுப் பாதிப்புகள் இன்னும் மாறாத நிலையில், மீண்டும் ஒரு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் அதே பகுதிக்கு அருகில் ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியான குனார் மாகாணத்தில் ஆகஸ்ட் 31, 2025 அன்று இரவு 11 மணி அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்தடுத்து 6 மற்றும் 4.5 ரிக்டர் அளவில் அதிர்வுகள் பதிவானது. இந்த நிலநடுக்கத்தில் சுமார் 1,400 பேர் உயிரிழந்தனர். அப்பகுதியில் இருந்த வீடுகள், கட்டிடங்கள் அனைத்தும் தரைமட்டமானது. இரவு நேரத்தில் ஏற்பட்ட இந்த அதிர்வால், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மண்ணில் புதைந்து உயிரிழந்தனர். அங்கு தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் 3,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்:

இந்த நிலையில், ஆகஸ்ட் 31, 2025 அன்று இரவில் நிலநடுக்கம் ஏற்பட்ட அதே பகுதியில் இன்று, அதாவது செப்டம்பர் 2, 2025 மாலை மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் தகவல்படி, செப்டம்பர் 2, 2025 மாலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவாகியுள்ளது. இதனால் அப்பகுதியில் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளன. அங்கு இருந்த கட்டிடங்கள் அனைத்தும் இடிந்து விழுந்துள்ளன. அப்பகுதியில் பாதிப்புகள் மிக மோசமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்புப்பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும் படிக்க: நடுவானில் பயணிகளை பாட்டிலில் சிறுநீர் கழிக்க கூறிய விமான ஊழியர்கள்.. அதிர்ச்சி சம்பம்!

குனார் மாகாண பேரிடர் மேலாண்மை துறையின் செய்தித் தொடர்பாளர் எஹ்சானுல்லா எஹ்சான் இதுகுறித்து கூறுகையில், “இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இதுவரை உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை. மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன” என தெரிவித்துள்ளார்.

தற்போது வரை குனார் மாகாணத்தில் 5,400-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாக அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஹம்துல்லா ஃபித்ரத் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும், தெருக்களில் தஞ்சம் அடைந்த மக்களுக்கு அவசரகால தங்குமிடங்கள் அமைக்கப்பட்டு வருவதாகவும், பல நாடுகளிலிருந்து உதவித் திட்டங்கள் வந்து கொண்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: ஆப்கானிஸ்தானை உலுக்கிய நிலநடுக்கம்.. 600 பேர் உயிரிழப்பு.. கண்ணீர் வடிக்கும் மக்கள்!

உதவிக்கரம் நீட்டிய இந்தியா:

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 1,400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இந்தியா அந்நாட்டிற்கு மனிதாபிமான உதவிகளை அனுப்பியுள்ளது. நிலநடுக்கத்துக்குப் பின் ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா மனிதாபிமான உதவிகளை வழங்கி வருவதாக வெளியுறவு துறை அமைச்சகம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் குறிப்பாக, யுரேஷியா மற்றும் இந்தியா டெக்டானிக் பிளேட்கள் சந்திக்கும் இந்துக்குஷ் மலைத் தொடரில் நிலநடுக்கங்கள் பொதுவானவை. ஆனால் சமீபத்திய நாட்களில் ஏற்பட்ட அதிர்வுகள் பேரழிவை ஏற்படுத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.