துருக்கியில் கடுமையான நிலநடுக்கம்.. நள்ளிரவில் கட்டடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அதிர்ச்சி!
6.1 Magnitude Earthquake in Turkey | துருக்கியில் நேற்று (அக்டோபர் 27, 2025) நள்ளிரவு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் கடும் பீதியில் உறைந்துள்ளனர்.

மாதிரி புகைப்படம்
இஸ்தான்புல், அக்டோபர் 28 : துருக்கியில் (Turkey) நேற்று (அக்டோபர் 27, 2025) இரவு கடுமையான நிலநடுக்கம் (Earthquake) ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் அளவு 6.1 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் (NCS – National Center for Seismology) தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் சற்று கடுமையாக இருந்த நிலையில், வீடுகள் மற்றும் கட்டடங்கள் குலுங்கியுள்ளன. இதன் காரணமாக பொதுமக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்த நிலையில், துருக்கியில் இரவு ஏற்பட்ட நிலநடுக்கம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
துருக்கியை உலுக்கிய கடுமையான நிலநடுக்கம் – 6.1 ரிக்டர் அளவாக பதிவு
துருக்கியின் மேற்கு பகுதியில் பாலிகெசிர் மாகாணம் உள்ளது. அந்த பகுதியில் உள்ள சிந்திர்கி நகரில் நேற்று (அக்டோபர் 27, 2025) இரவு மிக கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் இஸ்தான்புல், புர்சா, மணிசா மற்றும் இஜ்மீர் ஆகிய பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த நிலநடுக்கத்தின் போது வீடுகளும், கட்டடங்களும் குலுங்கியுள்ளன. இதனால் அந்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இதையும் படிங்க : 2025: உலகின் சிறந்த காற்று தர குறியீட்டைக் கொண்ட டாப் 10 நகரங்கள் இதுதான்!
இடிந்து விழுந்த கட்டடங்கள்
🚨BREAKING: Some buildings collapsed and electricity was cut off in the earthquake that occurred in Sındırgı district of Balıkesir, Turkey. pic.twitter.com/0a1VoJE8ka
— World Source News (@Worldsource24) October 27, 2025
இந்த நிலநடுக்கம் காரணமாக அங்கு கட்டடங்கள் குலுங்கியது மட்டுமன்றி சில கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன. இதேபோல பாலிகெசிரை சுற்றியுள்ள பகுதிகளிலும் சிறிது அளவு நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : ஆசிய நாடுகளுக்கு 5 நாட்கள் பயணம் மேற்கொண்டுள்ள டிரம்ப்.. முக்கியத்துவம் என்ன?
துருக்கியில் 2023 ஆம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தில் சிக்கி சுமார் 53,000 பேர் பலியாகினர். இதேபோல 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இதே சிந்திர்கி பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில் ஒருவர் பலியான நிலையில், பலர் காயமடைந்தனர். இந்த நிலையில், அங்கு ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கம் காரணமாக என்ன என்ன பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது என்பது குறித்து எந்த வித தகவலும் வெளியாகமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.