இந்தியாவில் விநாயகர் சதுரத்தி (Ganesh Chaturthi) விழா கடந்த ஆகஸ்ட் 27, 2025 அன்று தொடங்கி 10 நாள் நிகழ்வாக வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. கடைசி நாளான செப்டம்பர் 6, 2025 இன்று மக்கள் விநாயகர் சிலை சிறப்பு பூஜைகள் செய்து நீரில் கரைப்பது வழக்கம். இந்தியா மட்டுமல்லாமல் உலகம் உள்ள இந்துக்கள் விநாயகர் சதுர்த்தியை வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அந்த வைகையில் இங்கிலாந்தில் விநாயகர் சிலையை பக்தர்கள் ஆற்றில் கரைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் சந்தீப் அந்த்வால் என்பவர் பகிர்ந்துள்ளார்.
லண்டனில் விநாயகர் சதுர்த்தி விழா
வைரலாகும் ஒரு வீடியோவில் இந்தியர்கள் பாரம்பரிய உடையில் படகில் விநாயகர் சிலையை ஆற்றில் கரைக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. அப்போது ஆற்றில் வாத்துகள் நீந்திய படி இருப்பதையும் பார்க்க முடிகிறது. வைரலாகும் இந்த வீடியோவை தற்போது வரை 16 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். ஒரு பக்கம் பாராட்டுகள் குவிந்தாலும் மற்றொரு பக்கம் இந்த வீடியோவுக்கு எதிர்வினைகளும் அதிகம் கிடைத்து வருகின்றன.
இதையும் படிக்க : உலகின் மிகப்பெரிய விநாயகர் சிலை இந்தியாவில் இல்லை.. வேறு எந்த நாடு தெரியுமா?
வைரலாகும் வீடியோ
நெட்டிசன்ஸ் எதிர்வினைகள்
இந்த வீடியோவிற்கு பல வகையான எதிர்ப்புகள் குவிந்து வருகின்றன. அதில் ஒருவர், விநாயகரை வரவேற்க வாத்துகள் வந்துவிட்டன என கமெண்ட் செய்துள்ளார். இன்னொருவர், கவலைப்படாதீர்கள் நண்பர்களே, லண்டன் காவல்துறையினர் இதனை வெறும் களிமண் சிலையாக தான் பார்ப்பார்கள். கடவுள் பார்த்துக்கொள்வார் என குறிப்பிட்டுள்ளார். மற்றொருவர், நீங்கள் செய்யும் செயல் விநாயகர் விரும்புவாரா? வீட்டிலேயே செய்து நாட்டையும் மதியுங்கள் என மற்றொருவர் கமெண்ட் செய்துள்ளார். லண்டன் நீர் நிலைகளையும் மாசுபடுத்த தொடங்கிவிட்டனர் என ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு பக்கம், “இந்த வீடியோ எங்கிருந்தாலும் இந்திய கலாசாரம் எவ்வளவு வேரூன்றியிருக்கிறது என்பதற்கான சான்று” என சிலர் பாராட்டியுள்ளனர்.
இதையும் படிக்க : எப்போது விநாயகரை வழிபட்டாலும் இடம் பெற வேண்டிய பிரசாதங்கள்!
விநாயகர் சிலையை நீரில் கரைக்கும் நிகழ்வுகள்
விநாயகர் சதுர்த்தி விழா அதிகபட்சம் 10 நாட்கள் விநாயகர் சிலையை வழிபட்டு, அதனை சிறப்பு பூஜைகள் செய்து நீரில் கரைப்பதுடன் முடிவடைகிறது. விநாயகர் சிலையை நீரில் கரைக்கும் முன் சிலைக்கு மஞ்சள், குங்குமம் பூசப்பட்டு ஆரத்தி எடுத்து வழிபாடு நடத்தப்படும். இதனையடுத்து விநாயகர் சிலைக்கு பக்தர்கள் மலர் தூவி மரியாதை செலுத்துவர். பின்னர் அதற்கு தயிர், அரிசி, தேங்காய் ஆகியவற்றை காணிக்கையாக செலுத்தி அதனை ஆறு உள்ளிட்ட நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம். இதனை கடவுளின் அருள் வேண்டி பக்தர்கள் ஒவ்வொரு ஆண்டும் மிகவும் சிரத்தையுடன் செய்கிறார்கள்.