இனி லைசென்ஸ் கட்டாயம்… இடியாப்ப வியாபாரிகளுக்கு வந்து புதிய சிக்கல் – காரணம் என்ன?
Food Safety Rules: இனி சைக்கிள் மற்றும் பைக்குகளில் இடியாப்பம் விற்பவர்களும் அதற்கான லைசன்ஸ் வைத்திருக்க வேண்டும் என உணவு பாதுகாப்புத்துறை அறிவுறுத்தியுள்ளது. இடியாப்பங்கள் சுகாதாரமற்ற முறையில் விற்கப்படுவதாக தொடர்ச்சியாக எழுந்த புகாரையடுத்து இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்லது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பைக்கில் இடியாப்பம் விற்க இனி லைசென்ஸ் கட்டாயம்
தமிழர்களின் அன்றாட உணவில் முக்கிய இடம் பெற்றுள்ள இடியாப்பம், காலை மற்றும் மாலை நேரங்களில் குறைந்த செலவில் பசியை தீர்க்கும் சிற்றுண்டியாக இருந்து வருகிறது. பெரு நகரங்களில் காலை நேரங்களில் சைக்கிள் மற்றும் பைக்குளில் வியாபாரிகள் இடியாப்பங்களை விற்று வருகின்றனர். குறைந்த விலையில் கிடைப்பதால் கூலி தொழிலாளர்கள் முதல் அலுவலகம் செல்லும் பணியாளர்கள் (Employee) வரை அனைவரும் இடியாப்பத்தை விரும்பி வாங்கி உண்கின்றனர். இடியாப்பம் என ஒலி எழுப்பிய படி வரும் வாகனம் மிகவும் பிரபலம். சமீப காலமாக சமூக வலைதள ரீல்ஸ்களில் இடியாப்பம் என்ற ஒலி பிரபலமாகி வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் உணவுபாதுகாப்புத்துறை இடியாப்ப வியாபாரிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
இனி லைசென்ஸ் கட்டாயம்
நகரங்கள் மட்டுமின்றி கிராமப்புறங்களிலும், ஒவ்வொரு தெருவிலும் சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனங்களில் இடியாப்பம்… இடியாப்பம் என்ற சத்தம் கேட்காத இடமே இல்லை எனலாம். இவ்வளவு பரவலாக இடியாப்பம் விற்பனை நடைபெற்று வரும் நிலையில், அதன் தயாரிப்பு மற்றும் விற்பனையில் சுகாதார முறைகள் பின்பற்றப்படுகிறதா என்ற கேள்விகளும் எழத் தொடங்கியுள்ளன. சில இடங்களில் இடியாப்பம் திறந்த வெளியில் மாவு பிசைந்து தயாரிக்கப்படுவதாகவும், சுத்தமில்லாத முறையில் எடுத்துச் செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுவதாகவும் என்றும் உணவு பாதுகாப்புத் துறைக்கு புகார்கள் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : பருவம் தவறிய மழை.. விவசாயிகளை காப்பாற்ற ரூ.290 கோடி நிவாரணம்.. தமிழக அரசு அறிவிப்பு
இதன் காரணமாக, பொதுமக்களின் உடல்நலனை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன் படி, இடியாப்பம் தயாரித்து விற்பனை செய்யும் அனைவரும் கட்டாயமாக உணவு பாதுகாப்புத் துறையிடமிருந்து உரிமம் பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதி, கடைகளில் இடியாப்பம் விற்பவர்களுக்கு மட்டுமல்லாமல், சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனங்களில் இடியாப்பம் விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கும் பொருந்தும் என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இந்த உரிமம் பெறும் நடைமுறை, பொதுமக்களுக்கு பாதுகாப்பான மற்றும் சுத்தமான உணவு கிடைப்பதை உறுதி செய்வதற்காக மட்டுமே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உணவு பாதுகாப்புத் துறை விளக்கம் அளித்துள்ளது. மேலும், இடியாப்பம் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் அரிசி மாவு, தண்ணீர் உள்ளிட்ட மூலப்பொருட்கள் தரமானதாகவும், சுத்தமானதாகவும் இருக்க வேண்டும் என்றும், தயாரிக்கும் இடம் தூய்மையாக பராமரிக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : விடுமுறை முடிந்ததும் படிப்பு.. பள்ளிகள் திறக்கும் முதல் நாளிலேயே புத்தகங்கள்.. அதிரடி உத்தரவு!!
இடியாப்பம் எடுத்துச் செல்ல பயன்படுத்தப்படும் பாத்திரங்கள், மூடிகள், துணிகள் அனைத்தும் சுத்தமாக இருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. விற்பனை செய்யும் போது, இடியாப்பம் தூசி, ஈ, கொசு போன்றவற்றால் பாதிக்கப்படாமல் பாதுகாப்பாக மூடி வைக்கப்பட வேண்டும் என்றும், சுகாதார விதிமுறைகள் கட்டாயமாக பின்பற்றப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
உணவு பாதுகாப்பு உரிமம் பெறுவது எளிதானது என்றும், ஆன்லைன் மூலம் இலவசமாக பதிவு செய்து உரிமம் பெறலாம் என்றும் உணவுப்பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. மேலும், இந்த உரிமத்தை ஆண்டுதோறும் புதுப்பிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காய்ச்சல், தொற்றுநோய் போன்ற உடல்நலக்குறைவு உள்ளவர்கள் இடியாப்பம் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபடக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.