Google Chrome : பயனர்களின் மொத்த தகவல்களையும் சேகரிக்கும் கூகுள் குரோம்.. பரபரப்பு அறிக்கை!
Data Privacy Concerns in Google Chrome After New Surfshark Study | உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் கூகுள் குரோம் செயலியை பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில், உலக அளவில் பயன்படுத்தும் தேடுபொறிகள் குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் அதிர்ச்சியூட்டும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தொழில்நுட்பத்தின் வளர்ச்சியின் (Technology Development) காரணமாக தற்போது அனைத்துமே சுலபமாகிவிட்டது. முன்பெல்லாம் ஏதேனும் ஒரு விஷயம் குறித்த தகவலை தெரிந்துக்கொள்ள வேண்டும் என்றால் அது தொடர்பான புத்தகங்கள், ஆசிரியர்கள் அல்லது அந்த துறையில் புலமை வாய்ந்தவர்களிடம் தான் கேட்டு தெளிவு பெற முடியும். இந்த நடைமுறைகள் சற்று கடினமானதாகவும், அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். ஆனால், தற்போது அதற்கெல்லாம் கவலையே இல்லை. தற்போதுள்ள தொழில்நுட்ப அம்சங்களை பயன்படுத்தி நொடி பொழுதில் தேவையான தகவல்களை தெரிந்துக்கொள்ள முடியும்.
கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் கூகுள் குரோம்
தேடுபொறிகளை (Search Engines) பயன்படுத்தி எந்த ஒரு தகவலையும், சந்தேகத்தையும் போக்கிக்கொள்ள முடியும். அத்தகைய தேடுபொறிகளில் ஒன்றுதான் கூகுள் நிறுவனத்தின் குரோம். உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் இந்த தேடுபொறியை தங்களது அன்றாட வாழ்வில் அதிகம் பயன்படுத்துகின்றனர். மிக விரைவாக தகவல்களை தறுவது, கேள்விகளுக்கு விடை அளிப்பது, கேள்விகள் தொடர்பான புகைப்படங்களை வழங்குவது என பல அம்சங்கள் இதில் உண்டு. இவ்வளவு சிறப்பு வாய்ந்த கூகுள் குரோம் தான் தற்போது அதிர்ச்சியளிக்கும் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளது.
அதிக தனிப்பட்ட தகவல்களை சேகரிக்கும் கூகுள் குரோம்
பொதுவாகவே தேடுபொறிகள் மற்றும் செயலிகள் மீது தகவல் திருட்டு புகார்கள் எழுவது வழக்கமான ஒன்றாக உள்ளது. அந்த வகையில் கூகுள் நிறுவனமும் அவ்வப்போது இந்த புகாரில் சிக்குவது உண்டு. இந்த நிலையில், SurfShark என்ற சைபர் பாதுகாப்பு நிறுவனம் நடத்திய ஆய்வு ஒன்றில் அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. உலக அளவில் மிகவும் பிரபலமாக உள்ள தேடுபொறிகளை இந்த நிறுவனம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நிலையில், உலக அளவில் பயனர்களின் அதிக தனிப்பட்ட தகவல்களை சேகரிக்கும் தேடுபொறியாக கூகுள் நிறுவனத்தின் குரோம் உள்ளது தெரிய வந்துள்ளது.
அதாவது கூகுள் நிறுவனம் குரோம் தேடுபொறிக்காக பயனர்களின் தனிப்பட்ட விவரங்கள், பரிவர்த்தனை விவரங்கள், டிவைஸ் ஐடி, ஐபி ஐடி உள்ளிட்ட முக்கிய தகவல்களை சேகரிப்பதாக அந்த சைபர் பாதுகாப்பு நிறுவனம் கூறியுள்ளது. உலக அளவில் பயன்படுத்தப்படும் வேறு எந்த தேடுபொறிகளை காட்டிலும் கூகுள் குரோம் செயலி பல மடங்கு அதிக தகவல்களை சேகரிக்கிறது. அதாவது உலகம் முழுவதில் உள்ள 70 சதவீத பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை கூகுள் நிறுவனம் சேமித்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
கூகுள் நிறுவனம் இத்தகைய குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள நிலையில், பயனர்கள் தங்களது தனிப்பட்ட தகவல்களின் பாதுகாப்பு குறித்து கவலை கொண்டுள்ளனர். எனவே கூகுள் குரோம் பயன்படுத்தும் பயனர்கள் தங்களது குரோம் செட்டிங்கிற்கு சென்று தேவையற்ற அனுமதிகளை ரத்து செய்வது பாதுகாப்பானதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.