இந்தியர்களுக்கு பிரத்யேகமான சாட்ஜிபிடி கோ.. ஓபன் ஏஐ நிறுவனம் அறிமுகம்!
ChatGPT Go India Plan | ஓபன் ஏஐ நிறுவனம் இந்தியர்களுக்காக பிரத்யேகமான சாட்ஜிபிடி திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. வெறும் ரூ.399-க்கு சாட்ஜிபிடி கோ என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. பயனர்கள் பல்வேறு அம்சங்களை மிக எளிதாக பெறும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மாதிரி புகைப்படம்
செயற்கை நுண்ணறிவு (AI – Artificial Intelligence) அம்சத்தின் சாட்ஜிப்டியை (ChatGPT) ஏராளமான இந்தியர்கள் பயன்படுத்தும் நிலையில், ஓபன் ஏஐ (Open AI) நிறுவனம் இந்தியர்களுக்கான பிரத்யேக சாட்ஜிபிடி திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்திற்கு சாட்ஜிபிடி கோ என (ChatGPT Go) அந்த நிறுவனம் பெயரிட்டுள்ளது. ஏற்கனவே ஏராளமான இந்தியர்கள் சாட்ஜிபிடியை பயன்படுத்தும் நிலையில், இந்த புதிய சாட்ஜிபிடி கோ அம்சத்தின் சிறப்புகள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சாட்ஜிபிடியை அதிகம் பயன்படுத்தும் இந்தியர்கள்
ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஏராளமான இந்தியர்கள் தங்களது அன்றாட வாழ்வில் இந்த சாட்ஜிபிடியை பயன்படுத்துகின்றனர். சந்தேகங்களுக்கு விடை தேடுவது முதல், புகைப்படங்களை எடிட் செய்வது, மருத்து குறிப்புகள் கேட்பது, தனிப்பட்ட வாழ்க்கை குறித்த டிப்ஸ்கள் கேட்பது என பல விதமாக அதனை பயன்படுத்துகின்றனர். இவ்வாறு இந்தியர்களின் வாழ்வில் சாட்ஜிபிடி முக்கியமான இடத்தை பிடித்துள்ள நிலையில், அந்த நிறுவனம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இதையும் படிங்க : இந்தியாவில் ரூ.90,000 கோடியாக உயர்ந்த தினசரி யுபிஐ பரிவர்த்தனை அளவு.. ஆய்வு கூறுவது என்ன?
சாட்ஜிபிடியை பல்வேறு உலக நாடுகளை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தும் நிலையில், ஒரு குறிப்பிட்ட நாட்டு மக்களுக்காக தனி திட்டம் அறிமுகம் செய்யப்படுவது இதுவே முதன் முறை ஆகும். இந்தியர்கள் மத்தியில் சாட்ஜிபிடி பயன்பாடு எவ்வாறு உள்ளது என்பதை கணக்கிட்டு இந்த அம்சம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளதாக ஓபன் ஏஐ நிறுவனம் தெரிவித்துள்ளது. சாட்ஜிப்டியின் இரண்டாவது மிகப்பெரிய சந்தையாக இந்தியா உள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
சாட்ஜிபிடி கோவின் சிறப்பு அம்சங்கள் என்ன?
சாட்ஜிபிடி பிளஸ் திட்டத்தை விடவும் இந்த திட்டத்தின் விலை மிக குறைவாகவும். அதாவது சாட்ஜிபிடி பிளஸ் திட்டம் ரூ.1,999-க்கு வழங்கப்படும் நிலையில், இந்த திட்டம் வெறும் ரூ.399-க்கு கிடைக்கிறது. இந்த சாட்ஜிபிடி கோ அம்சத்தில் பயனர்கள் அதிகம் பயன்படுத்தும் அம்சங்களை அதிகம் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு வழங்கப்படும். குறிப்பாக இந்த திட்டத்தில் பயனர்களுக்கு 10 மடங்கு அதிக மெசேஜ் அளவு, தினசரி புகைப்பட உருவாக்கம், ஆவணங்கள் பதிவேற்றம் ஆகியவை வழங்கப்படும்.
இதையும் படிங்க : மெட்டா ஏஐ காரணமாக குழந்தைகளுக்கு ஆபத்து? வலுக்கும் எதிர்ப்பு
இந்த திட்டம் ஒபன் ஏஐ நிறுவனத்தின் சமீபத்திய ஜிபிடி – 5 திட்டத்தின் புதிய மாடல் ஆகும். இது இந்திய மொழிகளுக்கு சிறப்பாக பணியாற்றும் என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.