தலை தீபாவளி முடிந்து வேலைக்கு சென்ற கணவன்.. மனைவி தற்கொலை

சிவகங்கை மாவட்டம், களத்துப்பட்டியில் தலை தீபாவளி கொண்டாடிய புதுமணத் தம்பதிகளில், கணவன் பணிக்கு திரும்பிய விரக்தியில் மனைவி ரூபிகா தற்கொலை செய்து கொண்டார். அக்டோபர் 19 ஆம் தேதி தலை தீபாவளி கொண்டாட வந்து விட்டு, 22ஆம் தேதி கணவர் வேலைக்குச் சென்றதால் இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தலை தீபாவளி முடிந்து வேலைக்கு சென்ற கணவன்.. மனைவி தற்கொலை

ரூபிகா

Updated On: 

23 Oct 2025 14:07 PM

 IST

சிவகங்கை, அக்டோபர் 23: சிவகங்கை மாவட்டம் அருகே கணவன் தலை தீபாவளி முடிந்து வேலைக்கு சென்ற விரக்தியில் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் அருகே உள்ள எஸ். புதூர் பகுதியை அடுத்த இருக்கும் குன்னத்தூர் களத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மச்சக்காளை. விவசாயியான இவரின் இரண்டாவது மகள் ரூபிகா என்பவருக்கும் திண்டுக்கல் மாவட்டம் சிறுகுடி அருகே இருக்கும் ரெட்டையம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பாண்டி என்பவருக்கும் 2025 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெகு விமரிசையாக திருமணம் நடைபெற்றது. பாண்டி திருச்சியில் உள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.

இவர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த நிலையில் புதுமணத் தம்பதியான பாண்டி ரூபிகா ஆகிய இருவரும் தலை தீபாவளி கொண்டாட கடந்த அக்டோபர் 19ஆம் தேதி களத்துப்பட்டி கிராமத்திற்கு வந்தனர்.  அங்கு ரூபிகாவின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து சிறப்பான முறையில் இருவரும் தலை தீபாவளி கொண்டாடியுள்ளனர்.

இதையும் படிங்க: தனிமையில் இருந்ததை வீடியோ எடுத்து மிரட்டல்.. இளம்பெண் தற்கொலை!

இந்த நிலையில் பாண்டி அக்டோபர் 22ஆம் தேதி ரூபிகாவிடம் தான் திருச்சிக்கு திரும்பி வேலைக்கு செல்ல போவதாக கூறியுள்ளார். ஆனால் தலை தீபாவளி கொண்டாட வந்துவிட்டு உடனடியாக ஏன் வேலைக்கு செல்கிறீர்கள் என ரூபிகா கேட்டுள்ளார். தனக்கு இரு தினங்கள் மட்டுமே விடுமுறை கொடுத்ததாகவும், மாத கடைசி என்பதால் வேலைக்கு செல்ல வேண்டும் என பாண்டி சொன்னதாக கூறப்படுகிறது.

இதனால் இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ரூபிகா எவ்வளவோ கேட்டுப் பார்த்தும் பாண்டி வேலைக்கு புறப்பட்டு சென்று விட்டார். இதனால் மிகவும் மனம் வருத்தம் அடைந்த ரூபிகா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையில் போட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியே சென்ற குடும்பத்தினர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது ரூபிகா சடலமாக தொங்கிக் கொண்டதை கண்டு கதறி அழுதனர்.

இதையும் படிங்க: காதல் தொல்லை கொடுத்த இளைஞர்.. கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை!

உடனடியாக புழுதிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள் ரூபிகாவின் உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதே சமயம் திருமணமா கி 5 மாதங்கள் மட்டுமே ஆகியுள்ளதால் இது தொடர்பாக சிவகங்கை உதவி மாவட்ட ஆட்சியர் ஆயுஸ் வெங்கட்வட்ஸ் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை நடத்தினார். மேலும் தாசில்தார் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

(எந்தவொரு பிரச்னைக்கும் தற்கொலை ஒரு தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, மீண்டு வர கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம். மாநில உதவிமையம் : 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050)