Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தனிமையில் இருந்ததை வீடியோ எடுத்து மிரட்டல்.. இளம்பெண் தற்கொலை!

Tenkasi Crime News: தென்காசி அருகே காதலன் சக்திவேல் தன்னுடன் தனிமையில் இருந்ததை வீடியோ பதிவு செய்து, பணத்திற்காக மிரட்டியதால் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பணத்தை தர மறுத்ததால் வீடியோவை மற்றவர்களுக்கும் அனுப்பியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தனிமையில் இருந்ததை வீடியோ எடுத்து மிரட்டல்.. இளம்பெண் தற்கொலை!
இளம்பெண் தற்கொலை
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 22 Oct 2025 09:22 AM IST

தென்காசி, அக்டோபர் 22: தென்காசி அருகே தன்னுடன் தனிமையில் இருந்ததை காதலன் வீடியோ பதிவு செய்து  மிரட்டிய விவகாரத்தில் இளம்பெண் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள குறும்பலாப்பேரி அம்மன் நகரை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகனான சக்திவேல் ஆலங்குளம் அருகே உள்ள கிராமத்தில் இருக்கும் தனது உறவினரின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வருவது வழக்கமாக இருந்தது. அப்போது அதே ஊரைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை சந்தித்துள்ளார். அந்தப் பெண் திருமணமாகி 7 ஆண்டுகளாக குழந்தை இல்லாத நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது தாத்தா வீட்டில் வசித்து வந்துள்ளார்.

அந்த பெண்ணுடன் சக்திவேலுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அவர்கள் தனிமையில் சந்தித்து நெருங்கி பழகியதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தன்னுடன் அப்பெண் தனிமையில் இருந்ததை சக்திவேல் ரகசியமாக செல்போனில் வீடியோவாக பதிவு செய்து கொண்டார். பின்னர் அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடுவேன் என கூறி அந்த பெண்ணிடம் பணம் பறிக்க முடிவு செய்து மிரட்டியுள்ளார்.

Also Read: காதல் தொல்லை கொடுத்த இளைஞர்.. கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை!

அப்பெண்ணிடம் ரூ.3 லட்சம் பறித்த நிலையில் மேலும் ரூ.1 லட்சம் தர வேண்டும் என மிரட்டியுள்ளார். ஆனால் தன்னிடம் பணம் இல்லை என சக்திவேலுக்கு அந்த பெண் பதிலளித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சக்திவேல் தன்னுடன் அந்த பெண் நெருக்கமாக இருந்த ஆபாச வீடியோவை அதே பகுதியைச் சேர்ந்த தனது உறவினரின் செல்போனுக்கு அனுப்பியுள்ளார்.

இதனை பார்த்து அவர்களும் அந்த பெண்ணை மிரட்ட தொடங்கியுள்ளனர். இதனால் பயந்து போன அந்த பெண் தனது தாயாரிடம் நடந்தவற்றை கூறியுள்ளார். உடனடியாக ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று (அக்டோபர் 22) அந்தப் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் கதறி அழுதனர்.

மேலும் ஆலங்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இளம்பெண் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் தற்கொலை செய்து கொண்ட அந்தப் பெண் தனது சாவுக்கு சிலர் காரணம் என கூறி குறிப்பிட்ட பெயர்களை கடிதத்தில் எழுதி வைத்ததாக சொல்லப்படுகிறது.

Also Read: ஆன்லைன் வர்த்தக நஷ்டம்.. 2 மகன்களை கொன்று தந்தை தற்கொலை

அந்த கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதன் பேரில் அந்த பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக சக்திவேல், மருதம்புத்தூரை சேர்ந்த முத்துராஜா மற்றும் முருகேசன் ஆகிய மூன்று பேரை கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள அப்பெண்ணை மிரட்டிய சிலரை தேடி வருகின்றனர் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

(எந்தவொரு பிரச்னைக்கும் தற்கொலை ஒரு தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, மீண்டு வர கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம். மாநில உதவிமையம் : 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050)