திருட வந்த இடத்தில் பெண்ணிடம் அத்துமீறிய நபர்.. நடந்தது என்ன?

Kanyakumari Crime News: கன்னியாகுமரி குளச்சலில் திருட வந்தவன் வீட்டில் தனியிருந்த பெண்ணிடம் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளான். நகை, பணம் இல்லாததால் திட்டத்தை மாற்றிய அவன், தூங்கிக்கொண்டிருந்த பெண்ணின் மீது சபலப்பட்டு கத்திரிக்கோலால் தாக்கிய நிலையில் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருட வந்த இடத்தில் பெண்ணிடம் அத்துமீறிய நபர்.. நடந்தது என்ன?

குளச்சல் திருட்டு சம்பவம்

Updated On: 

07 Oct 2025 07:01 AM

 IST

கன்னியாகுமரி, அக்டோபர் 7: கன்னியாகுமரி மாவட்டத்தில் திருட வந்த இடத்தில் தன்னிலை மறந்து அங்கிருந்த பெண்ணிடம் அத்துமீறலில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள மீனவ கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதில் ஒரு வீட்டில் மீனவர் ஒருவர் இரவு பணிக்காக சென்றிருந்தார். அப்போது வீட்டில் அவருடைய 36 வயது மனைவி மட்டும் தனியாக தூங்கிக் கொண்டிருந்தார். நேற்று (அக்டோபர் 6) அதிகாலை நேரத்தில் ஒரு இளைஞர் வீட்டின் மேல் மாடி கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளார்.  சத்தமின்றி நுழைந்த அவர் வீட்டின் மற்றொரு அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் நகை, பணம் என ஏதாவது இருக்கிறதா என நோட்டமிட்டுள்ளார்.

திட்டத்தை கைவிட்ட திருடன்

ஆனால் அவர் எதிர்பார்த்தபடி விலை உயர்ந்த பொருள்கள் எதுவும் இல்லாததை கண்டு கடும் ஏமாற்றமடைந்தார். இதனைத் தொடர்ந்து மற்றொரு அறைக்குள் நுழைந்த போது அங்கு மீனவரின் மனைவி தூங்கிக் கொண்டிருந்தார். இதனைப் பார்த்த அந்த இளைஞர் தான் திருட வந்த திட்டத்தை கைவிட்டு விட்டு அப்பெண்ணின் மீது சபலம் கொண்டுள்ளார்.

Also Read: ஐஏஎஸ் படிக்க வைக்க உதவி.. பேராசிரியரிடம் ரூ.80 லட்சம் மோசடி செய்த பெண்!

மேலும் தான் கொண்டு வந்த கத்திரிக்கோலை கொண்டு அந்தப் பெண் அணிந்திருந்த நைட்டியை வெட்டி அவரிடம் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். ஏதோ தவறாக இருப்பது போல் தூக்கத்தில் உணர்ந்த பெண் திடுக்கிட்டு கண் விழித்துப் பார்த்தபோது இளைஞர் ஒருவன் நின்று கொண்டிருந்தான்.

இதனைக் கண்டு கடும் அதிர்ச்சியடைந்த அப்பெண் திருடன்.. திருடன்.. என கத்தி கூச்சலிட்டுள்ளார், ஆனால் அந்த இளைஞர் கத்தரிக்கோலை வைத்து அந்த பெண்ணின் கழுத்தில் கிடந்த தாலி செயினை பறிக்க முயன்றார். ஆனால் அதற்குள் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக அங்கு திரண்டனர். அவர்கள் வருவதற்குள் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த இளைஞர் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார்.

குறுகிய கால பணக்காரனாக ஆசை

இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் குளச்சல் போலீஸ் நிலையத்திற்கு செல்போன் மூலமாக தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் உள்ள பல்வேறு இடங்களிலும் தேடினர். அப்போது அங்கிருந்த குடியிருப்பு பகுதியில் பதுங்கி இருந்த இளைஞரை பிடித்து விசாரணை நடத்தினர்.

இதில் அந்த இளைஞர் கீழமுட்டம் பகுதியைச் சேர்ந்த சகாய ஜோஸ் என்பது தெரியவந்தது. இவர் திருட வந்த இடத்தில் இருந்த பெண்ணிடம் அத்துமீறலில் ஈடுபட்டதை ஒத்துக் கொண்டுள்ளார். மேலும், நான் சரியாக வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்த நிலையில் குறுகிய காலத்தில் பெரும் பணக்காரனாக ஆசைப்பட்டு திருட்டு தொழிலில் ஈடுபட்டு வந்தேன். அந்த வகையில் சம்பவத்தன்று அந்தப் பெண்ணின் வீட்டை நோட்டமிட்ட நிலையில் வாசலில் ஆண்கள் அணியும் செருப்பு இல்லாததை கண்டேன்.

Also Read: குளியலறை துளையில் இருந்த செல்போன்.. கோவையில் வசமாக சிக்கிய இளைஞர்!

இதனால் வீட்டில் கணவர் இல்லை என்பதை உறுதி செய்துக் கொண்டு மாடிக் கதவின் வழியாக கடப்பாரை கம்பியால் பூட்டை உடைத்து கொள்ளையடிக்கச் சென்றேன். ஆனால் வீட்டில் நகை, பணம் எதுவும் இல்லை. தொடர்ந்து மற்றொரு அறையில் தூங்கிக் கொண்டிருந்த அந்த பெண்ணை பார்த்தபோது எனக்கு பாலியல் ஆசை ஏற்பட்டது. இதனால் அவரிடம் அத்துமீறலில் ஈடுபட்டேன் என கூறியதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சகாயஜோஸை கைது செய்து இரணியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நாகர்கோயில் கிளைச்சிறையில் அடைத்தனர். சகாய ஜோஸ் மீது பல்வேறு காவல் நிலையங்களில் 8 திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், குளச்சல் மகளிர் காவல் நிலையத்தில் இரண்டு போக்சோ வழக்குகள் இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.