கோயம்புத்தூர், நவம்பர் 7 : கோயம்புத்தூர் (Coimbatore) இருகூர் அருகே ஒரு பெண் காரில் கடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இச்சம்பவம் குறித்து போலீசாரிடம் தகவல் தெரிவித்த பெண் கூறிய ஆடியோ பதிவை வெளியிட்டுள்ளனர். இருகூர் அருகே உள்ள ஏ.ஜி.புத்தூர் தீபம் நகர் பகுதியில் நவம்பர் 6, 2025 அன்று மாலை 6.30 மணியளவில் ஒரு வெள்ளை நிற கார் வேகமாக சென்றது. அந்த காருக்குள் ஒரு பெண் அலறியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அதனை பார்த்த ஒரு பெண் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பெண் வீடியோ வெளியிட்டார். அதில் தன்னை யாரும் கடத்தவில்லை என்றார்.
‘என்னை யாரும் கடத்தவில்லை’
கோயம்புத்தூர் இருகூர் அருகே பெண் காரில் கடத்தப்ப்டடதாக சர்ச்சை எழுந்தது. இந்த நிலையல் பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் புகார் தெரிவிக்காத நிலையில், இந்த வழக்கு மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கடத்தப்பட்ட பெண் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், தன்னை யாரும் கடத்தவில்லை என்றும் காரில் சென்றபோது கணவருக்கும் தனக்கும் பிரச்னை ஏற்பட்டதாக குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் கணவர் தன்னை அடித்ததாகவும், தானும் தன் கணவரை அடித்ததாகவும் விளக்கமளித்தார். இதனால் பெண் கடத்தப்பட்டதாக எழுந்த சர்ச்சை முடிவுக்கு வந்தது.
இதையும் படிக்க : தண்ணீர் லாரி மீது அரசு பேருந்து மோதி விபத்து.. ஓட்டுநர் உட்பட 2 பேர் உயிரிழந்த சோகம்..
சமூக வலைதளங்களில் இது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஏற்கனவே சில நாட்களாக கோவை விமான நிலையத்தின் பின்புறம் ஒரு பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், தற்போது மீண்டும் இதுபோன்ற நடந்ததா என்ற கேள்விகள் எழுந்தன. மேலும், காரின் பதிவு எண் தெளிவாக காட்சியில் இல்லாததால் காவல்துறை விசாரணையில் சிக்கல் நிலவியதாக கூறப்படுகிறது. மேலும் பாதிக்கப்பட்ட தரப்பில் இருந்து புகாரும் அளிக்காத நிலையில் இந்த வழக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் விளக்கமளித்துள்ளார். அப்போது பேசிய அவர், சிசிடிவி காட்சிகளில் காரில் பெண் இருந்ததற்கான அடையாளங்கள் தெளிவாக இல்லை. மேலும், பெண் தரப்பில் இருந்து எந்த புகாரும் தெரிவிக்கவில்லை என்றார். மேலும் பெண் கடத்தப்பட்டதாக புகார் அளித்த பெண்ணின் ஆடியோவையும் அவர் வெளியிட்டுள்ளார்.
இதையும் படிக்க : திருப்பூரில் 17 வயது சிறுமி கர்ப்பம்… தந்தையும் காதலனும் போக்சோவில் கைது – பரபரப்பு சம்பவம்
புகார் அளித்த பெண் சொல்வது என்ன?
வெளியான ஆடியோவில் புகார் அளித்த பெண் தெரிவித்ததாவது, “நான் ஒரு எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன். நேற்று மாலை ஆறு மணி அளவில் வேலை முடித்து வீட்டுக்கு நடந்து வந்துகொண்டிருந்தேன். அப்போது, பவர் ஹவுஸ் அருகே ஒரு வெள்ளை நிற கார் நின்றிருந்தது. அதில் ஒரு ஆண், ஒரு நடுத்தர வயது பெண் இருந்தார்கள். அந்த ஆண் வெள்ளை சட்டை அணிந்திருந்தார்; பெண் பிங்க் ஸ்வெட்டர் மற்றும் வெள்ளை துப்பட்டா போட்டிருந்தார்.
அந்த ஆண், காரில் இருந்த பெண்ணின் கழுத்தை பிடித்து நெறித்தார். அந்த பெண் வலியுடன் அலறினார். நான் அதை பார்த்ததும் பயந்தேன். அப்போது சாலையில் சென்ற வாகனங்களை நிறுத்தி உதவி கேட்டேன். யாரும் உதவ முன்வரவில்லை பின்னர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததாக கூறினார்.
