வீட்டில் இருந்தே அதிக பணம் சம்பாதிக்கலாம்.. ஆசை வார்த்தையால் ரூ.14 லட்சத்தை இழந்த பெண்!
Work From Home Scam | சைபர் கிரைம் குற்றங்களில் வீட்டில் இருந்தே வேலை செய்வது தொடர்பான மோசடி ஒரு பெரிய பிரச்னையாக உள்ளது. இந்த நிலையில், திருவாரூரை சேர்ந்த பெண் ஒருவர் அத்தகைய வேலை வாய்ப்பு மோசடியில் ரூ.14 லட்சத்தை இழந்துள்ளார்.
திருவள்ளூர், டிசம்பர் 29 : திருவாரூர் (Thiruvarur) மாவட்டம், திருத்துறைப்பூண்டி பகுதியை சேர்ந்த பீர் முகமது என்பவர் வெளிநாட்டில் வேலை செய்துக்கொண்டு வருகிறார். அவரது மனைவி திருவாரூரில் வசித்து வருகிறார். இந்த நிலையில், அவரது மனைவியின் வாட்ஸ்அப் (WhatsApp) எண்ணுக்கு புதிய எண்ணில் இருந்து குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அதில், வீட்டில் இருந்தபடியே லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்க வேலை வாய்ப்பு உள்ளது என கூறப்பட்டுள்ளது.
வேலை மோசடி – ரூ.14 லட்சம் பணத்தை இழந்த பெண்
வீட்டில் இருந்து அதிக பணம் சம்பாதிக்கலாம் என கூறப்பட்டு இருந்த நிலையில், அது குறித்து மிகுந்த ஆர்வமடைந்த பீர் முகமதின் மனைவி, அதில் கொடுக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணை தொடர்ப்புக்கொண்டு பேசியுள்ளார். அப்போது அவர்கள் முதலில் ரூ.2 லட்சம் முதலீடு செய்ய வேண்டும் என்று அந்த பெண்ணிடம் கூறியுள்ளனர். அதுமட்டுமன்றி, அதிக பணம் முதலீடு செய்தால் அதிக லாபம் பெற முடியும் என்றும் அவர்கள் அந்த பெண்ணுக்கு ஆசை வார்த்தைகளை கூறியுள்ளனர்.
இதையும் படிங்க : பொங்கல் நாளில் நடைபெறவிருந்த சிஏ தேர்வு தேதி மாற்றம் – சு.வெங்கடேசன் கருத்து
பணம் திரும்ப கிடைக்காததால் அதிர்ச்சியடைந்த பெண்
அவர்கள் கூறியதை அப்படியே நம்பிய அந்த பெண், மொத்தமாக ரூ.14 லட்சத்து 42 ஆயிரம் பணத்தை செலுத்தியுள்ளார். ஆனால், அந்த பெண் எதிர்ப்பார்த்ததை போல அவருக்கு வருமானம் எதுவும் கிடைக்காமல் இருந்துள்ளது. அதுமட்டுமன்றி, அந்த பெண் தான் முதலீடு செய்த பணத்தை பெற முடியவில்லை என்பது அவருக்கு தெரிய வந்துள்ளது. இதனால் கடும் அதிர்ச்சிக்கு உள்ளான அந்த பெண் இந்த விவகாரம் தொடர்பாக உடனடியாக சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
இதையும் படிங்க : தஞ்சாவூர் மருத்துவமனையில் கிடைத்த புதையல்…. ரூ.9 லட்சம் மதிப்பு – மருத்துவர்கள் ஆச்சரியம்
விசாரணை மேற்கொண்டு வரும் காவல்துறை
பெண்ணின் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், இந்த விவகாரம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவில் முதலீடு மற்றும் வேலைவாய்ப்பு மோசடி சம்பவங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், திருவாரூர் பெண் வீட்டில் இருந்தே அதிக அளவு வருமானம் பெற முடியும் என நம்பி ரூ.14 லட்சம் பணத்தை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.