வெற்றி வாய்ப்புள்ள 28 தொகுதிகள் எவை?.. காங்கிரஸ் நிர்வாகிகளுடன் மேலிட பார்வையாளர்கள் ஆலோசனை..
தற்போது காங்கிரஸ் வசம் இருக்கும் 18 தொகுதிகளில் 10 இடங்கள் காங்கிரசுக்கு வழங்கப்படும் என்றும், எம்எல்ஏக்கள் மீது மக்கள் அதிருப்தியாக உள்ள 8 இடங்களை திமுக தேர்வு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே, ஏற்கனவே காங்கிரஸ் வசம் உள்ள தொகுதிகளில் 10 மற்றும் கூடுதலாக 18 தொகுதிகள் தேர்வு செய்யப்பட உள்ளது.

காங்கிரஸ் நிர்வாகிகளுடன் மேலிட பார்வையாளர்கள் ஆலோசனை..
சென்னை, மார்ச் 09: காங்கிரஸ் கட்சிக்கு வெற்றிவாய்ப்பு உள்ள 28 தொகுதிகள் குறித்து நிர்வாகிகளுடன் மேலிட பார்வையாளர்கள் நேற்று ஆலோசனை நடத்தினர். திமுக கூட்டணியில் கடும் இழுபறிக்கு இடையே காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், திமுகவிடம் எந்தெந்த தொகுதிகளை கேட்டுப் பெறுவது, காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு மிகுந்த தொகுதிகளை தேர்ந்து எடுப்பது குறித்த ஆலோசனை கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில், மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக சட்டமன்ற தேர்தலுக்கான அகில இந்திய காங்கிரஸ் மூத்த பார்வையாளரான முகுல் வாஸ்னிக் மற்றும் குவாசி முகமது நிஜாமுதீன் ஆகியோர் பங்கேற்றனர்.
மேலும் படிக்க: அதிமுக – பாஜக கூட்டணியில் இணையும் தவெக?.. திமுகவின் மெகா கூட்டணியால் மாறும் எதிர்கட்சிகளின் வியூகம்..
எம்எல்ஏக்கள், எம்.பிக்களுடன் ஆலோசனை:
இந்த கூட்டத்திற்கு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், தேசிய செயலாளர் நிவேதித் ஆல்வா, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், எம்.பி.க்கள் சசிகாந்த் செந்தில், கார்த்தி சிதம்பரம், விஜய் வசந்த், எம்எல்ஏக்கள் ரூபி மனோகரன், துரை சந்திரசேகர், மூத்த தலைவர்கள் திருநாவுக்கரசர், பீட்டர் அல்போன்ஸ், கே.ஆர்.ராமசாமி, மாநில துணைத் தலைவர்கள் கோபண்ணா, சொர்ணா சேதுராமன், பொதுச்செயலாளர் பி.வி.தமிழ்ச்செல்வன், எஸ்.சி.துறை மாநில தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார், மகளிரணி தலைவி ஹசீனா சையத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
28 தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெற வேண்டும்:
கூட்டத்தில் கலந்து கொண்ட மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்துள்ளனர். அதில், காங்கிரஸ் வெற்றி பெறும் தொகுதிகளை கண்டறிந்து தேர்வு செய்ய வேண்டும். ஒரு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் அதே தொகுதியில் வசிப்பவராக, பொருளாதாரத்தில் சிறந்தவராக, கட்சி ரீதியாக மக்களோடு தொடர்பு உடையவராக இருக்க வேண்டும். மேற்கண்ட அடிப்படையில் மிகவும் தகுதி வாய்ந்த நபர்களை தேர்வு செய்து போட்டியிடும் 28 தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெற வேண்டும் என்று கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்.
18-ல் 10 தொகுதிகள் உறுதி:
தற்போது காங்கிரஸ் வசம் இருக்கும் 18 தொகுதிகளில் 10 இடங்கள் காங்கிரசுக்கு வழங்கப்படும் என்றும், எம்எல்ஏக்கள் மீது மக்கள் அதிருப்தியாக உள்ள 8 இடங்களை திமுக தேர்வு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே, ஏற்கனவே காங்கிரஸ் வசம் உள்ள தொகுதிகளில் 10 மற்றும் கூடுதலாக 18 தொகுதிகள் தேர்வு செய்யப்பட உள்ளது. இதற்காக 40 தொகுதிகள் அடங்கிய பட்டியல் விரைவில் தயார் செய்யப்பட்டு திமுகவிடம் வழங்கப்பட உள்ளது. அதற்கான தேர்வுக்கு மூவினர் விரைவில் அறிவிக்கப்பட்டு 40 தொகுதிகள் தேர்வு செய்யப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோன்று, புதுச்சேரி காங்கிரஸ் மூத்த நிர்வாகிகளான தேவதாஸ், தனுஷ், இளையராஜா, செந்தில் குமார், மோகன்தாஸ் உள்ளிட்டோருடனும் முகுல் வாஸ்னிக் உள்ளிட்ட மேலிட பொறுப்பாளர்கள் ஆலோசனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: கடலோர மாவட்டங்களில் மழை எச்சரிக்கை.. இயல்பை விட அதிகரிக்கும் வெப்பம்.. வானிலை நிலவரம் இதோ..
பாஜக பக்கம் செல்லமாட்டார்கள்:
கூட்டத்திற்கு பின்னர் முகுல் வாஸ்னிக் நிருபர்களிடம் கூறியதாவது, எங்கள் தலைவர்கள் தமிழகத்தில் பிரசாரத்தில் ஈடுபடுவார்கள். எப்போது அவர்களின் தேதிகள் உறுதி செய்யப்படுமோ அப்போது அறிவிக்கப்படும். அதேநேரத்தில் பாஜக தலைவர்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் வரலாம், அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்கள் பாஜகவின் பக்கம் செல்லமாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.