எம்ஜிஆரை பின்பற்றும் விஜய்.. 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி கிடைக்குமா?
Thalapathy Vijay: விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 2026 தேர்தலில் திமுகவுக்கு சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கட்சி தொடங்கி 14 மாதங்களே ஆனாலும், விஜய்யின் செல்வாக்கு அரசியல் களத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என சொல்லப்படும் நிலையில் அதனைப் பற்றிக் காணலாம்.

தமிழக வெற்றிக் கழகத்தின் (Tamilaga Vettri Kazhagam) தலைவர் விஜய்யின் (Thalapathy Vijay) பொதுக்குழு பேச்சு அரசியல் உலகையே ஆட்டம் காண வைத்திருக்கிறது. 2026 ஆம் ஆண்டு அரசியல் களம் திராவிட முன்னேற்றக் கழகம் (DMK) vs தமிழக வெற்றிக் கழகம் என்று தான் இருக்கும் எனவும் தெரிவித்திருந்தார். கட்சி தொடங்கி 14 மாதங்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில் விஜய்யின் இந்த பேச்சு உண்மையில் தேர்தல் வெற்றியாக மாறுமா என்றால் கேள்விக்குறியாகவே உள்ளது. எம்ஜிஆர் பாணியை விஜய் கையிலெடுக்கிறார் என சொல்லப்படும்போதெல்லாம் அது சினிமாவில் மட்டுமே சாத்தியம் என பலரும் சொன்னார்கள். ஆனால் அரசியலில் அவர் எடுக்கப்போகும் அடுத்தடுத்த அடி எப்படி இருக்கப்போகிறது, மக்களிடம் வாக்குகளைப் பெற என்ன செய்ய வேண்டும் என ஒரு விவாதமே சமூக வலைத்தளங்களில் எழுந்துள்ளது.
எம்ஜிஆர் திராவிட முன்னேற்ற கழகம் என்ற கட்சியில் இருந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் கட்சியை தொடங்கினார். எம்ஜிஆர் திமுகவில் இருந்து பிரிந்தபோது அவரோடு வந்தவர்களில் கட்சி ரீதியான தொண்டர்களும் இருந்தனர். சினிமா ரீதியான ரசிகர்களும் இருந்தனர். ஆனால் விஜய் நேரடியாகவே அரசியல் கட்சியை தொடங்கினார். அவர் இதற்கு முன்னால் அரசியல் கட்சிக்கு தேர்தலில் ஆதரவு தெரிவித்தார். மேலும் தனது தொண்டர்களை உள்ளாட்சி தேர்தலில் களம் காண செய்து மக்களின் எண்ணத்தை பரிசோதித்தார்.
எம்ஜிஆர் அதிமுகவை தொடங்குவதற்கு முன்னரே அவர் திமுக சார்பில் சட்டமன்ற மேலவை உறுப்பினர், எம்.எல்.ஏ. என இரு பதவிகளை வகித்தவர். அப்படியான நிலையில் அதிமுகவை தொடங்கி அவர் முதலமைச்சர் ஆனதெல்லாம் இன்றளவும் வரலாற்றில் புதிதாக எழுதப்பட்ட பக்கங்கள். அண்ணாவின் திராவிட கொள்கைகளை சரியாக பின்பற்றினார். தனது படங்கள் மூலம் மக்களுக்கு தான் நல்லது செய்பவன் என எடுத்துரைத்தார்.
களத்துக்கு வந்தால் காட்சி மாறும்
விஜய் மக்கள் பிரச்னையில் குரல் கொடுக்காமல் இல்லை. ஆனால் அவர் மிக பின்னால் இருந்து மட்டுமே குரல் எழுப்புகிறார். தான் களத்திற்கு வந்தால் மக்கள் கூட்டம் கூடும் என சொல்கிறார். அதனால் பாதிக்கப்பட்டவர்களை பனையூர் அலுவலகத்திற்கு வரவழைத்து சந்திக்கிறார். என்னதான் திரை மூலம் மக்களிடையே விஜய் ஒரு அபிப்ராயம் கொண்டிருந்தாலும், களத்தில் முன்னால் வந்து நிற்கும்போது நடக்கும் மாற்றம் அல்லது நிகழ்வு என்பது மிகவும் யதார்த்தமாக அமையும்.
அன்று திமுகவை விரட்ட அதிமுகவை எம்ஜிஆர் தொடங்கினார். இன்று அதே திமுகவுக்கு எதிராக விஜய் வந்து நிற்கிறார். பாஜக, நாம் தமிழரை கேட்டால் திமுக தான் எதிரி என சொல்கிறார்கள். ஆக திமுகவை தேர்தலில் தோற்கடிக்க ஒரு பக்கம் கூட்டணியில் இல்லாமல் தனித்தனியாக கட்சிகள் களமிறங்குகிறது. தேர்தல் அறிவிக்கும் முன் வரை கூட்டணி பற்றி மதிப்பிட முடியாது. ஒருவேளை கட்சிகள் அனைத்தும் தனித்தனியாக போட்டியிட்டால் நிச்சயம் வாக்குகள் சிதறும். ஆனால் தமிழக வெற்றிக் கழகம் 2026 சட்டமன்ற தேர்தலில் குறிப்பிடத்தகுந்த வாக்குகளைப் பெறும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.
விஜய்யின் பாணி என்ன?
அதேசமயம் தேர்தல் வாக்குறுதிகள் தொடங்கி பணம், பரிசுப்பொருட்கள் என வழங்கி மக்களைக் கவர்ந்து வாக்குகளைப் பெற கட்சிகள் களமிறங்கும் நிலையில் விஜய் எந்த வகையில் வாக்குகளைப் பெறப் போகிறார் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. ஜூன் முதல் விஜய்யின் எழுச்சி என சொல்லப்படுவதால் பொறுத்திருந்து பார்க்கலாம்.