அஜித், விக்ரம் படங்கள் வெற்றிப்படங்களா? ரசிகர்களை ஏமாத்தாதீங்க – திருப்பூர் சுப்ரமணியம் ஓபன் டாக்
Tiruppur Subramaniam: தமிழ் சினிமாவில் நிகழ்த்தப்படும் மாயைகளை அவ்வப்போது வெளிப்படையாக பேசி வருபவர் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம். இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நடிகர்கள் அஜித் மற்றும் விக்ரம் படங்கள் தோல்வியடைந்தது என்று ஓபனாக பேசியது தற்போது வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமாவில் நடிகர்களும் இயக்குநர்களும் பிரபலமாக இருப்பது போல ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் (Tirupur Subramaniam). இவர் அவ்வப்போது தமிழ் சினிமாவில் உள்ள கள நிலவரங்களை வெளிப்படையாக பேசுவதால் ரசிகர்களிடையே பிரபலமாக உள்ளார். உச்ச நட்சத்திரங்களாக இருந்தாலும் அவர்களு படங்கள் திரையரங்கில் வரவேற்பு இல்லை என்றால் அதனை வெளிப்படையாக பேசும் தைரியம் உடையவர் இவர். அவ்வப்போது சினிமா கள நிலவங்கள் குறித்து பேசுவதும் இணையத்தில் வைரலாகும். அந்த வகையில் இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான நடிகர்கள் அஜித் குமார் மற்றும் விக்ரம் படங்கள் தோல்வி என்று பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சமீபத்தில் நடிகர் சித்ரா லக்ஷ்மனின் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்தார் திருப்பூர் சுப்ரமணியம். அப்போது அவரிடம் இந்த ஆண்டில் வெற்றிப்படங்கள் என்று இணைதளங்களில் உலா வரும் குட் பேட் அக்லி, டிராகன், விடாமுயற்சி, ரெட்ரோ, மத கஜ ராஜா, வீர தீர சூரன், குடும்பஸ்தன், டூரிஸ்ட் ஃபேமிலி. இந்தப் படங்கள் தான் திரையரங்குகளில் வெற்றிப் படங்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது.
விடாமுயற்சி மற்றும் வீர தீர சூரன் படங்கள் வெற்றிப்படமா?
இதற்கு பதிலளித்துப் பேசிய திருப்பூர் சுப்ரமணியம், வீர தீர சூரன் எல்லாம் வெற்றிப்படம் என்று சொன்னால் நான் நிச்சயமாக ஏற்றுக்கொள்ள மாட்டேன். படம் ஓடும்போது அதப் பத்தி பேசல ஆனா இப்போ நிச்சயமா சொல்றேன் அதெல்லாம் வெற்றிப்படம் இல்லை. ஆனால் அந்தப் படம் வெற்றியடைந்தது என்று ஆள் உயர மாலையை விக்ரமிற்கு போட்டு கொண்டாடுகிறார்கள். அவர்களிடம் கேட்டால் இது எல்லாம் புரமோஷன் என்று கூறுகிறார்கள் என வெளிப்படையாக பேசினார்.
அதே போல இந்த ஆண்டின் தொடக்கத்தில் வந்த அஜித்தின் விடாமுயற்சி படமும் நிச்சயமாக வெற்றிப்படம் இல்லை என்றும் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். சும்மா விடாமுயற்சியும் வீர தீர சூரனும் வெற்றிப்படம்னு சொல்லிக்கலாம். ஆனா அது நிஜமாவே வெற்றியடையவில்லை. வேண்டும் என்றால் பெரிய நடிகர்களின் படங்கள் என்று வேணா சொல்லாம் என்று திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
குட் பேட் அக்லி குறித்து திருப்பூர் சுப்ரமணியம் பேசியது:
தொடர்ந்து பேசிய திருப்பூர் சுப்ரமணியம், குட் பேட் அக்லியாவது ஏதாவது ஒரு வகையில் வெற்றிப்படம் என்று கூறலாம். காரணம் வசூலில் அது அதிகம் வசூலித்தது. படத்தோட தரம் வேற மாதிரி இருந்தாலும் அந்தப் படம் தியேட்டரில் வசூல் செய்தது. ஆனால் வீர தீர சூரனும் வசூல் ஆகல விடாமுயற்சியும் வசூல் ஆகவில்லை என்று தெரிவித்தார்.
மேலும், அமரன் படத்திற்கு வெற்றி விழா கொண்டாடினார்கள். நீங்கள் கொண்டாடுங்கள் காரணம் அது எல்லா தரப்பினருக்கும் வெற்றிப்படமாக அமைந்தது. சிவகார்த்திகேயன் என்ன எனக்கு மாமனா மசானா இப்படி நான் சொல்றதுக்க்கு. படம் வெற்றிப்படம் அதனால தான் சொல்றேன்.
அதே போல டூரிஸ்ட் ஃபேமிலி படத்திற்கு வெற்றிவிழா கொண்டாடுங்க. எல்லாரையும் கூப்பிட்டு சிறப்பா கொண்டாடுங்க. ஏன்னா வெற்றி விழா கொண்டாட தகுந்த படம் அது என்றும் திருப்பூர் சுப்ரமணியம் அந்தப் பேட்டியில் பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.