என்எல்சி அனல்மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து.. தீயை அணைக்க தொடரும் போராட்டம்!
Fire Accident in NLC | கடலூர் என்எல்சி அனல்மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில், தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடி வருகின்றனர். பல மணி நேரமாக தீ கொழுந்துவிட்டு எரிந்து வரும் நிலையில் பல கோடி மதிப்பிலான பொருட்கள் சேதமானதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடலூர், மே 11 : கடலூர் அடுத்த நெய்வேலியில் உள்ள என்எல்சி (NLC – Neyveli Lignite Corporation) அனல்மின் நிலையத்தில் இன்று ( மே 11, 2025) காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அனல்மின் நிலைய விரிவாக்கத்தின்போது மின்மாற்றியில் (Transformer) ஏற்பட்ட மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்கு பல மணி நேரமாக பற்றி எரியும் தீயை கட்டுக்குள் கொண்டுவர தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். இந்த நிலையில் நெய்வேலி அனல்மின் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
நெய்வேலி அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்எல்சி அனல்மின் நிலையத்தில் இன்று ( மே 11, 2025) காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அனல்மின் நிலையத்தில் இரண்டாவது அனல்மின் நிலைய விரிவாக்கத்தின்போது மின்மாற்றியில் ஏற்பட்ட பழுதின் காரணமாக அனல்மின் நிலையம் முழுவதும் தீ பற்றியதாக கூறப்படுகிறது. அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக அந்த பகுதியே புகை சூழ்ந்து இருட்டாக காட்சியளிக்கிறது. இதன் காரணமாக அந்த பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடி வரும் தீயணைப்பு துறை
நெய்வேலி அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட இந்த தீ விபத்தின் தகவல் அறிந்து சென்ற தீயணைப்பு துறையினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். காலை முதலே அனல்மின் நிலையத்தி தீ கொழுந்துவிட்டு எரிவதால், தீயை கட்டுக்குள் கொண்டுவர தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக அனல்மின் நிலையம் எரிந்து வரும் நிலையில் அங்கு கோடிக்கணக்கான மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமாகி இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.