Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கேன் தண்ணீர் குடிக்கிறீர்களா? மறைந்திருக்கும் அழுக்குகள் – எப்படி சுத்தம் செய்வது?

Water Can Cleaning Tips : சமீப காலமாக சென்னை போன்ற பெரு நகரங்களில் மக்கள் குடிப்பதற்கு கேன் வாட்டரை நம்பியே இருக்கிறார்கள்.அப்படி நமக்கு வழங்கப்படும் வாட்டர் கேன் வெளிப்புறம் சுத்தமாக தெரிந்தாலும், உள்ளே பாசி, பூஞ்சை, மண் துகள்கள் போன்ற கிருமிகள் இருக்க வாய்ப்பு அதிகம். இது உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியது. இந்த கட்டுரையில் வாட்டர் கேனை எப்படி சுத்தம் செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.

கேன் தண்ணீர் குடிக்கிறீர்களா? மறைந்திருக்கும் அழுக்குகள் – எப்படி சுத்தம் செய்வது?
மாதிரி புகைப்படம்
karthikeyan-s
Karthikeyan S | Published: 01 Jul 2025 22:48 PM

சமீப காலமாக பெரு நகரங்களில் குடிநீருக்கு (Drinking Water) ஆதாரமாக இருப்பது கேன் வாட்டர்கள் தான். ஆர்ஓ மெஷின்கள் (RO Water Purifier ) விலை அதிகம் மற்றும்  அதன் பராமரிப்பு செலவும் அதிகம் என்பதால் மக்கள் பெரும்பாலும் கேன் வாட்டர்களையே விரும்புகின்றனர். தண்ணீர் கேன்களின் வெளிப்புறத்தில் இருந்து பார்க்கும் போது சுத்தமாக இருந்தாலும் அதில் அழுக்குகள் நிறைந்திருக்கும். இதனால் வழக்கமான முறையில் கழுவினால் கிருமிகள் போகாது. குறிப்பாக அவற்றுக்குள் கண்ணுக்கு தெரியாத அளவுக்கு மண் துகள்கள், குப்பைகள் மற்றும் பாசிகள் படிந்திருக்க வாய்ப்பு உள்ளது. சில சந்தர்ப்பங்களில், உட்புறச் சுவர்கள் மஞ்சள் நிறமாக மாறியிருப்பது போல் தோன்றும். இது பூஞ்சை அல்லது பாசிகள் படிந்திருப்பதற்கான அறிகுறியாகும். இந்த தண்ணீரை நாம் குடித்தாலோ அல்லது சமையலுக்கு பயன்படுத்தினாலோ, அது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். எனவே குறைந்தது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறையாவது நன்கு சுத்தம் செய்வது அவசியம்.

வாட்டர் கேனை சுத்தம் செய்ய தேவையான பொருட்கள்

  • சாதாரண உப்பு அல்லது கல் உப்பு
  • சமையல் சோடா
  • பாத்திரங்களைக் கழுவும் ஜெல்
  • எலுமிச்சை
  • ஒரு கிளாஸ் தண்ணீர்
  • தேய்க்கும் தூரிகை

எப்படி சுத்தம் செய்வது..?

தண்ணீர் கேனை சுத்தம் செய்வதற்கு முன், அதிலுள்ள தண்ணீரை வீணாக்காமல் தாவரங்களுக்கோ அல்லது பிற நோக்கங்களுக்காகவோ பயன்படுத்தவும். பின்னர் காலியான கேனில் 3 டீஸ்பூன் உப்பு சேர்த்து, நன்றாகக் கலந்து, கேனைச் சுற்றி சுழற்றுங்கள். இது பாசிகளை சேதப்படுத்த உதவுகிறது. பின்னர் இரண்டு டீ ஸ்பூன் பேக்கிங் சோடாவைச் சேர்த்து மீண்டும் நன்றாகக் கலக்கவும். கேனில் உள்ள துர்நாற்றத்தை நீக்குவதற்கு இது முக்கியமானது.

பின்னர் மூன்று டீ ஸ்பூன் பாத்திரங்களைக் கழுவ பயன்படுத்தும் ஜெல்லை சேர்த்து, இரண்டு கிளாஸ் தண்ணீரில் கலந்து 10 நிமிடங்கள் ஊற வைக்கவும். ஊறவைத்த பிறகு, தண்ணீர் கேனை மூடி நன்றாக குலுக்கவும். இப்படி சுமார் 10 நிமிடங்கள் சுழற்றினால் உள்ளே சேர்ந்துள்ள அழுக்குகள் வெளியே வந்துவிடும். பின்னர் வழக்கமாக தண்ணீர் சுற்றி ஒரு முறை நன்கு அலசவும். பின்னர் வெளிப்புற பகுதிகளை  ஒரு ஸ்க்ரப்பரைப் பயன்படுத்தி நன்கு சுத்தம் செய்யவும்.

நுரைத்த தண்ணீரை முழுவதுமாக கீழே ஊற்றிய பிறகு, கேனை சுத்தமான தண்ணீரில் நான்கைந்து முறை நன்கு கழுவவும். பாத்திரங்களைக் கழுவும் ஜெல்லின் வாசனை முற்றிலும் நீங்கிவிட்டதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு எலுமிச்சையின் சாற்றை கேனில் பிழிந்து, ஒரு கிளாஸ் தண்ணீர் சேர்த்து, மீண்டும் கழுவவும். இது மீதமுள்ள வாசனையை முற்றிலுமாக நீக்கும். இந்த செயல்முறை முடிந்ததும், உங்கள் தண்ணீர் கேன் புதியது போல் பிரகாசிக்கும். துர்நாற்றமும் இருக்காது.