கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல்.. மதுரையில் போக்குவரத்து மாற்றம்!
மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளுதல் மே 12, 2025 அன்று நடைபெற உள்ளது. இதனால், மதுரை நகரில் போக்குவரத்து மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ராமராயர் மண்டபம், ஏவி மேம்பாலம், யானைக்கல் புதுப்பாலம் ஆகிய வழிகளில் வாகனம் செல்ல அனுமதி கிடையாது.

மதுரை, மே 11: மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் (Madurai Meenakshiamman Temple) சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் (Kallazhagar) வைகை ஆற்றில் எழுந்தருளல் நிகழ்ச்சி 2025, மே 12 ஆம் தேதி நடக்கவுள்ள நிலையில் மதுரை மாநகரில் செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றம் பற்றிக் காணலாம். தென் தமிழகத்தின் மிக பிரபலமான சித்திரை திருவிழாக்களில் முதன்மையானது மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நடைபெறுவதாகும். 20 நாட்கள் நடக்கும் இந்த விழாவில் மீனாட்சியம்மன் பட்டாபிஷேகம், திக் விஜயம், திருக்கல்யாணம், திருத்தேரோட்டம், கள்ளழகர் எதிர்சேவை, கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல், தேனூர் மண்டபத்தில் காட்சி கொடுத்தல் என பல நிகழ்வுகள் நடைபெறும். வைகை ஆற்றில் எழுந்தருள கள்ளழகர் அழகர் மலையில் இருந்து புறப்பட்டு பக்தர்களுக்கு எதிர்சேவை ஆற்றிக் கொண்டிருக்கிறார். 2025, மே 12ல் காலை 5.45 மணியில் இருந்து 6.05 மணிக்குள் அவர் வைகை ஆற்றில் எழுந்தருள உள்ளார்.
இதனால் மதுரை நகரமே திரும்பும் திசையெங்கும் மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிகிறது. அனைத்து இடங்களிலும் காவல்துறையினர் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்து காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் அறிவுரை வழங்கியுள்ளது. இந்த நிலையில் தான் மதுரை மாநகரில் 2025, மே 12 ஆம் தேதி செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றம் பற்றியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
என்னென்ன மாற்றங்கள் தெரியுமா?
அதன்படி ராமராயர் மண்டபத்திற்கு செல்லும் வழி, ஏவி மேம்பாலம், யானைக்கல் புது பாலம் ஆகியவை வழியாக எந்த வாகனத்திற்கும் அனுமதி இல்லை. ஓபுலா படித்துறை, வைகை நதியின் தென்கரை மற்றும் வடகரை பகுதியில் கார் மற்றும் எந்த வாகனங்களும் நிறுத்தக்கூடாது. அதைப்போல் தென்பகுதியில் இருந்து ஏவி பாலம் மற்றும் செல்லூர் புது பாலம் வழியாக வைகை வடகரைக்கு எந்த வாகனமும் வருவதற்கு அனுமதி இல்லை.
மேலும் கேகே நகர், புது நத்தம் ரோடு, அழகர் கோவில் சாலை, அண்ணா நகர் மற்றும் மதுரை மாநகரின் பிற பகுதிகளில் இருந்து வரும் கார்கள் அனுமதி அட்டை வைத்திருந்தால் அனுமதிக்கப்பட்ட இடங்களில் நிறுத்த வேண்டும். அதன்படி பச்சை நிற அனுமதி அட்டை பெற்றவர்கள் ஏவி பாலத்தின் தெற்கு பக்க நுழைவு வாயில் பகுதியில் நிறுத்தவும். ஊதா நிற அட்டைப் பெற்றவர்கள் அண்ணா பஸ் நிலையத்திலும் வாகனங்களை நிறுத்தலாம்.
இதேபோல் அழகர் கோவில் சாலை, புதுநத்தம் சாலை, மேலூர் சாலையிலிருந்து கீழவாசல், சிம்மக்கல், நத்தம் ரோடு சந்திப்பு, ரேஸ்கோர்ஸ் சந்திப்பு, பாண்டியன் ஹோட்டல் சந்திப்பு, மாவட்ட நீதிமன்றம், பெரியார் சிலை சந்திப்பு ,கே கே நகர் ஆர்ச், ஆவின் சந்திப்பு ,கே கே நகர் சாலை அரவிந்த் மருத்துவமனை சந்திப்பு, குருவிக்காரன் சாலை, முனி சாலை சந்திப்பு, காமராஜர் சாலை, செயின்ட் மேரிஸ் சந்திப்பு, பழைய குயவர் பாளையம், தெற்கு வெளி வீதி வழியாக செல்ல வேண்டும்.
எங்கு வாகனங்களை நிறுத்தலாம்?
பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து வரும் வாகனங்கள் புது நத்தம் சாலை, அழகர் கோவில் சாலை மற்றும் மேலூர் ரோட்டிற்கு செல்ல வேண்டிய நிலை இருந்தால் அவர்கள் கட்டபொம்மன் சிலை வழியாக தெற்கு மாரட் வீதி, மஹா சாலை, கீழவாசல் சந்திப்பு, காமராஜர் சாலை, முனி சாலை சந்திப்பு, குருவிக்காரன் சாலை, அரவிந்த் மருத்துவமனை, ஆவின் சந்திப்பு, கே கே நகர் சாலை வழியாக மேலூர் ரோட்டுக்கு செல்ல வேண்டும். தத்தனேரி ரோட்டில் இருந்து மேலூருக்கு செல்ல வேண்டிய வாகனங்கள் அனைத்தும் எல்ஐசி சந்திப்பு, குலமங்கலம் ரோடு, செல்லூர் 60 அடி சாலை, பிடி ராஜன் சாலை வழியாக செல்ல வேண்டும்.
கள்ளழகர் ஆட்சியில் இறங்கும் போது தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் தங்களது நான்கு மற்றும் இருசக்கர வாகனங்களை காந்தி மியூசியம் மைதானம், ரேஸ்கோர்ஸ் மைதானம், காமராஜர் பல்கலைக்கழக மைதானம், சாய்ராம் பள்ளி, டாக்டர் தங்கராஜ் சாலை, பொதுப்பணித்துறை அலுவலகம், தமுக்கம் மைதான வாகன நிறுத்தம், வடக்கு மாசி வீதி, கீழமாசி வீதி, காமராஜர் சாலை ஆகிய இடங்களில் நிறுத்திக் கொள்ள அனுமதி வழங்கப்படும்.
மேலும் கீழ வெளி வீதியில் அம்சவல்லி சந்திப்பு தொடங்கி கீழே வாசல் வரையிலும், கீழமாசி வீதியில் தேரடி தொடங்கி விளக்கு தூண் வரையிலும், வடக்கு மாசி வீதியிலும் சாலையின் ஓரமாக வாகனங்களை நிறுத்திக் கொள்ள அனுமதி வழங்கப்படும் அதே சமயம் அம்சவல்லி சந்திப்பில் இருந்து அண்ணா சிலை சந்திப்பு வரை அனுமதி சீட்டு இருந்தால் மட்டுமே வாகனம் செல்ல அனுமதி உண்டு மேலும் எந்த ஒரு வாகனமும் அவுட் போஸ்ட் முதல் கோரிப்பாளையம் வரை மற்றும் அண்ணா பேருந்து நிலையம் முதல் கோரிப்பாளையம் வரை செல்வதற்கு எந்த அனுமதியும் கிடையாது.