Guru Peyarchi 2025: குருபகவானின் சுப பார்வை.. கும்ப ராசிக்கு காத்திருக்கும் பலன்கள்!
2025-ம் ஆண்டு மே மாதம் குருபகவான் ரிஷபத்திலிருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இதனால் கும்ப ராசிக்காரர்களுக்கு சுப பலன்கள் கிடைக்கும். ஆரோக்கியம், சேமிப்பு, வேலை, தொழில், கல்வி என அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் காணலாம். கலைத்துறையினருக்கும், மாணவர்களுக்கும் சாதகமான காலமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக ஜோதிடத்தில் சொல்லப்பட்டுள்ள ஒன்பது கிரகங்களின் பெயர்ச்சியும் தனிமனித வாழ்க்கையில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. அந்த வகையில் ஆண்டுக்கு ஒரு முறை குரு பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். அதன்படி 2025 ஆம் ஆண்டு திருக்கணித பஞ்சாங்கத்தின்படி மே 14ஆம் தேதியும், வாக்கிய பஞ்சாங்கத்தின் படி மே 11ம் தேதியும் குரு பகவான் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இதன் காரணமாக கும்ப ராசிக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்பது பற்றி நாம் காணலாம்.அதன்படி இந்த ராசிக்கு விசுவாவசு தமிழ் புத்தாண்டு ஆரம்பத்தில் அர்த்தாஷ்டக ஸ்தானத்தில் சஞ்சரித்த குருபகவான் மிதுன ராசிக்கு மாறும் நிலையில் கும்ப ராசியில் சுப பலம் கொடுக்கிறார். இது உங்களுக்கு பூர்வ புண்ணியத்தை வழங்கக் கூடியதாகும்.
நல்ல முன்னேற்றம் உண்டாகும்
மிதுனத்தில் குரு பகவானும் அவரின் ஒன்பதாம் பார்வையாக உங்கள் ராசியில் நிலை கொண்டிருக்கும் சனி பகவான் மற்றும் ராகுவினால் ஏற்படும் தோஷத்தை நீக்கிவிடுகிறார். இதனால் ஆரோக்கியம், சேமிப்பு ஆகியவற்றில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். 2025 மே 11ஆம் தேதி யிலிருந்து 2025 அக்டோபர் ஏழாம் தேதி வரை குருபகவானின் பார்வை பாசிட்டிவாக இருப்பதால் பணியிடத்தில் இதுவரை நிகழ்ந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். புதிதாக வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். சம்பள உயர்வு, பணி உயர்வு தொடர்பான தகவல்கள் கிடைக்கும். அதே சமயம் அக்டோபர் மாதத்தில் இருந்து பணியில் சற்று கவனமாகவும் மேல் அதிகாரிகளுடன் அனுசரித்து செல்லவும் வேண்டும்.
தொழிலைப் பொறுத்தவரை குருபகவானின் சுப பார்வை லாபத்தை கொடுக்கக் கூடியது. தொழிலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வாய்ப்புகள் அமையும். லாபம் அதிகரிக்கும் நிலையில் அதற்கேற்ப முதலீடுகளை கவனமாக செய்ய வேண்டும்.
சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்
கலைத்துறையில் வாய்ப்பு தேடிக் கொண்டிருக்கும் கும்ப ராசிக்காரர்களுக்கு அதற்கான நல்ல நேரம் வந்துவிட்டது. சிலருக்கு வெளிநாடு சென்று அங்கு நடைபெறும் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருமானம் ஈட்டும் வாய்ப்பு அமையும். உங்களுக்கான அடையாளம் விரைவாக அமைய உள்ளது. அரசியலில் ஈடுபடுபவர்கள் குரு பெயர்ச்சி காலம் தொடங்கி ஐப்பசி மாதம் முடியும் வரை சற்று பேச்சில் கவனத்துடன் செயல்பட வேண்டும். எதிர்க்கட்சியிலிருந்து அழைப்புகள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. எதுவாக இருந்தாலும் சிந்தித்து முடிவெடுத்து நடப்பது சிறந்தது.
குருபகவானின் பாசிட்டிவ் பார்வை மாணவ மாணவியர்களுக்கு கல்வியில் மிகுந்த முன்னேற்றத்தை அளிக்கும். வெளிநாடு செல்ல விருப்பம் இருக்கும் மாணவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் அமையும். இருந்தாலும் முன்கூட்டியே சரியான திட்டமிடுடன் செயல்படுவது நல்லது. விவசாயத் துறையினருக்கு ஐப்பசி மாதம் முடியும் வரை கிரக நிலைகள் சாதகமாக இருக்கிறது. இதனால் விவசாயத்திற்கு தேவையான தண்ணீர், கால்நடைகள் அபிவிருத்தி, நல்ல விளைச்சல், சந்தையில் பொருள்களுக்கு நல்ல மதிப்பு ஆகியவை இருக்கும். இதனால் பழைய கடன்களை அடைத்து நிம்மதி பெறுவீர்கள்.
நல்லெண்ணெய் தீபம் ஏற்றுங்கள்
பெண்களைப் பொறுத்தவரை இந்த காலகட்டம் உங்களுக்கு சாதகமாக குரு பகவான் சஞ்சரிக்கிறார் இதன் காரணமாக குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட மனக்கசப்புகள் நீங்கி மகிழ்ச்சியும் மன நிறைவும் அதிகரிக்கும் குழந்தைகள் கல்வியில் ஏற்படும் முன்னேற்றங்களை கண்டு திருப்தி அடைவீர்கள் திருமண வரணுக்காக காத்திருக்கும் பெண்களுக்கு நல்ல வாய்ப்புகள் அமையும். மேலும் குழந்தை பாக்கியம் தொடர்பான நல்ல செய்தி வந்து சேரும்.
இந்த கும்ப ராசியினர் ஜென்ம ராசியில் சனி பகவான் மற்றும் ராகு பகவானின் கூட்டி சேர்க்க இருப்பதால் ஒவ்வொரு சனிக்கிழமையிலும் ஏதேனும் ஒரு கோயிலுக்கு சென்று வணங்குவது சிறந்தது. அப்போது நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டால் அதன் இரட்டிப்பாக கிடைக்கும் என்பதை நம்பிக்கையாகும்.
(ஜோதிட நம்பிக்கையின்படி இந்த தகவலானது கொடுக்கப்பட்டுள்ளது. இதன் உண்மைகளின் துல்லியத்திற்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)