காஷ்மீர் பிரச்னை… உள்ளே வரும் அமெரிக்கா… டிரம்ப் முக்கிய அறிவிப்பு!
US President Donald Trump : காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். டிரம்பின் அறிவிப்பு பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. ஆனால், காஷ்மீர் பிரச்னையில் அமெரிக்காவின் தலையீட்டை இந்தியா விரும்பவில்லை என்றாலும், பாகிஸ்தான் ஏற்கும் என்று சொல்லப்படுகிறது.

அமெரிக்கா, மே 11: காஷ்மீர் பிரச்னையில் (kashmir Issue) மத்தியஸ்தம் செய்யத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் (donald Trump) அறிவித்துள்ளார். ஆனால், காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாம் நாடுகள் தலையீடு இருக்கக் கூடாது என்பது தான் இந்தியாவின் நிலைபாடாக இருக்கிறது. இந்த சூழலில் தான், காஷ்மீர் பிரச்னையில் மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக அமெரிக்கா கூறியிருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது. இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், ”இரு நாடுகளின் பரஸ்பர ஒப்புதலுடன் ஒப்பந்தம் எட்டப்பட்டதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
“காஷ்மீர் பிரச்னையில் மத்தியஸ்தம் செய்ய தயார்”
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுக்கு அமெரிக்கா உதவியதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியா மற்றும் பாகிஸ்தானின் வலுவான மற்றும் அசைக்க முடியாத சக்திவாய்ந்த தலைமையைப் பற்றி நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இருநாட்டு தலைவர்களும் எடுத்த உறுதியாக முடிவால் பல உயிர்க்ள காப்பாற்றப்பட்டுள்ளன.
இந்தியா பாகிஸ்தானுடன் வர்த்தகத்தை கணிசமாக அதிகரிக்க போகிறேன். தற்போதைய ஆக்கிரமிப்பை நிறுத்த வேண்டிய நேரம் இது என்பதை முழுமையாக அறிந்து புரிந்துகொள்ளவும் வலிமை, ஞானம் மற்றும் மன உறுதி இருந்தது. ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு, காஷ்மீர் விஷயத்தில் ஒரு தீர்வை எட்ட முடியுமா என்பதைப் பார்க்க உங்கள் இருவருடனும் (பிரதமர்மோடி, ஷெபாஷ் ஷெரீப்) நான் இணைந்து பணியாற்றுவேன்.
இந்தியா பாகிஸ்தானின் தலைமை சிறப்பாக செயல்பட கடவுள் ஆசிர்வதிப்பார்” என குறிப்பிட்டு இருக்கிறார். முன்னதாக, பஹல்காம் தாக்குதலை அடுத்து, இந்தியா பாகிஸ்தான் மோதல் 2025 மே 10ஆம் தேதியான நேற்று முடிவுக்கு வந்தது. மூன்று நாட்களாக இருநாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நிலவி வந்தது. இந்த விவகாரத்தில் அமெரிக்கா தலையீட்டு முடித்து வைத்தது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு
( @realDonaldTrump – Truth Social Post )
( Donald J. Trump – May 10, 2025, 11:48 PM ET )I am very proud of the strong and unwaveringly powerful leadership of India and Pakistan for having the strength, wisdom, and fortitude to fully know and understand that it was time to stop… pic.twitter.com/RKDtlex2Yz
— Donald J. Trump 🇺🇸 TRUTH POSTS (@TruthTrumpPosts) May 11, 2025
பல ஆண்டுகளாகவே, காஷ்மீர் விவகாரத்தில் இந்திய பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. காஷ்மீர் தங்களுக்கு தான் சொந்தம் என பாகிஸ்தான் சொந்தம் கொண்டாடி வருகிறது. ஆனால், இந்தியா அதற்கு தொடர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்த விவகாரத்தை தீர்த்து வைக்க பல நாடுகள் முன்வந்த போதிலும், இது தங்களுடைய பிரச்னை எனவும், உள்நாட்டு பிரச்னை என்று கூறியும் இந்தியா சம்மதம் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில், காஷ்மீர் பிரச்னையில் மத்தியஸ்தம் செய்யத் தயாராக இருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
என்னதான் இந்தியாவுக்கு நெருக்கமான நாடாக அமெரிக்கா இருந்து வந்தாலும், இந்த விஷயத்தில் மூன்றாம் நாடு தலையீட்டை இந்தியா விரும்பவில்லை. ஆனால், காஷ்மீர் பிரச்னையில் அமெரிக்காவின் தலையீட்டை பாகிஸ்தான் ஏற்கும் என சொல்லப்படுகிறது குறிப்பிடத்தக்கது.