10 மாதங்களில் 415 டீனேஜ் பிரசவம்… 59 குழந்தை திருமணங்கள் – தமிழகத்தையே உலுக்கிய வேலூர்
Vellore Teenage Birth Shock : வேலூர் மாவட்டத்தில் கடந்த 10 மாவட்டங்களில், 18 வயதுக்கும் குறைவான சிறுமிகள் 415 பேர் குழந்தை பெற்றுள்ள பேரதிர்ச்சி சம்பவம் தற்போது வெளியாகியுள்ளது. மேலும், 10 மாதங்களில் 59 குழந்தை திருமணங்கள் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகி தமிழகத்தையே உலுக்கியுள்ளது.
வேலூர், அக்டோபர் 29: வேலூர் மாவட்டத்தில் கடந்த 10 மாதங்களில், 18 வயதுக்கு கீழ் உள்ள 415 சிறுமிகளுக்கு குழந்தை பிறந்துள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம் வேலூர் மாவட்டத்தில் 59 குழந்தை திருமணங்களும் நடந்துள்ளன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த அதிர்ச்சி தகவல் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்களின் ஆய்வு கூட்டத்தில் வெளியாகியிருக்கிறது. 18 வயது கூட அடையாத சிறுமிகள் அதுவும் 10 மாதங்களில் 415 சிறுமிகள் குழந்தை பெற்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. உலகம் குறித்து முழுமையாக புரியாத வயதில் பெண்கள் ஒரு குழந்தைக்கு தாயாகியிருக்கும் சம்பவம் அவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.
10 மாதங்களில் குழந்தை பெற்ற 415 சிறுமிகள்
வேலூர் மாவட்டத்தில் கடந்த 10 மாதங்களில் 415 சிறுமிகள் குழந்தை பெற்றுள்ளனர் என்று குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். இதில் பலர் பள்ளி படிப்பை கூட முடிக்காதவர்கள். இது குழந்தை திருமணம் மற்றும் சிறுவர் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் இன்னும் தொடரும் அவல நிலையை எடுத்துக்கூறுகிறது. மக்களுக்கு இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய தேவையை நமக்கு உணர்த்துகிறது.
இதையும் படிக்க : சிவகங்கை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு… 7 ஆண்டுகளுக்கு பிறகு வழங்கப்பட்ட தீர்ப்பு – தமிழக அரசு ரூ.5 லட்சம் வழங்க உத்தரவு




இதுகுறித்து காவல்துறையினர் தெரிவித்ததாகவது, கடந்த ஆண்டு ஜனவரி, 2025 முதல் செப்டம்பர், 2025 வரை 9 மாதங்களில் மட்டும் 201 போக்சோ வழக்குகள் வேலூர் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலானவை சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்களாகும் என தெரிவித்தனர். ஒரே மாவட்டத்தில் மட்டும் அதுவும் வெறும் 10 மாதங்களில் 201 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பது அம்மாவட்டத்தின் நிலையை நமக்கு வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
கடந்த 10 மாதங்களில் 59 குழந்தை திருமணங்கள் நடந்துள்ளதாகவும், அதில் 8 திருமணங்கள் மட்டுமே தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும், மேலும், 51 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சமூக நலத்துறை அதிகாரிகள் தெரிவித்ததனர். குறிப்பாக வேலூர் மாவட்டத்தில் மலைப்பகுதியான அணிக்கட்டு வட்டத்தில் மட்டும் 92 டீனேஜ் பிரசவங்கள் நடந்துள்ளதாகவும், அந்தப் பகுதிகளில் குழந்தை திருமணங்கள் அதிகம் நடைபெறுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க : 16 வயது மாணவனை திருமணம் செய்த பெண்… 3 மாத கர்ப்பம்… போக்சோவில் கைது
இந்த நிலையை முற்றிலும் போக்கும் வகையில் அதிகாரிகள் கூட்டத்தில் மலைப்பகுதி கிராமங்களிலும் பள்ளிகளிலும் சிறப்பு விழிப்புணர்வு முகாம்கள் நடத்த தீர்மானித்துள்ளனர். இவை சிறுமிகள் கல்வி மற்றும் அவர்களின் உரிமைகள் குறித்த புரிதலை ஏற்படுத்தும் நோக்கத்துடன் நடைபெறவுள்ளதாகவும் தெரிவித்தனர்.
குழந்தை திருமணங்கள் நடபெறுவதற்கான காரணம் என்ன?
இந்திய சட்டப்படி, பெண்களுக்கு திருமண வயது 18, ஆண்களுக்கு 21 என இருந்தாலும், பல கிராமங்களில் வறுமை, கல்வி குறைவு, சமூக அழுத்தம் போன்ற காரணங்களால் பெற்றோர் தங்கள் மகள்களை சிறுவயதிலேயே திருமணம் செய்து வைக்கின்றனர். இது அவர்களின் கல்வி, ஆரோக்கியம் மற்றும் எதிர்காலத்தை முற்றிலும் அழிக்கும் செயல் என நிபுணர்கள் கூறுகின்றனர்.