கடன் தொல்லை.. ரூ. 1.50 கோடி மதிப்பு தங்கத்தை திருடியது ஏன்? சென்னை சம்பவ பின்னணி!
Chennai Crime: 1.50 கோடி ரூபாய் மதிப்பிலான நகையை வங்கியில் தவறவிட்டு சென்ற பெண் மீண்டும் வருவார் என அதிகாரிகள் எதிர்பார்த்து, அந்தப் பொருட்களை பாதுகாப்பாக வங்கி சேமிப்பறையில் எடுத்துவைத்து இருந்தனர். ஆனால் ஐந்து நாட்கள் கடந்தும் அந்தப் பெண் பையை எடுத்துச் செல்ல வராததால், வேளச்சேரி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோப்பு புகைப்படம்
சென்னை, டிசம்பர் 12, 2025: சென்னை வேளச்சேரியில் 1.50 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை வங்கியில் விட்டுச் சென்றதால் வங்கி ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து குற்றப்பிரிவு காவல் துறையில் ஒரு புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டதில் பல்வேறு திருப்பங்களும் தகவல்களும் வெளியாகியுள்ளன. சென்னை வேளச்சேரி 100 அடி சாலையில் உள்ள தனியார் வங்கியில், டிசம்பர் 5, 2025 அன்று பர்தா அணிந்து வந்த ஒரு பெண், தனக்கு வங்கி கணக்கும் லாக்கரும் ஓபன் செய்ய வேண்டும் என கோரிக்கை முன்வைத்துள்ளார். அப்போது வங்கி மேலாளர் அந்தப் பெண்ணிடம் சில ஆவணங்களை கேட்டுள்ளார். ஆனால் போதிய ஆவணங்கள் இல்லாத காரணத்தால் கணக்கு மற்றும் லாக்கர் ஓபன் செய்ய முடியாது என தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்தப் பெண் வீட்டிற்கு சென்று ஆவணங்களை எடுத்து வருவதாக கூறியுள்ளார்.
1.50 கோடி ரூபாய் தங்கத்தை விட்டுச்சென்ற பெண்:
வங்கியில் இருந்து வெளியேறிய அந்தப் பெண், தன் கொண்டு வந்த பையை அங்கேயே விட்டு சென்றுள்ளார். வங்கி அதிகாரிகள் இதனை கவனித்து அந்தப் பையைத் திறந்து சோதித்தபோது, அதில் 24 கேரட்டில் ஒரு கிலோ தங்க கட்டி, 22 கேரட்டில் 256 கிராம் தங்கச் சங்கிலி மற்றும் வாழையல் இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு குறைந்தது 1.50 கோடி ரூபாய் இருக்கும் என கணிக்கப்பட்டது.
மேலும் படிக்க: தவெகவின் சின்னம் இதுதான்?.. ஈரோடு பொதுக்கூட்டத்தில் அறிவிக்கிறார் விஜய்?
இவ்வளவு விலை உயர்ந்த பொருட்களை வங்கியில் தவறவிட்டு சென்ற பெண் மீண்டும் வருவார் என அதிகாரிகள் எதிர்பார்த்து, அந்தப் பொருட்களை பாதுகாப்பாக வங்கி சேமிப்பறையில் எடுத்துவைத்து இருந்தனர். ஆனால் ஐந்து நாட்கள் கடந்தும் அந்தப் பெண் பையை எடுத்துச் செல்ல வராததால், வேளச்சேரி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல் விசாரணையில் வெளியான திடுக் தகவல்:
வேளச்சேரி குற்றப்பிரிவு போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டதில், தங்க நகைகளை விட்டுச் சென்ற பெண் பத்மப்பிரியா என்பதும், அவர் ஏற்கனவே அதே வங்கியில் முன்னாள் மேலாளராக பணியாற்றியதும் தெரியவந்தது. அந்த வங்கியில் அவர் ஒரு வருடம் பணியாற்றியிருந்தார்.
மேலும் படிக்க: ஊட்டியில் உறைபனி.. 3 டிகிரி செல்சியஸ் வரை குறையும் வெப்பநிலை.. வானிலை ரிப்போர்ட்..
அவரது கணவர் கடன் தொல்லையால் தற்கொலை செய்த நிலையில், அவருக்கு கடன் கொடுத்தவர்கள் பத்மப்பிரியாவுக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர். இதன் காரணமாக, அந்த வங்கியின் லாக்கரில் இருந்த வெளிநாட்டு வாழ் இந்தியரின் 250 கிராம் நகைகளை திருடியிருந்தார். இதனால் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த குருபாரத்தன்று அவர் ஜாமினில் வந்தது குறிப்பிடத்தக்கது.
கடனை திருப்பி செலுத்த லாக்கரில் இருந்து நகையை திருடிய முன்னாள் ஊழியர்:
இந்த சூழலில், பத்மப்பிரியா மேலும் ஒரு வாடிக்கையாளரின் லாக்கரில் இருந்து தங்க கட்டியும் நகைகளையும் திருடியிருந்தார். இதனால் மீண்டும் கைது செய்யப்படுவோமோ என்ற பயத்தில், அந்த நகைகளை வங்கி லாக்கரில் மீண்டும் வைப்பதற்காக வந்துள்ளார். ஆனால் லாக்கரில் நேரடியாக வைக்க முடியாததால், புதிய லாக்கர் ஓபன் செய்ய வேண்டும் என கோரிக்கை முன்வைத்து, தங்க நகைகள் இருந்த பையை அங்கே விட்டு சென்றுள்ளார். தன்னை அடையாளம் தெரியாமல் காட்டிக்கொள்வதற்காக பர்தா அணிந்து வந்ததும் விசாரணையில் தெரிந்துள்ளது.
எந்த வங்கி ஊழியரும் அல்லது வாடிக்கையாளரும் புகார் அளிக்காத நிலையில், நகை எடுத்த லாக்கரின் உரிமையாளரிடமிருந்து புகார் பெற்று, அவர்மீது நடவடிக்கை எடுக்க காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.