Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி மற்றும் உரிமம் வழங்கும் முகாம்.. 8 இடங்களில் நடக்கும் என சென்னை மாநகராட்சி அறிவிப்பு..

Free Vaccine Camp: சென்னையில் இதுவரை 98,525 செல்லப்பிராணிகளின் விவரம் பதிவு செய்யப்பட்டுள்ளன. 54,576 செல்லப்பிராணிகளுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து, டிசம்பர் 12 முதல் டிசம்பர் 14 வரை மூன்று நாட்களுக்கு சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன என தெரிவித்துள்ளது.

செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி மற்றும் உரிமம் வழங்கும் முகாம்.. 8 இடங்களில் நடக்கும் என சென்னை மாநகராட்சி அறிவிப்பு..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 12 Dec 2025 07:41 AM IST

சென்னை, டிசம்பர் 12, 2025: செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி வழங்குவதற்காக சென்னையில் எட்டு இடங்களில் இலவச முகாம்கள் நடத்தப்படுகின்றன. இந்த முகாம்கள் டிசம்பர் 12, 2025 தேதியான இன்று தொடங்கி மூன்று நாட்களுக்கு, அதாவது வருகிற டிசம்பர் 14ஆம் தேதி வரை நடைபெறும். ஏற்கனவே செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்தி உரிமம் பெற தவறிய உரிமையாளர்கள் இதனை பயன்படுத்திக்கொள்ளலாம் என சென்னை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாய் கடி சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தெரு நாய்களாக இருந்தாலும் சரி, வளர்ப்பு நாய்களாக இருந்தாலும் சரி, நாய்கள் மக்களை தாக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

குறிப்பாக குழந்தைகளை குறிவைத்து தாக்குதல் நடப்பதாக கூறப்படுகிறது. இதைத் தடுப்பதற்காக பெருநகர சென்னை மாநகராட்சி தரப்பில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதாவது, தெருநாய்கள் இருக்கும் இடங்களுக்கே சென்னை மாநகராட்சி அதிகாரி, மருத்துவர், கூலித்தொழிலாளர்கள் சென்றடைந்து தடுப்பூசி செலுத்துகின்றனர்.

மேலும் படிக்க: ஊட்டியில் உறைபனி.. 3 டிகிரி செல்சியஸ் வரை குறையும் வெப்பநிலை.. வானிலை ரிப்போர்ட்..

செல்லப்பிராணிகளுக்கு உரிமம் கட்டாயம்:

இது ஒரு பக்கம் இருந்தாலும், வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கு கட்டாயம் உரிமம் பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி உரிமம் பெற தவறிய உரிமையாளர்களுக்கு கிட்டத்தட்ட ஐந்தாயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில், 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னையில் ஆறு இடங்களில் செல்லப்பிராணிகளுக்கு இலவச தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன. இந்த முகாம்களில் உரிமம் பெற தவறியவர்கள் தற்போது நடைபெறும் மூன்று நாள் சிறப்பு முகாம்களில் பயன் பெறலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: ரூ.1000 மகளிர் உரிமைத்தொகை.. இத்தனை லட்சம் பெண்களுக்கா?.. இன்று வழங்குகிறார் முதல்வர் ஸ்டாலின்!

54,576 செல்லப்பிராணிகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது – சென்னை மாநகராட்சி

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: சென்னை மாநகராட்சி பகுதிகளில் செல்லப்பிராணிகளுக்கு உரிமம் வழங்கும் பணிகள் அக்டோபர் மாதம் முதல் தொடங்கப்பட்டுள்ளன. இதுவரை 98,525 செல்லப்பிராணிகளின் விவரம் பதிவு செய்யப்பட்டுள்ளன. 54,576 செல்லப்பிராணிகளுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து, டிசம்பர் 12 முதல் டிசம்பர் 14 வரை மூன்று நாட்களுக்கு சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன என தெரிவித்துள்ளது.

8 இடங்களில் சிறப்பு முகாம்:

ஏற்கனவே செல்லப்பிராணி சிகிச்சை மையம் உள்ளிட்ட ஏழு இடங்களில் முகாம்கள் நடைபெற்று வரும் நிலையில், கூடுதலாக கீழ்க்கண்ட இடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது:

  • மணலி – தேவராஜன் தெரு மாநகராட்சி சமுதாயக் கூடம்
  • மாதவரம் – சூரப்பட்டு சண்முகபுரம் சமுதாயக் கூடம்
  • தண்டையார்பேட்டை – பழைய வண்ணாரப்பேட்டை பார்த்தசாரதி நகர் சமுதாயக் கூடம்
  • அம்பத்தூர் – காமராஜபுரம் டன்லப் மைதானம்
  • அண்ணாநகர் – கீழ்ப்பாக்கம் கும்மாளம்மன் கோவில் தெரு
  • வளசரவாக்கம் – ஆலம்பாக்கம் மாந்தோப்பு மாமன்ற உறுப்பினர் அலுவலகம்
  • அடையாறு – வேளச்சேரி அம்பேத்கர் நகர் சமுதாயக் கூடம்
  • பெருங்குடி, மடிப்பாக்கம் – பாலாஜி நகர் சமுதாயக் கூடம்