அனுமதியின்றி பட்டாசு திரி தயாரிப்பில் ஈடுபட்டபோது வெடி விபத்து – 2 வட மாநில தொழிலாளர்கள் பலி
Illegal Fireworks Tragedy : விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அனுமதியின்றி பட்டாசு திரி தயாரித்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில் 2 வட மாநில தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாதிரி புகைப்படம்
விருதுநகர், ஜனவரி 2 : விருதுநகர் (Virudhunagar) மாவட்டம் சாத்தூர் அருகே அனுமதியின்றி பட்டாசு திரி தயாரித்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில் 2 வட மாநில தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. உலக அளவில் பட்டாசு உற்பத்தியில் விருதுநகர் மாவட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக சிவகாசி, சாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான பட்டாசு தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. தொழிற்சாலைகளில் அடிக்கடி வெடி விபத்துகள் ஏற்பட்டு, தொழிலாளர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன.
அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பு
பட்டாசு தொழிற்சாலைகளில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றனவா என கேள்விகள் எழுந்துள்ளன. தொழிற்சாலைகளுக்கு மட்டுமல்லாமல், சில இடங்களில் அனுமதியின்றி சட்டவிரோதமாகவும் பட்டாசுகள் தயாரிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அந்த வகையில், சாத்தூர் அருகே உள்ள கே.மேட்டுப்பட்டி பகுதியில், சரவணன் என்பவருக்குச் சொந்தமான இடத்தில், அனுமதியின்றி பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிக்க : பாதயாத்திரை சென்ற இரு ஐயப்ப பக்தர்களுக்கு நேர்ந்த சோகம்…பக்தர்கள் வந்த வேனால் சம்பவம்!
இந்த நிலையில், பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில், வட மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு புலம்பெயர் தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். வெடி விபத்து சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, காவல் துறைக்கு தகவல் அளித்தனர்.
2 வட மாநில தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பலி
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சாத்தூர் காவல்துறையினர், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவ இடத்தில் இருந்து பட்டாசு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட மூலப்பொருட்களையும் காவல்துறையினர் கைப்பற்றினர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், பட்டாசு தயாரிக்கும் இடத்தின் உரிமையாளர் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டவர்கள் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் விரைவில் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த வெடி விபத்து சம்பவம், பட்டாசுத் தொழிலில் நிலவும் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து மீண்டும் ஒருமுறை கேள்விகளை எழுப்பியுள்ளது.
இதையும் படிக்க : பைக்கில் ரூ.8 கோடி கடத்தல் தங்கம்…கியூ பிரிவு போலீசார் அலர்ட்…வேதாரண்யத்தில் பரபரப்பு சம்பவம்!
குறிப்பாக தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் தொடர்ந்து பாதிக்கப்படும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது. இதனையடுத்து அவர்களுக்கு தொழிற்பாதுகாப்பு வழங்க வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக பட்டாசு தொழில் போன்ற ஆபத்து நிறைந்த வேலைகளின் போது உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கைவிடுத்துவருகின்றனர்.