தரதரவென இழுத்து தாக்குதல்.. ஸ்ரீரங்கத்தில் முதியவருக்கு நேர்ந்த கொடூரம்.. காவலர்கள் சஸ்பெண்ட்!
Srirangam Temple : திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் உள்ள கோயிலில் முதியவரை காவலர்கள் இரண்டு பேரை தரதரவென இழுத்து தாக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது சம்பந்தமான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், காவலர்கள் இரண்டு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

திருச்சி, செப்டம்பர் 03 : திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் கோயிலுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு செல்வதையொட்டி, கோயிலின் உள்ளே இருந்து முதியவர் ஒருவரை காவலர்கள் எட்டி உதைத்தும், தரதரவென இழுத்து சென்றுள்ளனர். இது சம்பந்தமான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடுத்து, சப் இன்ஸ்பெக்டர் உட்பட 2 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாதசுவாமி கோயில் உலகப் புகழ்பெற்றது. இந்த கோயிலுக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இரண்டு நாள் பயணமாக தமிழகத்திற்கு வந்துள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் அவர், 2025 செப்டம்பர் 3ஆம் தேதியான இன்று ஸ்ரீரங்கம் கோயிலில் தரிசனம் மேற்கொள்ள உள்ளார்.
இதனால், கோயிலை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. மத்திய பாதுகாப்புப் படை, தமிழக காவல்துறை என ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். திரௌபதி முர்மு ஸ்ரீரங்கம் கோயிலில் தரிசனம் செய்யும் நிலையில், கோயிலில் அமர்ந்திருக்கும் ஆதரவற்றோர்கள், வயதானவர்கள், யாசகம் கேட்பவர்களை காவல்துறையினர் வெளியேற்ற முடிவு செய்தனர். ஆனால், இந்த நடவடிக்கையால் பெரும் சர்ச்சை கிளம்பி இருக்கிறது. அதாவது, கோயிலுக்குள் அமர்ந்திருந்த முதியவரை சில காவலர்கள் வெளியேற்றும்போது, அவரை தாக்கி இருக்கின்றனர்.
Also Read : கற்க வயதில்லை.. 72 வயதில் டிப்ளமோ படிக்கும் முதியவர்.. தாத்தா என அன்பாக அழைக்கும் மாணவர்கள்..
ஸ்ரீரங்கத்தில் முதியவருக்கு நேர்ந்த கொடூரம்
முதியவர் அந்த இடத்தைவிட்டு எழுந்து செல்ல மறுத்ததால், அவரை தரதரவென இழுத்து சென்று, காலால் உதைத்ததாக கூறப்படுகிறது. அந்த முதியவர் வலியுடன் தரையில் விழுந்துள்ளனர். இதனை அங்கிருந்த பக்தர் ஒருவர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
காவல்துறையின் நடவடிக்கை மனிதநேயமற்ற செயல் என சிலர் கூறியுள்ளனர்.. கோயில் வளாகத்திற்குள் நிரந்தரமாக தங்கியிருந்தவர்களை முதியோர் இல்லங்களுக்கு மாற்றுவதற்காக மட்டுமே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த வீடியோ வைரலானதை அடுத்து, சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் உள்பட 2 காவல்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
Also Read : கேரளாவில் பரவும் மூளையை தின்னும் அமீபா.. தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க உத்தரவு..
காவலர்கள் சஸ்பெண்ட்
இந்த உத்தரவை திருச்சி மாநகர காவல் கண்காணிப்பாளர் காமினி வெளியிட்டார். இதற்கிடையில், கோயிலிலும் அதைச் சுற்றியும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 2025 செப்டம்டபர் 3ஆம் தேதி மதியம் 1 மணி முதல் பக்தர்களுக்கு கோயிலுக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தின் 10வது பட்டமளிப்பு விழாவில் 2025 செப்டம்பர் 3ஆம் தேதியான இன்று கலந்து கொண்டு , பின்னர் ஸ்ரீரங்கத்திற்குச் செல்வார். ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் மாலை 5.30 மணி முதல் 6 மணி வரை ஸ்ரீரங்கத்தில் தரிசனம் செய்ய திட்டமிட்டுள்ளார்.