Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

திருச்சி ஸ்ரீரங்கம் புதிய பேருந்து நிலையம் எப்போது திறப்பு..? வெளியான அறிவிப்பு

Trichy Srirangam Bus Stand: திருச்சி ஸ்ரீரங்கத்தில் ரூ.11.10 கோடி செலவில் கட்டப்படும் புதிய பேருந்து நிலையத்தின் பணிகள் 80% வரை நிறைவடைந்துள்ளன. ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை எதிரே அமைந்துள்ள இந்த நிலையத்தில், ஒரே நேரத்தில் 8 பேருந்துகள் நிறுத்தும் வசதி உள்ளது. பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்த தனி பேருந்து நிலையம் இல்லாத பிரச்சனைக்கு இது ஒரு பெரும் தீர்வாக இருக்கும் என நம்பப்படுகிறது.

திருச்சி ஸ்ரீரங்கம் புதிய பேருந்து நிலையம் எப்போது திறப்பு..? வெளியான அறிவிப்பு
ஸ்ரீரங்கம் புதிய பேருந்து நிலைய கட்டுமானப்பணி Image Source: x
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 28 May 2025 07:51 AM

திருச்சி மே 28: திருச்சி ஸ்ரீரங்கத்தில் (Trichy Srirangam) ரூ.11.10 கோடி செலவில் புதிய பேருந்து நிலையம் (New Bus Stand Work) கட்டும் பணிகள் 80% நிறைவடைந்துள்ளது. ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை எதிரே மாநகராட்சி சொந்தமான நிலத்தில் இந்த திட்டம் அமைகிறது. ஒரே நேரத்தில் எட்டு பேருந்துகள் நிறுத்தும் வசதி, 22 கடைகள், பல்நோக்கு அரங்கம் மற்றும் உணவகம் அமைக்கப்படுகிறது. பணிகள் 2023 டிசம்பரில் துவங்கி, தாமதம் ஏற்பட்டாலும் தற்போது விரைவாக முன்னேற்றம் உள்ளது. பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பெரும் நிவாரணமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருச்சி ஸ்ரீரங்கம் புதிய பேருந்து நிலையம் திறக்கப்படுவது எப்போது?

திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் ரூ.11.10 கோடி செலவில் கட்டப்படும் புதிய பேருந்து நிலையத்தின் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இதுவரை பணிகள் 80% வரை நிறைவடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை எதிரே மாநகராட்சியின் சொந்தமான ஏக்கர் நிலத்தில் இந்த நிலையம் கட்டப்படுகிறது. புதிய பேருந்து நிலையத்தில் ஒரே நேரத்தில் எட்டு பேருந்துகள் நிறுத்தும் வசதி, சுமார் 22 கடைகள், ஊழியர்களுக்கான அறைகள், சுகாதார வளாகம், 260 பேர் அமரக்கூடிய பல்நோக்கு அரங்கம் மற்றும் 140 பேர் அமர்ந்து உணவளிக்கக் கூடிய உணவகம் போன்ற அனைத்தும் இருக்கும்.

ஸ்ரீரங்கம் கோவில் மற்றும் பேருந்து நிலையம் இல்லாத சிரமம்

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், 108 வைணவ தலங்களில் முக்கிய இடம் வகிக்கும் பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் கோவில் ஆகும். இதற்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள், நாடுகளிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். ஆனால் இந்த பிரசித்தி மிக்க பகுதியில் ஏறத்தாழ 1,20,000 மக்கள் வசிக்கும் ஸ்ரீரங்கத்தில் தனி பேருந்து நிலையம் இல்லாததால் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கடுமையான சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

பணி தாமதம் மற்றும் விரைவு நடவடிக்கைகள்

பணிகள் கடந்த 2023 டிசம்பரில் அடிக்கல் நாட்டப்பட்டு 2024 ஜனவரியில் துவங்கினாலும், சில காரணங்களால் தாமதம் ஏற்பட்டது. ஆனால் மாநகராட்சி விரைந்து பணிகளை முன்னெடுத்து தற்போது 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். முதன்மையான கட்டுமான பணிகள் உடனே முடிக்கப்படுவதாக அதிகாரிகள் கூறி வருகின்றனர். இந்த புதிய பேருந்து நிலையம் நிறைவடைவதும், பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பெரும் நிவாரணமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருச்சி ஸ்ரீரங்கம்

திருச்சியில் அமைந்துள்ள ஸ்ரீ ரங்கநாதஸ்வாமி கோயில், உலகின் மிகப்பெரிய செயல்படும் இந்து கோயிலாக கருதப்படுகிறது. இந்த கோயில், திருச்சிராப்பள்ளி நகரில் உள்ள ஸ்ரீரங்கம் அமைந்துள்ளது. இந்த கோயில் வளாகம் சுமார் 156 ஏக்கர் பரப்பில் விரிந்துள்ளது.

இதில் 81 சிறப்பு ஆலயங்கள், 21 கோபுரங்கள், 39 மண்டபங்கள் உள்ளன. கோயிலில் 9ஆம் நூற்றாண்டிலிருந்து 16ஆம் நூற்றாண்டு வரை பல கல்வெட்டுகள் உள்ளன. இவை சோழர், பாண்டியர், ஹோய்சலர் மற்றும் விஜயநகர பேரரசு காலங்களில் கோயிலுக்கு செய்யப்பட்ட உதவிகளை சுட்டிக்காட்டுகின்றன.