கற்க வயதில்லை.. 72 வயதில் டிப்ளமோ படிக்கும் முதியவர்.. தாத்தா என அன்பாக அழைக்கும் மாணவர்கள்..
Mayiladuthurai: மயிலாடுதுறை மாவட்டத்தில் கல்விக்கு வயது ஒரு தடையல்ல என்பதற்கு ஏற்ற போல், 72 வயது உடைய செல்வமணி என்பவர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ பயின்று வருகிறார். சக மாணவர்கள் இவரை தாத்தா என அழைத்தாலும், இவரை நண்பராகவே கருதுகின்றனர்,

மயிலாடுதுறை, செப்டம்பர் 2, 2025: “கற்க வயதில்லை” என்பார்கள். அதற்கான உதாரணமாக, மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 72 வயதுடைய செல்வமணி தற்போது டிப்ளமோ இரண்டாம் ஆண்டு பயின்று வருவது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் வடலூரைச் சேர்ந்தவர் செல்வமணி. இவருக்கு வயது 72. திருமணம் ஆன இவர் இரண்டு மகள்களின் தந்தை. இரண்டு மகள்களும் திருமணம் செய்து குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். தற்போது செல்வமணி தனது மனைவியுடன் வாழ்ந்து வருகிறார். ஐடிஐ படித்த இவர், நெய்வேலி சுரங்கத்தில் பணியாற்றியுள்ளார். அப்போது எம்.காம், எம்.பி.ஏ படிப்புகளையும் முடித்துள்ளார்.
பணி ஓய்வு பெற்று 10 ஆண்டுகள் ஆகிறது. இருப்பினும் படிப்பின் மீது உள்ள ஆர்வம் குறையாமல், தற்போது மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் படித்து வருகிறார். தற்போது இவர் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார்.
டிப்ளமோ படிக்கும் 72 வயது மாணவன்:
சக மாணவர்களைப் போலவே தினசரி காலை புத்தகப் பை, மதிய உணவுடன் கல்லூரிக்கு வருகிறார். வயதில் மூத்தவர் என்றோ அல்லது இளைஞர்களுடன் ஒரே வகுப்பறையில் படிக்கிறேன் என்றோ எந்த தயக்கமும் இல்லாமல், சக மாணவர்களுடன் கலந்து மாணவராகவே கல்வி கற்றுக் கொண்டிருக்கிறார். உடல்நிலை சரியில்லாத மனைவிக்கு தேவையானவற்றைச் செய்து விட்டு, காலை 9 மணிக்கு சரியாக கல்லூரிக்கு வருவதாக சக மாணவர்கள் கூறுகின்றனர்.
72 வயதுடைய செல்வமணி இதுகுறித்து பேசுகையில், “என்எல்சியில் பணியாற்றி ஓய்வு பெற்று 10 ஆண்டுகள் ஆகிறது. இருப்பினும் படிப்பின் மீது உள்ள ஆர்வத்தின் காரணமாக தற்போது டிப்ளமோ படித்து வருகிறேன். இளைஞர்களுடன் இணைந்து படிக்கும் போது புதிய விஷயங்களை கற்க முடிகிறது,” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: சசிகலாவை சந்திக்க நேரம் கேட்ட ஓ. பன்னீர்செல்வம் ? அதிமுகவை ஒன்றிணைக்கும் முயற்சியில் தீவிரம்..
தாத்தா என அன்பாக அழைக்கும் சக மாணவர்கள்:
சக மாணவர்கள் இவரை அன்பாக “தாத்தா” என்று அழைக்கின்றனர். இதுகுறித்து மாணவர் ஒருவர், “தாத்தா என்று அழைத்தாலும் அவரை நாங்கள் நண்பராகத்தான் பார்க்கிறோம். அவரிடமிருந்து கற்க வேண்டிய விஷயங்கள் ஏராளம். ஏற்கனவே எலக்ட்ரிக்கல் துறையில் பணியாற்றியவர் என்பதால் அவரிடமிருந்து பல விஷயங்களை கற்க முடிகிறது. தினசரி சற்றும் சோர்வடையாமல் சரியான நேரத்திற்கு கல்லூரிக்கு வருகிறார்,” என்று குறிப்பிட்டார்.
மேலும் படிக்க: கேரளாவில் பரவும் மூளையை தின்னும் அமீபா.. தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க உத்தரவு..
ரோல் மாடலாக இருக்கும் செல்வமணி:
இந்தக் கல்லூரியின் முனைவர் கூறுகையில், “72 வயதுடைய மாணவர் ஒருவர் எங்கள் கல்லூரியில் படித்து வருகிறார். முதலில் அவரை சேர்க்கும் போது, சக மாணவர்களுடன் இணைந்து பழகுவாரா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் தற்போது அவருக்கென தனி நண்பர்கள் வட்டாரம் இருக்கிறது. சக மாணவர்களைப் போல சரியான நேரத்தில் கல்லூரிக்கு வருகிறார். இவரை பலரும் ‘ரோல் மாடல்’ ஆக எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு நாள்கூட விடுப்பு எடுத்தது கிடையாது,” எனப் பாராட்டினார்.