உருவாகும் புதிய கூட்டணி..? விஜய் பேச்சால் பரபரக்கும் அரசியல் களம்!

புதுச்சேரியில் நேற்று நடந்த தவெக பொதுக்கூட்டத்தில் பேசிய விஜய், அம்மாநிலத்தை ஆளும் முதல்வர் ரங்கசாமி குறித்தோ, என்.ஆர். காங்கிரஸ் குறித்தோ எதுவும் விமர்சிக்கவில்லை. மாறாக, புதுச்சேரி அரசிடம் தமிழக அரசு பாடம் கற்க வேண்டும் என அக்கட்சியை புகழ்ந்து தான் பேசினார்.

உருவாகும் புதிய கூட்டணி..? விஜய் பேச்சால் பரபரக்கும் அரசியல் களம்!

தவெக தலைவர் விஜய்

Updated On: 

10 Dec 2025 07:38 AM

 IST

புதுச்சேரியில் நேற்று நடந்த தவெக பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய், அம்மாநில முதல்வர் ரங்கசாமியை விமர்சிக்காதது பல்வேறு அரசியல் சந்தேகங்களை எழுப்பியுள்ளது. குறிப்பாக, இது என்.ஆர்.காங்கிரஸ்தவெக கூட்டணிக்கான அச்சாரமாக இருக்குமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. அங்கு தற்போது பாஜகஎன்ஆர் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில், தவெக பொதுக்கூட்டத்தில் விஜய், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்காத மத்திய அரசையும், தமிழக முதல்வரையும் கடுமையாக விமர்சித்தார். அதோடு, தமிழ்நாட்டுக்காக மட்டுமே தனது குரல் ஒலிக்கும் என நினைப்பது தவறு, புதுச்சேரி பிரச்சினைகளுக்கும் சமமான முறையில் குரல் கொடுப்பேன் எனவும் அவர் கூறியிருந்தார். இதன் மூலம், என்.ஆர். காங்கிரஸுடன் புதிய கூட்டணி அமையுமா என்ற அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

என்.ஆர். காங்கிரஸ்பாஜக கூட்டணி முறிவு?

புதுச்சேரியில், பாஜக – என்ஆர் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வரும் நிலையில், கடந்த சில நாட்களாக பாஜகவுக்கும், முதல்வர் ரங்கசாமிக்குமான கூட்டணி உறவு சுமூகமாக இல்லை என்றும் கூறப்படுகிறது. தொடர்ந்து, தேர்தல் பங்கீடு குறித்து ரங்கசாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அடுத்த மாதம் பார்த்துக்கொள்ளலாம் என பிடிக்கொடுக்காமல் சென்றுவிட்டார். அதோடு, சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து கேட்டபோதும், தேர்தலின்போது அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார். இதன் மூலம், அவர் விஜய்யுடன் கூட்டணி அமைக்கும் முயற்சியில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதுச்சேரி அரசை புகழ்ந்த விஜய்:

அந்தவகையில், புதுச்சேரியில் நடந்த நேற்றைய (டிசம்பர் 9) பொதுக்கூட்டத்தில் பேசிய தவெக தலைவர் விஜய், மத்திய பாஜக அரசை விமர்சனம் செய்தார். ஆனால், மாநிலத்தை ஆளும் ரங்கசாமி குறித்தோ, என்.ஆர். காங்கிரஸ் குறித்தோ அவர் விமர்சிக்கவில்லை. மாறாக, புதுச்சேரி அரசிடம் தமிழக அரசு பாடம் கற்க வேண்டும் என புகழ்ந்து பேசினார். அதோடு, புதுச்சேரி மாநில அந்தஸ்து, புதுச்சேரி வளர்ச்சி ஆகியவற்றை மத்திய அரசு கண்டு கொள்ளாமல் உள்ளதாகவும், புதுச்சேரி மாநில அந்தஸ்துக்காக 16 முறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட அவர், தமிழகத்தை போல புதுச்சேரியும் மத்திய அரசால் வஞ்சிக்கப்பட்டுள்ளது என்று சாடினார்.

இந்தியாவிலேயே ரேஷன் கடைகள் இல்லாத மாநிலம் புதுச்சேரியாக உள்ளதாக கூறியிருந்தார். . புதுச்சேரி மக்கள் திமுகவை நம்பாதீர்கள். அவர்கள் நம்ப வைத்து ஏமாற்றி விடுவார்கள். இவ்வாறு என்.ஆர். காங்கிரஸ் அரசை விமர்சிக்காத அவர், இறுதியாக புதுச்சேரியில் வருகிற சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி பட்டொளி வீசி பறக்கும் என்றும் கூறி விடைப்பெற்றார்.

ரங்கசாமிக்கும், விஜய்க்கும் நல்ல நட்பு:

ஏற்கெனவே, முதல்வர் ரங்கசாமிக்கும், விஜய்க்கும் முன்பே நல்ல நட்பு உறவு உள்ளது. கடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றதும், சென்னை பனையூரில் விஜயை அவரது வீட்டில் சந்தித்து முதலமைச்சர் ரங்கசாமி பேசியது குறிப்பிடத்தக்கது. நேற்று நடந்த பொதுக்கூட்டத்தை முதலமைச்சர் தனது செல்போனில் நேரலையாக பார்த்தார். இதைப் பற்றி செய்தியார்கள் கேட்டபோது, “த.வெ.க. தலைவருக்கு வாழ்த்துக்கள்” என்று பதிலளித்தார்.

இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது, வரும் சட்டசபை தேர்தலில் புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் த.வெ.க. கூட்டணிக்கு வாய்ப்பு இருக்கலாம் என்றும், தற்போது அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

சிக்கலில் இண்டிகோ விமான சேவை.. எனினும் டிக்கெட் விற்பனையாவது எப்படி?
திருமணமான அடுத்த 4வது நாளில் படப்பிடிப்பில் சமந்தா
5 வயது சிறுவனை தாக்க முயற்சித்த சிறுத்தை.. சாதுரியமாக செயல்பட்டதால் தப்பிய சம்பவம்..
அதிகரித்து வரும் தங்க குத்தகை.. என்ன காரணம்?