புதுவையில் இன்று மக்களை சந்திக்கும் விஜய்.. ஏற்பாடுகள் தீவிரம்.. இதுதான் பேசப்போகிறாரா?
TVK Vijay Meet People: டிசம்பர் 9, 2025 தேதி இன்று புதுச்சேரியில் மக்களை சந்திக்கிறார். உப்பளத்தில் காலை 10.30 மணிக்கு மக்கள் சந்திப்பு நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு வரக்கூடிய பொதுமக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு இதில் அனுமதி கிடையாது.
புதுச்சேரி, டிசம்பர் 9, 2025: தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய், டிசம்பர் 9, 2025 (இன்று) புதுச்சேரியில் மக்களை சந்திக்கிறார். முதலில் புதுச்சேரியில் ரோட் ஷோ நடத்துவதற்கு அனுமதி கேட்கப்பட்ட நிலையில், அதற்கு அனுமதி வழங்கப்படாததால் பொதுமக்களை சந்திக்கும் நிகழ்ச்சி மட்டும் நடைபெறுகிறது. இதற்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் தொடர்ந்து தேர்தலை சந்திப்பதற்கான ஆயத்தத்தில் உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு இருந்தார். ஆனால் கரூர் பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து ஒரு மாத காலம் தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் எந்த அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை. பின்னர் அக்டோபர் 27ஆம் தேதி கரூரரில் ஏற்பட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அதனைத் தொடர்ந்து மெல்ல மெல்ல மீண்டும் அரசியல் களத்தில் தீவிரமாக செயல்படத் தொடங்கினார்.
மேலும் படிக்க: திமுக ஊழல் பணத்தை வைத்து ஓராண்டுக்கான பட்ஜெட் போடலாம் – எடப்பாடி பழனிசாமி தாக்கு..
காஞ்சியில் நடந்த மக்கள் சந்திப்பு:
கரூர் சம்பவத்திற்குப் பிறகு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த மாதம் மக்கள் சந்திப்பு தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, எந்த அசம்பாவிதமும் நடக்காதபடி மிகுந்த கவனத்துடன் செயல்படுத்தப்பட்டது.
புதுச்சேரியில் மக்களை சந்திக்கும் விஜய்:
அதனைத் தொடர்ந்து, டிசம்பர் 9, 2025 தேதி இன்று புதுச்சேரியில் மக்களை சந்திக்கிறார். உப்பளத்தில் காலை 10.30 மணிக்கு மக்கள் சந்திப்பு நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு வரக்கூடிய பொதுமக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு இதில் அனுமதி கிடையாது. புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த, க்யூஆர் கோடு கொண்ட நுழைவுச்சீட்டு வைத்திருக்கும் 5,000 பேருக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது.
மேலும் படிக்க: அன்புமணிக்கும் பாமகவிற்கும் எந்த தொடர்பும் இல்லை.. ராமதாஸ் தான் பாமக – எம்.எல்.ஏ அருள் திட்டவட்டம்..
கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், சிறுவர்கள் யாருக்கும் பங்கேற்க அனுமதி இல்லை. போக்குவரத்துக்கு இடையூறாக விஜயின் வாகனத்தை யாரும் பின்தொடரக்கூடாது. காவல்துறையினர் வழங்கியுள்ள வழிகாட்டி நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் சட்டம்-ஒழுங்கு பேணப்பட வேண்டும். நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் கட்டடங்கள், மரங்கள், காம்பவுண்ட் சுவர்கள், வாகனங்கள், கொடிக்கம்பங்கள் ஆகியவற்றின் மீது ஏறக்கூடாது என்று பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
விஜய் பேசப்போவது என்ன?
தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் தொடர்ந்து மக்களை சந்தித்து வரும்போது ஒரு கருத்தை முன்வைத்து வருகிறார். அதாவது, 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டி திமுக மற்றும் தமிழக வெற்றிக்கழகத்தின் இடையேயே இருக்கும் என அவர் தெரிவித்து வருகிறார். அதே சமயம் திமுக அரசை கடுமையாக விமர்சிக்கும் கருத்துக்களையும் முன்வைத்து வருகிறார்.
எனவே, இன்று நடைபெறவுள்ள இந்த கூட்டத்திலும் ஆளும் திமுக அரசை குறித்து விமர்சன கருத்துகள் வெளிப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம், தமிழக வெற்றிக்கழகம் ஆட்சிக்கு வந்தால் என்ன வகையான வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்பதற்கான விளக்கமும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.