புதுச்சேரி பிளான் கேன்சல்.. துரத்தும் கரூர் சம்பவம்.. தடையை தகர்க்குமா தவெக?
Tvk Vijay Next Plan: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு புதுச்சேரியில் ரோடு ஷோ நடத்த அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தன் முன்புள்ள தடைகள் எவ்வாறு தகர்த்தெறிய போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பான முழு விவரத்தை இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

தடையை தகர்த்தெறியுமா தவெக
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலை மையமாக வைத்து தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு பயணத்தை மேற்கொண்டு வருகிறார். கரூரில் இந்த சந்திப்பை மேற்கொண்ட போது, எதிர்பாராத விதமாக கூட்டணி செயல்பட்டு பெண்கள், குழந்தைகள் உட்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து, சேலத்தில் மக்கள் சந்திப்பு பயணத்தை மேற்கொள்வதற்காக தமிழக வெற்றி கழகம் சார்பில் காவல்துறையிடம் அனுமதி கோரப்பட்டது. ஆனால், சட்டம் ஒழுங்கு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு உள்ளிட்ட அவற்றை கருத்தில் கொண்டு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை.
புதுச்சேரியில் மக்கள் சந்திப்பை மேற்கொள்ள திட்டம்
இதைத் தொடர்ந்து, சிறிது நாட்கள் மக்கள் சந்திப்பு பயணத்தை விஜயை மேற்கொள்ளாமல் இருந்த நிலையில், அண்மையில் காஞ்சிபுரத்தில் தனியார் ஹோட்டலில் சுமார் 2000 பேருடன் மக்கள் சந்திப்பை மேற்கொண்டார். இதனால் தமிழகத்தில் பொது இடங்களில் மக்கள் சந்திப்பை மேற்கொள்வதற்கு விஜய்க்கு அனுமதி கிடைக்கவில்லை. எனவே, தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மக்கள் சந்திப்பை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுச்சேரியில் மக்கள் சந்திப்பை மேற்கொள்ள திட்டமிட்டார்.
மேலும் படிக்க: எஸ்.ஐ.ஆர். பணி…பொதுமக்களின் தனிப்பட்ட தகவல் பொது வெளியில் வாரி இறைப்பு…
முதல்வரிடம் வலியுறுத்தியும் பலனில்லை
அதன்படி, கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆகியோர் காவல்துறையிடம் அனுமதி கோரி மனு அளித்திருந்தனர். அந்த மனுக்களை காவல்துறையினர் நிராகரித்திருந்தனர். இந்த நிலையில், பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் முதல்வர் என். ரங்கசாமியை சந்தித்து வலியுறுத்தி இருந்தனர். இதைத் தொடர்ந்து முதல்வர் ரங்கசாமி அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
புதுச்சேரியிலும் ரோடு ஷோவுக்கு அனுமதியில்லை
இதில், புதுச்சேரியில் வார இறுதி நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை இருப்பதாலும், விஜய் ரோடு ஷோவுக்கு அனுமதி கேட்கப்பட்ட காலாப்பட்டு முதல் கன்னியக்கோவில் வரையிலான சாலை குறுகலாகவும், போக்குவரத்து மிகுந்த பகுதியாகவும் இருப்பதால் ரோடு ஷோவுக்கு அனுமதி அளிக்க முடியாது என்று காவல்துறை தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது. தற்போது, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு தமிழகத்திலும், புதுச்சேரியிலும் ரோடு ஷோ நடத்துவதற்கு அனுமதி கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது மக்கள் சந்திப்பு பயணத்தில் சுணக்கமும், இடையூறும் ஏற்பட்டுள்ளது.
மேலும் படிக்க: ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம்.. புதிய கட்சி தொடக்கம்? பாஜக தலைவர்களை சந்திக்கவும் திட்டம்!!
தடையை தகர்த்தெறிவாரா விஜய்
தமிழகத்தில் மக்கள் சந்திப்பு பயணத்துக்கு அனுமதி அளிக்கவில்லை என்று திமுக அரசு மீது தவெகவினர் குற்றம் சாட்டி வரும் நிலையில், புதுச்சேரியிலும் அவரது மக்கள் சந்திப்பு பயணத்திற்கு அந்த மாநில அரசு அனுமதி மறுத்துள்ளது. இந்த சூழ்நிலையில், டிசம்பர் 5-ஆம் தேதி நடைபெறவிருந்த ரோடு ஷோ ரத்து செய்யப்பட்டுள்ளது. பொதுக்கூட்டம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டிருந்தாலும் இரு நாட்களில் அதற்கான ஏற்பாடுகளை செய்ய முடியாத நிலை உள்ளதால் பொதுக்கூட்டமும் நடைபெறாது என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், கையறு நிலையில் இருக்கும் விஜய் தனது முன்பு உள்ள தடைகளை எவ்வாறு தகர்த்து எறிய போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.