தவெக தலைவர் விஜய் போட்டியிடும் தொகுதி? நோட் பண்ணுங்க மக்களே!
Tvk Leader Vijay Contesting Which Constituency: வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் எந்த தொகுதியில் போட்டியிடப் போகிறார் என்ற தகவல் கசிந்துள்ளது. இதில், விஜய் குறி வைக்கும் தொகுதிகள் எது என்பது வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றியை இலக்காக வைத்து திமுக, அதிமுக, பாஜக, பாட்டாளி மக்கள் கட்சி, தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்ற கழகம், நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் தீவிர பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இதற்காக தேர்தல் பணிகளில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பே ஈடுபட தொடங்கி விட்டன. அதன்படி, பொதுக்கூட்டம், மக்கள் சந்திப்பு, பிரச்சார பயணம் என பல்வேறு தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. தமிழக அரசியலுக்கு புது வரவான தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைப் பிடிக்கும் முனைப்பில் மும்முறமாக ஈடுபட்டு வருகிறது. இதற்காக, விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் முதல் பொதுக்கூட்டமும், மதுரையில் இரண்டாம் பொதுக்கூட்டமும், மக்கள் சந்திப்பு பயணத்தையும் அந்த கட்சியின் தலைவர் விஜய் மேற்கொண்டு வருகிறார்.
தவெகவுக்கு கரூரில் ஏற்பட்ட தடைக்கல்
கரூரில் மக்கள் சந்திப்பு நடை பயணத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவம் அந்த கட்சிக்கு ஒரு தடையாக இருந்தாலும், தற்போது அந்த தடையை மீறி தமிழக வெற்றிக் கழகம் மீண்டும் தனது அரசியல் மற்றும் தேர்தல் பணிகளில் ஈடுபட தொடங்கியுள்ளது. இந்த சம்பவத்துக்கு பிறகு புதுச்சேரி மற்றும் ஈரோட்டில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி மற்றும் பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது.
மேலும் படிக்க: கூட்டணி பேச்சுவார்த்தை குழு அமைக்க தவெக திட்டம்… விஜய்யுடன் செங்கோட்டையன் ஆலோசனை!!
விஜய் எந்த தொகுதியில் போட்டியிடுகிறார்
இவ்வாறாக தேர்தல் பணிகள் சூடு பிடித்து வரும் நிலையில், தேர்தலும் நெருங்கி வருகிறது. இந்த தேர்தலில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் எந்த தொகுதியில் போட்டியிடப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அந்த கட்சி தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதன்படி, விஜய் போட்டியிட உள்ள தொகுதிகள் குறித்த விவரம் கசிந்துள்ளது.
விஜய் வெற்றி வாய்ப்பு அதிகமுள்ள தொகுதிகள்
இதில், விஜய்க்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ள தொகுதிகளாக திருச்சி கிழக்கு, திருவாடானை, மதுரை மேற்கு, தூத்துக்குடி, நாகப்பட்டினம் ஆகிய தொகுதிகள் உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, இந்த தொகுதிகளில் ஏதேனும் ஒரு தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் குறி வைக்கும் தொகுதிகள்
திருச்சி கிழக்கு தொகுதியில் சிறுபான்மையினர் வாக்கு அதிகமாக இருப்பதாலும், நாகப்பட்டினம், தூத்துக்குடி தொகுதியில் மீனவர்கள் அதிகம் இருப்பதால் இந்த தொகுதிகளை விஜய் குறி வைப்பார் என்று தெரிகிறது. அதே நேரத்தில், விஜய்யின் முதல் பிரச்சாரம் தொடங்கிய இடமான திருச்சி காந்தி மார்க்கெட் மரக்கடை திருச்சி கிழக்கு தொகுதியில் வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: திமுகவை விமர்சிக்காமல் எந்த கட்சியும் அரசியலில் இருக்க முடியாது…செந்தில் பாலாஜி!



