காஞ்சியில் மக்களை சந்திக்கும் விஜய்.. QR குறியீடு அடையாள அட்டை.. 2000 பேருக்கு மட்டுமே அனுமதி..
TVK Vijay Meet: கட்சித் தலைமை செயலகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்படுவது: மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கலந்து கொள்ளும் உள்ளரங்கு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி, காஞ்சிபுரம் மாவட்ட ஜே.பி.ஆர் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில், நாளை காலை 11 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, நவம்பர் 22, 2025: தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், நாளை அதாவது நவம்பர் 23, 2025 அன்று காஞ்சிபுரத்தில் மக்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக 2,000 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும், அவர்களுக்கு க்யூஆர் குறியீட்டுடன் கூடிய நுழைவு சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழக வெற்றிக்கழகம் சார்பில் அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழக வெற்றிக்கழகம் தொடங்கப்பட்டதிலிருந்தே 2026 தேர்தல் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி, ஜூன் மாதம் கட்சித் தலைவர் விஜய் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். திருச்சி, அரியலூர், நாகை, திருவாரூர், நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் அவர் பிரச்சாரம் செய்தார்.
மீண்டும் சுற்றுப்பயணத்தை தொடங்கும் விஜய்:
கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து கட்சியின் அனைத்து செயல்பாடுகளும் சுமார் ஒரு மாத காலம் நிறுத்தப்பட்டன. இதனால், விஜயின் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணமும் ஒத்திவைக்கப்பட்டது.
மேலும் படிக்க: “SIR பணிகளில் ஆளும் கட்சியின் தலையீடு”.. எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!!
ஒரு மாதத் தற்காலிக இடைவேளைக்குப் பின், அக்டோபர் 27, 2025 அன்று கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் வழங்கினார். அதன் பின்னர் மெல்லக்க மெல்ல கட்சியின் செயல்பாடுகள் மீண்டும் தொடங்கப்பட்டன. இதில், டிசம்பர் 4, 2025 முதல் மீண்டும் சுற்றுப்பயணத்தை தொடங்க விஜய் திட்டமிட்டிருந்தார்.
டிசம்பர் மாதம் சேலத்தில் இருந்து இந்த சுற்றுப்பயணம் தொடங்கவிருந்த நிலையில், இதற்கு போலீஸ் அனுமதி கோரி கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால் கார்த்திகை தீபம், பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாள் போன்ற காரணங்களால் பாதுகாப்பு ஏற்பாடுகளை வழங்குவது சிரமம் என தெரிவித்து போலீசார் அனுமதி மறுத்தனர்.
நாளை காஞ்சிபுரத்தில் மக்களை சந்திக்கும் விஜய்:
தலைமை நிலையச் செயலக அறிவிப்பு
மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்கள் கலந்து கொள்ளும் உள்ளரங்கு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி, நாளை (23.11.2025) ஞாயிற்றுக்கிழமை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஜேப்பியார் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில், காலை 11.00…
— TVK Party HQ (@TVKPartyHQ) November 22, 2025
இதனைத் தொடர்ந்து, விஜய் நாளை காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் மக்களை சந்திக்க உள்ளார். கட்சித் தலைமை செயலகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்படுவது: மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கலந்து கொள்ளும் உள்ளரங்கு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி, காஞ்சிபுரம் மாவட்ட ஜே.பி.ஆர் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில், நாளை காலை 11 மணிக்கு நடைபெறும்.
மேலும் படிக்க: இது தமிழ்நாடா, வடநாடா? 52 பணியிடங்களுக்கு ஆயிரக்கணக்கானோர் குவிந்ததால் பரபரப்பு!!
இந்த நிகழ்ச்சி முழுவதும் உள்ளரங்கில் நடைபெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த, க்யூஆர் குறியீட்டுடன் கூடிய நுழைவு சீட்டு பெற்ற 2,000 பேர் மட்டுமே இதில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேறு யாருக்கும் அனுமதி வழங்கப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கரூர் கூட்ட நெரிசலைத் தொடர்ந்து நடைபெறும் முதல் மக்கள் சந்திப்பு என்பதால், நிகழ்ச்சிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளில் தமிழக வெற்றிக்கழகம் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. எந்தவொரு அசம்பாவிதமும் ஏற்படாத வகையில் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.