ரயில் பயணிகளின் கவனத்திற்கு.. தென்மாவட்ட ரயில் சேவையில் மாற்றம்!
Train Service Changes in Madurai: கொடைரோடு - சமயநல்லூர் இடையேயான பராமரிப்புப் பணிகளால், தென் மாவட்ட ரயில் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 27 முதல் 31 வரை பல ரயில்கள் திண்டுக்கல் வழியாக திருப்பி விடப்படுகின்றன. சில ரயில்கள் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி வழியாக திருச்சி செல்கின்றன.

தமிழ்நாடு, ஆகஸ்ட் 23: பராமரிப்பு பணி காரணமாக தென் மாவட்டங்களில் சில முக்கிய ரயில்களின் சேவையானது மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு அதுதொடர்பாக தகவல்களும் வெளியாகியுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய போக்குவரத்து துறையாக ரயில்வே நிர்வாகம் உள்ளது. மின்சார ரயில் தொடங்கி அதிவேகமாக செல்லக்கூடிய வந்தே பாரத் வரை பல்வேறு கட்டண விகிதங்களில் மக்களின் வசதிக்காக நாள்தோறும் லட்சக்கணக்கான சேவைகள் இயக்கப்படுகின்றன. கோடிக்கணக்கான மக்கள் ரயில்கள் மூலம் பயணப்பட்டு வருகின்றனர். குறைந்த கட்டணம், பாதுகாப்பு, நேர மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் மக்கள் ரயிலை முதன்மை பயண தேர்வாக குறிப்பிட காரணமாக அமைகிறது. இப்படியான ரயில்வே துறையில் சில நேரங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம்.
அப்படியான நேரத்தில் சம்பந்தப்பட்ட வழித்தடத்தில் செல்லக்கூடிய ரயில் சேவை ரத்து செய்யப்படும் அல்லது பயண நேரம் மாற்றியமைக்கப்படும். சில நேரங்களில் ரயில்கள் வேறு வழித்தடம் வழியாகவும் இயக்கப்படும். இப்படியான நிலையில் மதுரை ரயில்வே கோட்ட பகுதிக்கு உட்பட்ட கொடை ரோடு – சமயநல்லூர் வழித்தடத்தில் பராமரிப்பு பணி நடைபெறவுள்ளதால் தென்மாவட்டம் செல்லும் ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Also Read: பஸ் டூ ரயில் டிக்கெட்.. இனி அனைத்து ஒரே செயலியில்.. எப்போது அறிமுகம் தெரியுமா?




ரயில் பயணிகளின் கவனத்திற்கு
- அதன்படி வண்டி எண் 16845 ஈரோடு – செங்கோட்டை பாசஞ்சர் ரயில் வரும் ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 30ஆம் தேதி வரை திண்டுக்கல் ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படும். மறுமார்க்கத்தில் செங்கோட்டையிலிருந்து வரும் அந்த ரயில் ஆகஸ்ட் 28ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை திண்டுக்கல் ரயில் நிலையத்திலிருந்து ஈரோடு செல்லும்.
- இதற்கு பதிலாக ஒரு சிறப்பு கட்டண ரயில் திண்டுக்கல் ரயில் நிலையத்திலிருந்து ஈரோடு வரையிலும், மதுரையில் இருந்து செங்கோட்டை வரையிலும் இயக்கப்படும். இந்த சிறப்பு ரயில் செங்கோட்டையிலிருந்து ஒவ்வொரு நாளும் அதிகாலை 5.10 மணிக்கு புறப்பட்டு காலை 9:30 மணிக்கு மதுரை ரயில் நிலையம் வந்துடையும்.மறுமார்க்கத்தில் மதுரையிலிருந்து மாலை 6 மணிக்கு ரயில் புறப்பட்டு இரவு 10.30 மணிக்கு செங்கோட்டை சென்றடையும்.
Also Read: நடுவழியிலேயே சிக்கிய மோனோ ரயில்.. 100 பயணிகளின் கதி என்ன? மும்பையில் நடந்த சம்பவம்
- வண்டி எண் 16848 செங்கோட்டையிலிருந்து மதுரை வழியாக மயிலாடுதுறை வரை செல்லும் ரயில் ஆகஸ்ட் 28ஆம் தேதி முதல் 31ம் தேதி வரை விருதுநகரில் இருந்து அருப்புக்கோட்டை, காரைக்குடி வழியாக திருச்சி செல்லும். இந்த ரயிலானது அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, தேவகோட்டை ரோடு, காரைக்குடி, புதுக்கோட்டை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
- வண்டி என்16352 நாகர்கோவிலில் இருந்து மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் ஆகஸ்ட் 28 முதல் 31ஆம் தேதி வரை விருதுநகரில் இருந்து மானாமதுரை காரைக்குடி வழியாக திருச்சி செல்லும்.
- இதே போல் குருவாயூரிலிருந்து மதுரை வழியாக சென்னை செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் வண்டி எண் 16128 மேற்கண்ட தேதிகளில் விருதுநகரில் இருந்து மானாமதுரை காரைக்குடி வழியாக திருச்சி செல்லும்.
- அதேபோல் கன்னியாகுமரி – ஹவுரா வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் வண்டி எண் 12666 ஆகஸ்ட் 30ம் தேதி இதே வழித்தடத்தில் பயணிக்கும். தொடர்ந்து வண்டி எண் 07229 கன்னியாகுமரி – ஹைதராபாத் வாராந்திர சிறப்பு ரயில் ஆகஸ்ட் 29ஆம் தேதி இந்த வழித்தடத்தில் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் தங்கள் பயணத்தை திட்டமிட்டு கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.