ஊட்டி போறீங்களா? 5 நாட்களுக்கு போக்குவரத்து கட்டுப்பாடுகள்.. சுற்றுலா பயணிகளுக்கு அறிவிப்பு
Nilgiris Traffic Diversion : நீலகிரி மாவட்டத்தில் 2025 அக்டோர் 1ஆம் தேதியான இன்று முதல் ஐந்து நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தொடர் விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையொட்டி, போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நீலகிரி
நீலகிரி, அக்டோபர் 01 : நீலகிரி மாவட்டத்தில் தொடர் விடுமுறையை முன்னிட்டு ஐந்து நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த போக்குவரத்து மாற்றம் 2025 அக்டோபர் 1ஆம் தேதி முதல் அக்டோபர் 5ஆம் தேதி நடைமுறையில் இருக்கும் என போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. நீலகிரி மாவட்டம் சுற்றுலாவுக்கு பெயர் பெற்றது. நீலகிரி மாவட்டத்திற்கு வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். சுற்றுலா பயணிகளின் அதிகரிப்பை தொடர்ந்து, மாவட்ட நிர்வாகமும் அதற்கேற்ப வசதிகளையும் செய்து வருகிறது. குறிப்பாக பண்டிகை நாட்கள், தொடர் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதும். தற்போது, ஆயுத பூஜை, விஜயதசமி என தொடர் விடுமுறை வருவதால், நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், 2025 அக்டோபர் 1ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை நீலகிரியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து நீலகிரி காவல்துறை வெளியிட்ட அறிவிப்பில், நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், அக்டோபர் 1 முதல் 5 வரை மாவட்டம் முழுவதும் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. உதகமண்டலத்திலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும் கோத்தகிரி சாலை வழியாகத் திருப்பி விடப்படும்.
Also Read: தமிழ்நாட்டில் அக்டோபர் 3ம் தேதி விடுமுறையா? – உண்மை இதுதான்!
நீலகிரியில் 5 நாட்களுக்கு போக்குவரத்து கட்டுப்பாடுகள்
குன்னூர் வழியாக உதகமண்டலம் அடையும் தனியார் பேருந்துகள் மற்றும் வேன்கள் தலையாட்டிமண்டலத்தில் உள்ள ஆவின் சந்திப்பில் நிறுத்தப்படும். சுற்றுலாப் பயணிகள் நகரத்திற்குள் உள்ள சுற்றுலாத் தலங்களைக் காண பேருந்துகளில் செல்ல வேண்டும். இதேபோல், கூடலூரிலிருந்து வரும் தனியார் பேருந்துகள் HPF பகுதியில் நிறுத்தப்படும்.
கோத்தகிரியிலிருந்து வரும் பேருந்துகள் தொட்டபெட்டாவிலும் நிறுத்தப்படும். சுற்றுலாப் பயணிகள் சுற்றுலா தலங்களுக்கு சர்க்யூட் பேருந்துகளில் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். உதகமண்டலம், குன்னூர் மற்றும் கூடலூருக்குள் காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read : ஐஏஎஸ் படிக்க வைக்க உதவி.. பேராசிரியரிடம் ரூ.80 லட்சம் மோசடி செய்த பெண்!
அதே நேரத்தில் நீலகிரிக்கு வரும் அனைத்து வாகனங்களுக்கு இ பாஸ் கட்டாயம். எனவே, சனி, ஞாயிறு கிழமைகளில் 8000 வாகனங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படியே மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே, ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மேற்கொண்ட போக்குவரத்து வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.