நீலகிரிக்கு சுற்றுலா போறீங்களா? இந்த ரூட்ல போக முடியாது.. போலீசாரின் புதிய டிராப்பிக் ரூல்ஸ் இதோ!
Nilgiris Traffic Changes : நீலகிரி மாவட்டத்தில் அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் சுற்றி பார்க்க வருவதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மே 1- ஆம் தேதி முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக மாவட்ட காவல் துறை தெரிவித்துள்ளது.

நீலகிரியி போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு
தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், சுற்றுலா தலங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். அந்த வகையில், நீலகிரி மாவட்டம், ஊட்டியில் கோடைகால சீசன் தொடங்கியுள்ளது. இங்கு, பொழுதை போக்குவதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். இதனால், போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக வருகிற மே 1- ஆம் தேதி முதல் நீலகிரியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு வரும் பைக், கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் காட்டேரி சந்திப்பு பகுதியில் இருந்து சேலாஸ் மற்றும் லவ்டேல் வழியாக நீலகிரி நகரப் பகுதிக்குள் வர வேண்டும். இதே போல, மேட்டுப்பாளையத்தில் இருந்து கூடலூர் மற்றும் தெப்பக்காடு செல்லும் பைக், கார் உள்ளிட்ட வாகனங்கள் லவ்டேல் சந்திப்பு மற்றும் காந்தன் முக்கோணம் வழியாக திருப்பி விடப்பட உள்ளது.
நீலகிரிக்கு சுற்றுலா வரும் வாகனங்கள்
நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா வரும் சுற்றுலா வேன்கள், சுற்றுலா பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் ஆவின் வாகன நிறுத்தும் இடம் மற்றும் அரசு கலைக் கல்லூரி மைதானங்களில் நிறுத்த வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. அங்கு இருந்து சுற்றுலா தலங்களுக்கு செல்வதற்கு அரசு சுற்றுலா பேருந்துகளை சுற்றுலா பயணிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதில், குறிப்பாக ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் அனைத்து சுற்றுலா வாகனங்களும் கோத்தகிரி வழியாக மட்டுமே செல்ல அனுமதிக்கப்படும். குன்னூர் பர்லியார் வழியாக செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: உஷார் மக்களே! ரசாயன மாம்பழங்களுக்கு இனி இடமில்லை – ரூ.5000 அபராதத்துடன் உரிமம் ரத்து!
அத்தியாவசிய பொருள்கள் கொண்டு செல்லும் வாகனங்கள்
மேலும், அத்தியாவசிய பொருள்களான பால், எரிவாயு உள்ளிட்ட பொருள்களை கொண்டு வரும் வாகனங்கள் தவிர்த்து பிற கனரக வாகனங்கள் அனைத்தும் காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை ஊட்டி நகருக்குள் வருவதற்கு அனுமதி கிடையாது என நீலகிரி மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தல் காரணமாக முன்கூட்டியே கோடை விடுமுறை விடப்பட்ட காரணத்தால் ஏராளமான சுற்றுலா பயணிகள் நீலகிரியில் குவிந்துள்ளனர்.
நிலகிரியில் குவிந்துள்ள சுற்றுலா வாகனங்கள்
இதனால், நீலகிரி உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. மேலும், அவர்களது சுற்றுலா வாகனங்களும் சாலைகளில் சென்று வருவதும், ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே, போக்குவரத்து நெரிசலை கட்டுக்குள் வைப்பதற்காக மே 1- ஆம் தேதி முதல் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க: நாளை முதல் தமிழகத்தில் கொட்டப்போகும் மழை.. வெயிலின் தாக்கம் எப்படி இருக்கும்? வானிலை ரிப்போர்ட் இதோ..