TN HSE+2 Result 2025: வெளியாகிறது பிளஸ் 2 தேர்வு முடிவுகள் – ரிசல்ட்டை எப்படி பார்ப்பது?
Tamil Nadu Board Class 12 Result 2025 : தமிழ்நாட்டில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 8 ஆம் தேதி காலை 9 மணிக்கு வெளியாகிறது. மாணவர்களின் எதிர்காலத்தை முடிவும் செய்யும் தேர்வு முடிவுகள் என்பதால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் (Tamil Nadu) 12 ஆம் வகுப்பு (Plus 2 Exam Results) தேர்வு முடிவுகளை தமிழக அரசு பொதுத்தேர்வு இயக்ககம் மே 8, 2025, காலை 9 மணிக்கு வெளியிட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் மாணவ, மாணவிகள், தனித்தேர்வகர்கள் என கிட்டத்தட்ட 8 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதியுள்ளதாக கூறப்படுகிறது. கல்லூரியில் என்ன துறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் மற்றும் அவர்கள் படிக்க விரும்பும் கல்லூரிகள் என எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தேர்வு முடிவுகள் என்பதால் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
தேர்வு முடிவுகளை எப்படி பார்ப்பது?
தேர்வெழுதிய மாணவர்கள் தங்களது முடிவுகளை dge.tn.gov.in மற்றும் tnresults.nic.in என்ற அதிகாரப்பூர்வ வலைதளங்களில் காணலாம். தங்களது பதிவு எண் (Registration Number) மற்றும் பிறந்த தேதி (Date of Birth) ஆகியவற்றை பதிவு செய்வதன் மூலம், மாணவர்கள் தங்களது மதிப்பெண்களை எளிதில் பார்வையிடலாம். முடிவுகள் பள்ளிகளிலும் வெளியிடப்படும். தேர்வு முடிவுகளை அரசு இணையதளங்களான dge.tn.gov.in, tnresults.nic.in மூலம் தெரிந்து கொள்ளலாம். மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் மற்றும் நூலகங்கள் ஆகிய இடங்களிலும் முடிவுகள் காண வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மாணவர்கள் தங்களது அசல் மதிப்பெண் சான்றிதழ்களை (Original Marksheet) சில நாட்களுக்குப் பிறகு தங்கள் பள்ளிகளில் நேரில் சென்று பெற்றுக் கொள்ள வேண்டும். கூடுதலான தேர்வுகள் தொடர்பான விவரங்கள், முடிவுகள் வெளியான பிறகு அறிவிக்கப்படும்.
தமிழக அரசு வெளியிட்ட தகவல் மைய எண்
மேலும் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில் மாணவர்களின் உயர்கல்விக்கு வழிகாட்டும் வகையில் 14417 என்ற தகவல் மைய எண்ணை தமிழக அரசு அறிவித்துள்ளது. எந்தக் கல்லூரியில் படிக்கலாம், எவ்வாறு கல்லூரிகளுக்கு விண்ணப்பிப்பது, கல்விக் கட்டணம், உதவித் தொகை போன்ற தகவல்களை பெறலாம். தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களும் துணைத்தேர்வு போன்ற தகவல்களையும் பெறலாம்.
கல்லூரிகளை எப்படி தேர்ந்தெடுப்பது?
முதலில் நீங்கள் எந்த பாடப்பிரிவில் படிக்க விரும்புகிறீர்கள் என்பதை தெளிவாகத் தீர்மானிக்க வேண்டும். இதனையடுத்து அதற்கேற்ற சிறந்த கல்லூரிகள் விசாரித்து தெரிந்துகொள்ள வேண்டும். குறிப்பாக AICTE, UGC போன்ற நிறுவனங்களின் அங்கீகாரம் பெற்றதா என்பதை சரிபாருங்கள். மாநில மற்றும் தேசிய தரவரிசையில் அந்த கல்லூரி எங்குள்ளது என்பதையும் கவனிக்க வேண்டும். கடந்த வருடங்களின் தேர்ச்சி விகிதம், பிளேஸ்மென்ட் சாதனைகள், அங்கு படிக்கும் மாணவர்களின் கருத்துகள் போன்றவை நல்ல கல்லூரியின் அடையாளமாகும்.
உங்கள் வாழ்க்கை மிக விலைமதிப்பற்றது. ஒரு தேர்வு என்பது அதன் ஒரு சிறு பகுதி மட்டுமே. அதனால் நீங்கள் நினைத்த ரிசல்ட் கிடைக்கவில்லை என்றால் வருத்தப்படாமல் அடுத்த என்ன செய்வது என்பது குறித்து சிந்திக்க வேண்டும். இந்த தருணத்தில் உதவிதேவைப்படுமெனில், பெற்றோரிடமோ அல்லது ஆசிரியரிடமோ தயங்காமல் உதவியை நாடி அடுத்து என்ன செய்வது என்பது குறித்து விவாதிக்க வேண்டும்.