திருப்பரங்குன்றம் தர்காவில் பக்ரீத்-ரமலான் பண்டிகையில் மட்டுமே தொழுகை நடத்த அனுமதி…உச்சநீதிமன்றம் போட்ட உத்தரவு!
Thiruparankundram Dargah: திருப்பரங்குன்றம் மலை மீது அமைந்துள்ள சிக்கந்தர் பாதுஷா தர்காவில் இந்த இரு பண்டிகைகளின் போது மட்டுமே தொழுகை நடத்த அனுமதி அளிக்கப்படும் என்று உயர்நீதிமன்றத்தின் உத்தரவை உச்சநீதிமன்றம் உறுதி படுத்தி உள்ளது. இதுதொடர்பான மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

திருப்பரங்குன்றம் தர்காவில் பக்ரீத்-ரமலானில் மட்டுமே தொழுகை
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தில் அமைந்துள்ள மலையின் மீது உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக பிரச்சனை எழுந்தது. இதைத் தொடர்ந்து, மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு அதில் தீபம் ஏற்றுவதற்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, 2 நீதிபதிகள் கொண்ட அமர்வில் எதிர்மனுதாரர் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டு அதிலும் தீபம் ஏற்றுவதற்கு சாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தர்காவில் அனைத்து நாட்களிலும் தொழுகை நடத்துவதற்கு அனுமதி கோரி நெல்லித்தோப்பு பகுதியைச் சேர்ந்த எம். இமான் உசேன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவானது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி. பி. வரலே, அரவிந்த் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நெல்லித்தோப்பு பகுதி இஸ்லாமியர்களுக்கு சொந்தமானதாக உள்ளது.
அனைத்து நாள்களிலும் தொழுகை நடத்த அனுமதி
எனவே, அங்கு தொழுகை நடத்த அனுமதி மறப்பது ஏற்புடையது கிடையாது. அந்தப் பகுதியில் தொழுகை நடத்துவதால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படாது எனவும் தங்களது தரப்பு வாதத்தை முன் வைத்தார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், பக்ரீத் மற்றும் ரமலான் போன்ற சிறப்பு நாட்களில் மட்டுமே தொழுகை நடத்த வரையறுக்கப்பட்ட உரிமைகள் உள்ளதாக உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
மேலும் படிக்க: ரயில் திட்டங்கள் தாமதத்திற்கு தமிழக அரசே காரணம்: முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் பதில்
மேல்முறையீட்டு மனு தள்ளுபடி
மேலும், திருப்பரங்குன்றம் மலை மீது இஸ்லாமியர்கள் பண்டிகையின் போது, விலங்குகளை பலியிடுவதற்கு உத்தரவிட முடியாது என்ற உயர்நீதிமன்றத்தின் உத்தரவையும் உறுதி செய்ததுடன், இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு மத்தியஸ்தமாக இருப்பதால், இதில் தலையிட விரும்பவில்லை என கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இடையூரின்றி நடைபெற்ற சந்தன கூடு ஊர்வலம்
திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீப தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் மதுரை உயர்நீதிமன்றம் தீபம் ஏற்றுவதற்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியிருந்தது. இதை தொடர்ந்து, வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் பாதுஷா தர்காவில் சந்தனக்கூடு ஊர்வலம் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அதன்படி, சந்தனக்கூடு திருவிழா கோடி ஏற்றப்பட்டு விழா நடைபெற்றது.
இரு சமூகத்துக்கும் பாதிப்பில்லாத உத்தரவு
இந்த நிலையில், அனைத்து நாட்களிலும் தர்காவில் தொழுகை நடத்த அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ததுடன், இரு சமுதாய மக்களும் பாதிக்கப்படாத வகையில் சென்னை உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: பிப்ரவரி 13 வரை தமிழகத்தின் 14 மாவட்டங்களின் கடும் பனி மூட்டம் நிலவும்.. சென்னை வானிலை ஆய்வு மையம்!