திருப்பரங்குன்றம் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய தமிழக அரசு முடிவு!!
Thiruparankundram case: தற்போது நீதியரசர்கள் திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற வேண்டும் என தீர்ப்பளித்துள்ளனர். நீதிமன்றத் தீர்ப்பை நாம் விமர்சிக்க முடியாது; அதைக் குறைத்து பேசவும் முடியாது. ஆனால், இந்த தீர்ப்பு சட்ட விதிகளுக்கு எதிரானது என்ற அடிப்படையில், அதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை அணுகுவது எங்களது உரிமையாகும்.
சென்னை, ஜனவரி 06: திருப்பரங்குன்றம் மலையில் அமைந்துள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற உயர் நீதிமன்ற மதுரைக்கிளையின் தீர்ப்பை எதிர்த்து, தமிழக அரசும் இந்து சமய அறநிலையத் துறையும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக தமிழக அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவை உறுதிப்படுத்தும் வகையில் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு பரபரப்பு தீர்ப்பை வழங்கி உள்ளது. அதோடு, திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் காரணங்களை அடிப்படையாகக் கொண்டு தமிழக அரசு செயல் பட்டுள்ளதாகவும், திருப்பரங்குன்றத்தில் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் நிலை உருவாகினால் அதற்கு தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் படிக்க: திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றலாம்… மதுரை அமர்வு பரபரப்பு தீர்ப்பு!
தீபத் தூணில் தீபம் ஏற்றும் வழக்கம் இல்லை:
இந்நிலையில், உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தீர்ப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி கூறியதாவது, திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கலாம் என மதுரை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, மாவட்ட ஆட்சித் தலைவர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தனர். தமிழ்நாட்டில் இதுவரை திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்றும் வழக்கம் இல்லை. தமிழ்நாட்டின் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை நாம் பின்பற்ற வேண்டும். ஒரு செயலை அனுமதிக்க முன்னுதாரணங்கள் அவசியம். அந்த அடிப்படையில், திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்கக் கூடாது என மனுதாரர்கள் வாதிட்டனர்.
பொதுமக்களுக்கு மட்டும் தடை:
ஆனால், நீதியரசர்கள் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் அறநிலையத் துறை அதிகாரிகள் மற்றும் சிலர் சென்று, பொதுமக்களுக்கு மட்டும் தடை விதித்து தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். இது சட்டத்திற்கு முரண்பட்டதாகும். எனவே, இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசும் இந்து சமய அறநிலையத் துறையும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளன. திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்றியதற்கான உறுதியான ஆதாரங்கள் இருந்தால், அவற்றை கண்டறிந்து அதன் அடிப்படையில் அனுமதி வழங்க வேண்டும் என்பதே நீதிமன்றத்தின் நிலைப்பாடாக இருக்க வேண்டும். ஆனால், இதுவரை அத்தகைய ஆதாரங்கள் எதுவும் இல்லை.
உச்சநீதிமன்றத்தை அணுகுவது எங்கள் உரிமை:
இந்நிலையில், தற்போது நீதியரசர்கள் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என தீர்ப்பளித்துள்ளனர். நீதிமன்றத் தீர்ப்பை நாம் விமர்சிக்க முடியாது; அதைக் குறைத்து பேசவும் முடியாது. ஆனால், இந்த தீர்ப்பு சட்ட விதிகளுக்கு எதிரானது என்ற அடிப்படையில், அதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை அணுகுவது எங்களது உரிமையாகும். தமிழர்களின் கலாச்சாரமும், பாரம்பரியமும் பாதுகாக்கப்பட வேண்டும். யாரோ ஒருவர் அனுமதி கேட்டார் என்பதற்காக, அதனை வழங்குவது முறையல்ல. இதுவரை இல்லாத ஒரு வழக்கத்தை, நீதிமன்ற தீர்ப்பின் மூலம் அறிமுகப்படுத்துவது உள்நோக்கம் கொண்டதாக தோன்றுகிறது. அதனால் தான் இதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்.
இதையும் படிக்க: ஜன.9ல் “உங்க கனவை சொல்லுங்க” புதிய திட்டம் தொடக்கம்.. அமைச்சர் அன்பில் மகேஷ்
இந்த நடவடிக்கை தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிரானதாக உள்ளது. இல்லாத ஒரு பழக்கத்தை நீதிமன்றம் ஏன் கட்டாயப்படுத்த வேண்டும் என்பதே தமிழ்நாட்டு மக்களின் கேள்வியாக உள்ளது. ஒருசாரார் இதில் தலையிட்டு குழப்பம் ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் தெரிகிறது. எனவே, இந்த தீர்ப்பை அனுமதிக்கக் கூடாது என்பதற்காக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய எங்களுக்கு முழு உரிமை உள்ளது என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.