ரூ.45 கோடி மோசடி புகார்.. திருமலா பால் நிறுவன மேலாளர் தற்கொலை: வெளியான தகவல்கள்!
Chennai Crime: திருமலா பால் நிறுவனத்தில் ரூ.45 கோடி மோசடி நடந்ததாக மேலாளர் நவீன் மீது புகார் அளிக்கப்பட்டது. போலீசாரின் அழைப்புக்கு பின்னர் மன உளைச்சலில் அவர் தற்கொலை செய்துகொண்டார். போலீசார் தொடர்பு உண்டா என சந்தேகம் எழ, சிபிசிஐடி விசாரணை கோரப்பட்டது. எனினும் போலீசார் இதுகுறித்து மறுப்பு தெரிவித்துள்ளனர்.

சென்னை ஜூலை 11: திருமலா பால் நிறுவன மேலாளர் (Tirumala Milk Company Manager) நவீன் பொலினேனி (Naveen Polineni) 45 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து சென்னை போலீசார் விசாரணைக்கு அழைத்தபோது, மனஉளைச்சலில் அவர் தற்கொலை செய்துகொண்டார். நவீன், சென்னை புழலில் உள்ள வீட்டில் மின் விசிறியில் தூக்குப்போட்டு உயிரை மாய்த்துக்கொண்டார். அவரது தற்கொலைக்கு காவல்துறை தொடர்பு உள்ளதா என்ற சந்தேகம் எழுந்ததால் சிபிசிஐடி விசாரணை (CBCID investigation) கோரப்பட்டது. காவல்துறை, தற்கொலைக்கு முன்னர் நவீனை விசாரணைக்கு அழைக்கவில்லை என்றும், அவர் மீது சீரான விசாரணை நடந்ததாகவும் விளக்கம் அளித்துள்ளது. மின்னஞ்சலில் எந்த குற்றச்சாட்டும் இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருமலா பால் நிறுவனத்தில் ரூ.40 கோடி மோசடி
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தைச் சேர்ந்த நவீன் பொலினேனி சென்னை புழல் அருகே வசித்து வந்தவர். இவர், திருமலா பால் நிறுவனத்தில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேல் மேலாளராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், வருடாந்திர நிதிக் கணக்குகளை சமர்ப்பிக்கும் போதே நவீன் ரூ.45 கோடியை கையாடல் செய்திருப்பது நிறுவத்தின் உயர் அதிகாரிகளுக்குத் தெரியவந்தது. இதையடுத்து, திரும்பக் கோரி முயற்சி செய்யப்பட்ட போதும் அவர் ஒத்துழையவில்லை. இதுகுறித்து சென்னை கொளத்தூர் துணை ஆணையர் அலுவலகத்தில் பால் நிறுவனம் புகார் பதிவு செய்தது.
வீட்டில் தற்கொலை செய்து கொண்ட நவீன் பொலினேனி
புகாரை தொடர்ந்து, நவீனுக்கு போலீசார் விசாரணைக்காக அழைப்பு விடுத்தனர். அதற்கு, “நாளை வருகிறேன், பணத்தையும் திருப்பி கொடுப்பேன்” என்று கூறிய பின்னர், அவர் மொபைல் எண்ணை அணைத்துவிட்டதாக கூறப்படுகிறது. வழக்குப் பற்றி போலீசாருக்கு தகவல் சென்றுவிட்டதை உணர்ந்த நவீன், போலீசார் கைது செய்யக்கூடும் என்ற பயத்தில் மன உளைச்சலுக்கு ஆளானதாக கூறப்படுகிறது. இதையடுத்து, புழலில் உள்ள தனது வீட்டில் மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.




நவீனின் தற்கொலை செய்தி தெரியவந்ததும், புழல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கம், “தற்கொலைக்கு காவல்துறையின் தாக்கம் காரணமாக இருக்கலாம்” என்ற சந்தேகத்தைக் கிளப்பி, சிபிசிஐடி விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
Also Read: மீனவர்களின் படகுகளில் “தமிழக வெற்றிக் கழகம்” என எழுதியதற்காக மானியம் மறுப்பு? – விஜய் கண்டனம்
தமிழக காவல்துறை விளக்கம்
இந்நிலையில், தமிழக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. திருமலா பால் நிறுவனத்தின் சட்ட மேலாளர், சென்னை மத்திய குற்றப் பிரிவில் ரூ.40 கோடி மோசடியின் பேரில் நவீன் மீது புகார் அளித்ததாகவும், விசாரணைக்காக மனுதாரர் ஆவணங்கள், வங்கிக் கணக்குகள் ஆகியவை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை இன்னும் முக்கிய தரவுகள் அளிக்கப்படாத காரணத்தால் விசாரணை தொடரவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
மேலும், நவீன் தற்கொலைக்கு முன்னதாக நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தும், அவரது கோரிக்கையின்பேரில் இரண்டு முறை விசாரணை ஒத்திவைக்கப்பட்டது என்றும் கூறப்பட்டுள்ளது.
காவல்துறை மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்படவில்லை
நவீன் தனது சகோதரிக்கும், திருமலா பால் நிறுவன மின்னஞ்சல் முகவரிக்கும் தற்கொலைக்கு முன் செய்தி அனுப்பியுள்ளார். அந்த மின்னஞ்சலில் காவல்துறை மீது குற்றச்சாட்டு ஏதும் முன்வைக்கப்படவில்லை என்றும், தற்போது கொளத்தூர் துணை ஆணையரின் அறிக்கையின் அடிப்படையில், சம்பவம் தொடர்பாக மேற்கு மண்டல இணை ஆணையர் வழிகாட்டுதலின்படி விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 2464 0050 (24 மணி நேரம்)